Monday, September 12, 2011

பகவானை காண வேண்டுமா?

பகவானை காண வேண்டுமா?

-
மனம் அலையக் கூடியது; ஒன்றிலேயே பற்றி
இருப்பதில்லை. இப்படிப்பட்ட மனதை
ஒருநிலைப்படுத்தி, பக்தி மூலம் பகவானை
காணலாம்.
பூவின் பக்கம் வந்தால் தான் அதன் மணத்தை
அறிய முடியும்; தூரத்தில் இருப்பவர்களுக்கு
அதன் மணம் தெரியாது.
அதே போல, இறைவன் எங்கும் நிறைந்துள்ளான்
என்றாலும், பகவானை மறந்து, சம்சார சாகரத்தில்
உழல்பவர்களால் அவனை அறிந்து கொள்ள
முடிவதில்லை.
அஞ்ஞானிக்கு பரமாத்மா பிரபஞ்சமாக தெரிகிறது;
ஞானிக்கு பிரபஞ்சம் முழுவதுமே பரமாத்மாவாக
தெரிகிறது. ஞானியின் மனம் சஞ்சலமற்று நிற்பதால்,
அதில் பரமாத்மா சொரூபம் தெரிகிறது.
முகம் பார்க்கும் கண்ணாடி மேடு, பள்ளமின்றி
சுத்தமாக இருந்தால் தான், கண்ணாடியில் முகம்
நன்றாக தெரியும்; இல்லையேல், முகம் கோணலாகவும்,
மங்கலாகவும் தெரியும். இது முகத்தின் குறைபாடல்ல;
கண்ணாடியில் உள்ள குறைபாடு.
அதுபோல் மனம் நிர்மலமாக இருந்தால், இறைவனை
காண முடியும்.
சிவவாக்கியர் என்ற சித்தர், “கண்ணை மூடினால்
பகவான் தெரிகிறார்…’ என்றார். “அதெப்படி? நாங்கள்
கண்ணை மூடினால், ஒரே இருட்டாகத் தானே தெரிகிறது.
உங்களுக்கு மட்டும் எப்படி பகவான் தெரிகிறார்?’ என்று
கேட்டாராம் ஒருவர்.
அதற்கு அவர், “நான் எத்தனை ஜென்மாக்களில்,
எத்தனை ஆலயங்களை சுற்றி, சுற்றி வந்திருப்பேன்.
எத்தனை முறை பகவான் நாமாவை சொல்லி, சொல்லி
வழிபட்டிருப்பேன்… அந்த புண்ணியம் இந்த ஜென்மாவில்
கண்ணை மூடினால், பகவான் தெரிகிறார்…’ என்றாராம்.
அதனால், மனம் பகவானிடம் லயித்து விட்டால் பிறகு
எதுவுமே தெரியாது; எதுவுமே தேவையிராது. சதா காலமும்
பகவானை தங்கள் இதயத்தில் காண்பதால், பிற விஷயங்களை
கவனிப்பதில்லை யோகிகள்.இந்த உலகம் தான் உயர்ந்தது;
இதை விட உயர்ந்தது வேறு ஒன்றுமில்லை என்று எண்ணி,
பகவானிடம் பற்று வைக்காதவன் திரும்ப, திரும்ப பிறவி
எடுக்கிறான்; திரும்ப, திரும்ப மரணமடைகிறான்.
இந்திரியங்களுக்கு வசப்பட்டவன், பிறவிப் பெருங்கடலில்
விழுந்து உழல்கிறான். இந்த நிலையை விட்டொழிக்க வேண்டும்.

No comments:

Post a Comment