Tuesday, September 13, 2011

மனதுக்கு திருதியான மங்களகரமான மண வாழ்க்கை அமைந்திட - பரிகார ஸ்தலங்கள்


மனதுக்கு திருதியான மங்களகரமான மண வாழ்க்கை அமைந்திட - பரிகார ஸ்தலங்கள்

Posted On Sep 14,2011,By Muthukumar

திருமணம் ஆனவர்களுக்கு சில கவலைகள். ஆகாதவர்களுக்கு ஆகவில்லையே என்ற கவலை. நல்ல விதத்தில் திருமணம் நடைபெற, குடும்பம் விருத்தி அடைய, செல்வமும், புகழும் , அறிவும் மிக்க நல்லதொரு சந்ததி அமைந்திட - கீர்த்தி பெற்ற கும்பகோணத்தின் அருகில் இருக்கும் சில ஆலயங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

விரைவில் திருமணம் கைகூட காசி விஸ்வநாதர் கோயில் "நவ கன்னியர் வழிபாடு"

நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மல்ர்கள், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர்.  கும்பகோண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள " மகாமக " குளக்கரையில் உள்ளது இத் திருத்தலம்.
மாங்கல்ய பலம் அருளும் பஞ்ச மங்கள சேத்ரமாம் " திருமங்கலக்குடி "
பஞ்ச மங்கள ஷேத்திரம் எனப்படும் இத் தலம் நவக்கிரக நாயகர்களின் தோஷத்தையே நீக்கிய தலம். இத் தல நாயகி, தன் பக்தையின் துயர் துடைக்க, இறந்த அவளது கனவனை உயிர்ப்பித்து தந்ததால், " மாங்கல்ய பலம் " அருளும் நாயகியாக வணங்கப்படுகிறாள். தீரா நோய் தீர்க்கும் திருத் தலம் இது. கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர், இத் தலம் வந்து, வெள்ளெருக்கு இலையில், தயிர் சாதத்தை நைவேத்யம் செய்து, அப் பிரசாதத்தை உண்ண, கடும் நோய்கள் யாவும் நீங்கும். இத் திருத்தலம், கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், சூரியனார் கோயிலின் அருகாமையில் அமைந்துள்ளது.

மாங்கல்யப் பேறு தரும் " கருவிலி கொட்டிட்டை சர்வாங்க சுந்தரி "

தட்ச யாகத்தின் போது, தாட்சாயினியை பிரிந்த ஈசன், இத் தலம் வந்தடைந்தான். ஈசனை மீண்டும் அடைய வேண்டி, அம்மையும் இங்கே வந்தடைந்தாள். அப்பனும், அம்மையும் இணைந்த இத் திருக்கோயில், திருமணம் கை கூடுவதற்கும், மாங்கல்ய பேறு நீடிப்பதற்க்கும் வழிபடப்படுகிறது. இது பிறப்பை அறுத்து மோட்சம் அருளும் தலமாதலால், " கருவிலி " என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், எம பயம் நீங்கும். இத் தலத்தை தரிசிப்பது, கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்த பலன் அருளும் கும்பகோணம் - பூந்தோட்டம் சாலையில், நாச்சியார் கோயில் வழியில், சுமார் 19 கி.மீ தொலைவில் கூந்தலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இத் திருத்தலம்.

திருமணம், மகப் பேறு, சுகப் பிரசவம் அருளும் " திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை "

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள்.

நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள். கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது இத் திருக்கோயில். 

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் "

முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

திருமணத் தடைகள் நீக்கும் சார்ங்கபாணி கோயிலின் " கோமலவல்லி " நாச்சியார் "
சார்ங்கபாணி திருக்கோயிலின் நாச்சியார் " கோமலவல்லி " தனிச் சிறப்பு கொண்டவர். தாயாரின் அவதாரத் தலம் இது என்பதால், இங்கு நாச்சியாருக்கே முதல் மரியாதை. தாயாரை வழிபட்ட பின்னரே மாலவனை வணங்க வேண்டும். இத் தாயாருக்கு, தங்கள் வசதிக்கேற்ப புடவை சார்த்தி, திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் திருமணாமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மன வேறுபட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர், கருத்தொருமித்து ஒன்று சேர்வர். வழிபடும் சுமங்கலிப் பெண்களின் " மாங்கல்ய பலம் " பெருகும். தடை பட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது இத் திருத்தலம். 
திருமணத் தடை அகற்றும் " திருப்புறம்பியம் ஸ்ரீ குகாம்பிகை"
பிரளயம் காத்த விநாயகர் வீற்றிருக்கும் திருப்புறம்பியத்தில் உள்ள " ஸ்ரீகுகாம்பிகை " சந்நதி மிகச் சிறப்பானது. குழந்தை வடிவு கொண்ட ஆறுமுகனை, தன் இடையில் தாங்கி நிற்கும் இந்த அம்பிகைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. தடை பட்டு கொண்டிருக்கும் திருமணங்கள் இனிதே நடைபெறவும், கருவுற்ற பெண்களது பிரசவம், சுகமாக அமைந்திடவும், வேண்டுவோர்க்கு அருள் புரிகிறாள் இந்த் அம்பிகை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற இத் திருத்தலம்.

விவாகத் தடைகள் அகற்றும் " திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் "


"புன் நாகம்" என்ற பாம்புக்கு பெருமாள் காட்சி தந்த இத் திருத்தலம், ராகு மற்றும் சர்ப தோஷங்கள் நீக்கும் பரிகார நிவர்த்தி தலமாக விளங்குகிறது. " மண்ணிற்கு தென்பால் நின்ற திருமாலே " என்று திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற இத் தல வரதராஜ பெருமாளை வணங்கினால், திருமண தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும்.   வேறெங்குமில்லாத வண்ணம், இத் தலத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடையில் கிழக்குக் நோக்கி, தனது வலது காலை ஓரடி முன் வைத்து பெருமானை வணங்கும் பக்தர்களுக்கு உதவ தயாராக உள்ளது போன்று காட்சி தருகிறார் " பால ஆஞ்சநேயர் ". 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்த்லம் கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பூமாதேவி சமேத " ஆதி வராகப் பெருமாள் " 

தன் இடப் பக்க தொடையில் பூமா தேவியை கொண்டு காட்ச் தரும் " ஆதி வராகப் பெருமாள் ", பூமி சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர். ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில், நெய் விளக்கேற்றி வணங்கி, சகஸ்ரநாமம் செய்து, அன்ன தானம் அளித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். வழிபடுவோருக்கு புத்திர பாகியம் கிடைக்கும்.  இத் திருத்தலம், கும்பகோணத்தின் மையப் பகுதியில், சக்கரபாணி கோயிலின் அருகில் உள்ளது.

மணம் போல் மணாளன் அமைந்திட


கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் அருகிலுள்ள "நிறம் மாறும் லிங்க திருமேனி கொண்ட திருநல்லூர்" 

திருமணத் தடைகள் அகன்றிட 

கும்பகோணம் திருப்பனந்தாளை அடுத்து அமைந்துள்ள ஆதி குரு வீற்றிருக்கும் " திருலோகி சுந்தரேஸ்வரர் " 

திருமணத் தடை நீங்கி புத்திர பாக்கியம் பெற்றிட 

திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் தனி மணடபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் "சோமஸ்கந்தர்" 

தடை படும் திருமணம் இனிதே நடைபெற

கும்பகோணத்தில் அமையப்பெற்ற "குரு பரிகார தலமான ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி " 

திருமணத் தடைகள் நீங்க
  
கும்பகோணத்தில் அமைந்துள்ள " ராகு பரிகார தலமான - திரு நாகேஸ்வரம் ராகு பகவான் "  
   

No comments:

Post a Comment