Sunday, September 18, 2011

உஙகள் முன்னோர்களிடமிருந்து ஒரு அன்பு கடிதம்! விருட்சமாக வளர்ந்து நில்... !




உஙகள் முன்னோர்களிடமிருந்து ஒரு அன்பு கடிதம்! விருட்சமாக வளர்ந்து நில்... ! 

 Sep 18, 2011

 
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTNFdeOLMh1qNX0Pa_y_DURCBOgVHzWcQ_x3I-L_qfpKHsrs19Fpg
மனிதனாக பிறந்து  இன்ப துன்பங்களில் உழன்று - அவரவரது பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப , நல்லது கெட்டதை அனுபவித்து - மீண்டும் செய்யும் செயல்களால் - கர்மக்கணக்கை புதுப்பித்து - மறு பிறவி எடுக்கிறது ஆத்மா - என்று நம் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. 

ஆனால் , நாம் தான் அறிவு ஜீவிகளாயிற்றே. நமக்கு,  நாம் ஒன்றை அனுபவித்து உணராதவரை, எதையும் நம்பத் தயாராயில்லை. சரி, கருவில் புகுந்த உயிர் எப்படி , எங்கு இருந்து வந்தது...? பிரியும் உயிர் எப்படி பிரிகிறது? பிரிந்த பிறகு என்ன ஆகிறது ? இப்படிப் பல கேள்விகளுக்கு - நமக்கு கிடைக்கும் விடை திருப்தி கரமாக இல்லை. விஞ்ஞானமும் இதற்க்கு மழுப்பலாகவேத்தான்  பதில் அளிக்கிறது.

கடவுள் வழிபாடு , மனப்பூர்வமாக செய்பவர்கள் இன்றைக்கும் அதிகம் இல்லை. கடவுளை வணங்குபவர்களைக் கூட - கேலி செய்யும் கூட்டத்தில் தான் , நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்... ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்துவிட்டால் , மறுபிறவி, பாவம் - புண்ணியம் என்று இருப்பது உண்மையாக இருந்து விட்டால்.... என்று தான் பெரும்பாலானோர் , ஏன் நாத்திகர்கள் கூட , மனிதாபிமானத்துடன் இருக்கின்றனர்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல - தனக்கு எது நடந்தாலும் பரவா இல்லை , அதுவே தன் குழந்தைகளுக்கு நல்லது நடக்கும் என்று தெரிந்து விட்டால் - கடவுளே இல்லை என்று சொல்லுபவர் கூட , கடவுளின் திருவடிகளைப் பணிவதில் தயக்கம் காட்டுவதில்லை. 

சரி, நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு - தண்டனைகள் மிக சரியாக , நமக்கு கிடைக்கின்றது . இதை அனேகமாக நம்மில் யாரும் மறுப்பதில்லை. வரவே இல்லை என்றால் கூட பரவா இல்லை. கையில் தட்டுப்பட்டு பின் நழுவும் ஒவ்வொரு வாய்ப்பும் , அதை இழந்தவர்களுக்குத் தானே தெரியும். 

புண்ணியங்கள்.... ? அதற்குரிய பலன்கள் ஏன் கிடைப்பதில்லை? ஒரு புண்ணியம் கூடவா செய்யாமல் இருந்து இருப்போம்..? அதற்கு நாம் சில நல்ல பலன்களை அனுபவிக்க வேண்டுமே..!

நிச்சயமாக இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் அனைவரும் , புண்ணியம் செய்தவர்கள்தான். இணையத்தில் கெட்டு குட்டிச் சுவராக்க எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், நம்மைப் போன்ற சில ஆன்மீக தளங்களை பார்வையிட்டுக் கொண்டு , எங்காவது ஒரு உபாயம் கிடைக்காதா என்கிற உங்கள் தேடல் இருக்கிறதே... அதுவே உங்களுக்கு இனிமேல் நல்ல பலன்களை தந்துவிடும். கெட்ட பலன்களைக் குறைக்கும்..! கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிற நல்ல மனப் பக்குவம் கிடைக்க செய்யும்.

அதைப் பற்றித் தான் நாம் இப்போ பார்க்க விருக்கிறோம்...!

வேலை செய்வது என்பது இரண்டு வகை. கடமைக்கு செய்வது ஒரு வகை. முழு ஈடுபாட்டுடன் செய்வது ஒரு வகை. எதில் பயன் அதிகம் என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு செய்தால் தான் - நமக்கு அதன் அருமை புரியும். இல்லையா? 

நாலரை மணிக்கு எழுந்து , தூக்க கலக்கத்தில் - முகம் கழுவி , பல் துலக்கி , தனது வேலை தொடங்கும், பேப்பர் போடும் பையனோ , பால் காரரோ - அந்த நேரத்தில் எழுந்து , வெளியில் உலாத்தும் செய்கை மூலம் கிடைக்கும் பலன்களை உணருவதில்லை. ஆனாலும் , அவர்களுக்கும் பலன் கிடைக்கும், சற்று தாமதமாக. இதையே நீங்கள் , ஒரு பொக்கிஷமான தருணம் என்று உணர்ந்து செய்து பாருங்கள்... ஆம், உங்கள் பூர்வ புண்ணிய பலன் , உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும்..!

ஆனால் , அந்த நேரத்தில் நமக்கு ஓசோன் வழங்கும் காற்று - எவ்வளவு புத்துணர்ச்சியுடன் நம்மை இயங்க வைக்கும் என்பதை , நம்மில் எத்துணை பேர் உணர்கிறோம்?  இயற்கை நமக்கு அளிக்கும் மிகப் பெரிய கொடை, இந்த நேரம். காற்று தானே ? இந்த நேரத்தில் , மொட்டை மாடியில் தூங்கினால் கூட போதுமா என்று கேட்காதீர்கள்...! 

அந்த நேரத்தில் , நீங்கள் செய்யும் சின்ன சின்ன உடற் பயிற்சி, - அதன் மூலம் நீங்கள் சுவாசிக்கும் முயற்சியில் , நீங்கள் அதிக அளவு காற்றை இழுப்பீர்கள். நோய் , நொடி இல்லாத ஆரோக்கியம் உங்களுக்கு நீடித்த இளமை தரும். முக பொலிவை தரும். ஒரு நாள் நீங்கள் எழுந்து , உங்கள் உடல் பயிற்சியை மேற்கொண்டால், நீங்கள் பின்னாளில் ஆயிரம் ரூபாய் , மருத்துவத்துக்கு தர விருக்கும் செலவை , சேமிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

கோடி, கோடியாக வைத்து இருக்கும் செல்வந்தர்களை கேட்டுப் பாருங்கள். மருத்துவர் சொல்வதைவிட , ஒரு அயிட்டம் கூட அதிகமாக சாப்பிட முடியாது. கொஞ்சம் அசிரத்தையாக இருந்தாலும் , ஆம்புலன்ஸ் பயணம் தான்.

சார், ஆரோக்கியம் இருக்கட்டும் சார்.. அந்த கோடி , கோடியா.... பணம்... என்று கேட்கிறீர்களா..? விஷயத்துக்கு வர்றேன்..!

நாம எல்லாம் பாவம் செஞ்சதாலத்தான் , இந்த பூமிக்கு வந்தோம்னு எல்லாரும் சொன்னதை கேடடு , கேடடு - காது , அதுக்கே பழகிப் போச்சு.. ! அப்படி இல்லை சார்... நாம எல்லாம் , புண்ணியம் பண்ணி இருக்கிறோம்.. ! இதுக்கு மேலயும் தொடர்ந்து புண்ணியம் பண்ணுவோம்.. !
அந்த புண்ணியத்துக்கு , நல்ல காரியங்களுக்கு இனிமேல் பலன்கள் அனுபவிக்கப் போறோம்..

காலை நாலரை மணிக்கு எழுந்து , மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டு - காலை கடன்கள் முடித்து , சிறிய அளவில் உடல் பயிற்சி செய்து - குளித்து முடித்து , பூஜை அறையில் உட்கார்ந்து ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள்.உங்கள் குலதெய்வத்தையும், முன்னோர்களையும் மனதார வேண்டிக்கொண்டு - ஓம் சிவ சிவ ஓம் மந்திரமோ , அல்லது காயத்ரி மந்திரமோ  - ஒரு அரை மணி நேரமோ (அ )  ஒரு மணி நேரமோ - ஜெபித்து வாருங்கள். ஹம்மாடி, அவ்வளவு நேரமா... ? என்று யோசிக்காதீர்கள்..!

உண்மையில், நீங்கள் பெறப்போகும் அவ்வளவு நல்ல விஷயங்களையும் ஈர்க்கும் சக்தியாக இருந்து , உங்களை தயாராக்குவது  - இந்த மந்திர ஜெபம் மூலம் பெறப் போகும் - மந்திர கவசம் வழியாகத் தான். 

இந்த ஜெபம் - உங்களுக்குள் ஊடுருவுவது , ஒவ்வொரு நாளும் நீங்கள் சூரிய உதயத்தைக் காணும்போது... ! சூரியன் எழுந்து வரும் அழகை , வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் , கண் குளிரப் பாருங்கள்... !

கொஞ்சம் உள்ளுக்குள் அமிழ்ந்து , உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவனியுங்கள். தீராத பல பிரச்னைகளுக்கும் தீர்வு , இந்த நேரத்தில் உங்களுக்கு புலப்படும்.

உங்களுக்கே உங்களுக்காக - நீங்கள் நாலரை மணியிலிருந்து ஆறரை மணி வரை - இந்த இரண்டு மணி நேரத்தையும் செலவழிப்பது மிக அவசியம்.

இந்த நாள் , இனிய நாள் னு எல்லா நாளையும் சொல்லலாம்... ஆறு மணிக்கே , அன்றாட வேலைகளை ஆரம்பிக்கிறவங்களுக்கு . இதில் ஒரு பெரிய சூட்சுமம் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆறு மணியை ஒட்டி , அந்த நாளுக்குரிய ஹோரை ஆரம்பிக்கிறது...

குறிப்பிட்ட நாளில் - ஒரு கிரகம் , கதிர் வீச்சு - பூமியில் சில அபரிமிதமான சக்தியை வெளிப் படுத்துவதாக - நம் சித்தர் பெருமக்கள் கண்டு சொல்லியிருக்கிறார்கள். திங்கள்  - சந்திரன், செவ்வாய் - செவ்வாய். புதன் - புதன்... என்று... இப்படி ஒவ்வொரு நாளும் , சரியாக அந்த நாளின் சூரிய உதயத்தை ஒட்டி , அந்த கிரகத்தின் ஹோரை ஆரம்பிக்கிறது. 

திங்கள் - காலை ஆறு டு ஏழு - சந்திர ஓரை. புதன் - புதன் ஹோரை. வெள்ளி - சுக்கிர ஹோரை.  ... என்று எல்லா நாட்களிலும், இந்த ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை , அந்த நாளுக்குரிய ஹோரை தொடங்கும்.

இதை, நாம், சரியாக பயன் படுத்திக் கொண்டேயாக வேண்டும். 

உங்களோட - டைரி அல்லது நோட் புக் எடுத்துக்கோங்க...  
ஒரு ஐந்து வருடம் கழித்து - நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள் ?

உங்க கிட்டே என்னென்ன சொத்து இருக்கணும்னு நினைக்கிறீங்க? பேங்க் ல எவ்வளவு பணம் இருக்கணும்? எந்த கார் வாங்கணும்? எவ்வளவு பெரிய வீடு வாங்கணும்.. ? இல்லை ஆபீஸ்ல என்ன உத்தியோகம் / நிலைமை இருக்கணும்? இல்லை பிசினஸ் ல எப்படி இருக்கணும்..?

இப்படி, உங்களுக்கு இருக்கிற தகுதி , திறமை பொறுத்து - நியாயமா , உங்களால் இவ்வளவு அடைய முடியும்னு நினைக்கிறதை எழுதுங்க..! டார்கெட் கொஞ்சம் அதிகமாகவே இருக்கட்டும்.. ! அதே நேரத்தில் முழு முனைப்பில் ஈடுபட்டால், நீங்கள் அடையக் கூடியதாக இருக்கட்டும்..!
ஒவ்வொரு அஞ்சு வருஷமும் , இந்த டார்கெட் - வளர்ந்துக்கிட்டே போகட்டும்..!

காலிலே - ஆறு மணி டு ஏழு மணி சொன்னேன் இல்லையா.? இந்த நேரத்தை - இந்த ஐந்தாண்டு திட்டத்துக்கு , ஏற்ற படி திட்டமிட பயன் படுத்துங்க..! 
Planning , implementation and execution எல்லாமே நீங்க தான்.  

நீங்கள் செய்யும் அன்றாட வேலைகளைத் தவிர , ஏதாவது ஒரு சின்ன காரியமாவது .. இந்த நீண்ட கால திட்டம் சம்பந்தமா இருக்கட்டும்.... ..

நீங்க வாங்க நினைக்கிற கார் என்ன விலைனு தெரிஞ்சுக்கிடுவதா இருக்கலாம், இல்லை சிமெண்ட் என்ன விலை... நிலம் இந்த ஏரியா வுல , என்ன விலை போகுது.. உங்க சம்பாத்தியம் பெருக வேற என்ன செய்யலாம்...? இப்படி... ஏதாவது ஒரு விஷயமாவது ... இருக்கட்டும்.

எந்த ஒரு காரியத்திலும் - கட கட வென்று தொடக்கி விடாதீர்கள்.. ! மரத்தை வெட்டுவது முக்கியமல்ல. விரைவில் வெட்டி முடிக்க வேண்டும்.. ! உடனே வெட்ட ஆரம்பிப்பதை விட , கோடரியை தீட்ட உடனே தொடங்குங்கள்.. கோடரி தான் உங்கள் புத்தி.. 

உலகத்தில் எந்த ஒரு செயலுக்கும் வழி உள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு உள்ளது. சிக்கல்களை புரிந்து கொண்டால் போதும்.. உலகம் உங்கள் வசப்படும்.... !
 
அதன் பிறகு - உங்கள் நித்ய தின அலுவல்கள் தொடங்கட்டும்... !

வாரம் ஒருமுறை , உங்கள் அருகில் இருக்கும் ஆலயத்துக்கு மறக்காமல் செல்லுங்கள். எந்த காரணம் கொண்டும் தவறவிடாதீர்கள்..! மாதம் ஒருமுறை - பிரசித்தி பெற்ற ஆலயத்துக்கு , உங்கள் குடும்பத்துடன் சென்று வாருங்கள். உங்கள் குல தெய்வம் கோவிலாக இருக்கலாம்.. அல்லது சதுரகிரி , அண்ணாமலை , அல்லது தமிழ் நாட்டில் உள்ள எந்த பெரிய ஆலயமாவது இருக்கலாம்...! உங்கள் நடப்பு தசா , புக்தி அறிந்து வணக்கும் தெய்வமாக இருக்கலாம். !

குடும்பத்துக்காக மாதம் ஒரு நாளாவது சந்தோசமாக ஒதுக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி , குழந்தைகள் பிறந்த நாளுக்கு , உங்கள் திரு மண நாளுக்கு - விடுமுறை எடுங்கள். எடுக்க முடியாத அளவுக்கு பணி இடையூறாக இருந்தால் , வேறு வேலை மாற முயற்சி எடுங்கள்... இல்லை சொந்த தொழில் ஆரம்பியுங்கள்... !  நல்ல பழக்கங்களை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.. !

நீங்கள் ஒரு விருட்சமாக வளர வேண்டும். உங்கள் நிழல் ஆயிரம் பேருக்கு, பறவைகளுக்கு இளைப்பாறும் இடமாக இருக்க வேண்டும்.. 
பணம் சம்பாதிக்க கூச்சப் படாதீர்கள்.. சோம்பேறித்தனப் படாதீர்கள். 

சம்பாதிக்க , ஒரு வெறி இருக்கணும்...! புலியோட போர்க்குணம், வேகம் இருக்கணும்..! பணம் இல்லைனா , எங்கேயும் மதிப்பு இருக்காது.. ! திறமையை அதுக்கு ஏற்ப வளர்த்துக்கோங்க.. !

சேர்த்து வைத்ததை தக்க நேரத்தில் - உங்கள் அண்ணன் , தம்பி குடும்பத்தில், கஷ்டப்படு பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.. ! உதவும் வகையில் , நீங்கள் இன்னும் சம்பாதியுங்கள்.. ! அருகில் ஏதாவது ஆலயம் பாழடைந்து இருந்தால் , அதை சரி செய்ய , உங்களால் ஆன முயற்சி எடுங்கள்.. ! உங்கள் சந்ததிக்கு பின்னாளில் அது மிகப் பெரிய வரமாக அமையும்..!

கூட்டு குடும்ப வாழ்க்கையைத் தான் தொலைத்து விட்டோம்.. ! தகுதியுள்ளவர்களுக்கு உதவுவதன் மூலம், உங்களை சுற்றி ஒரு பெருங் கூட்டமாவது நிற்கட்டும்..!

நம் வாழ்க்கை , மற்றவர்களுக்கு ஒரு பாடமாக, வரலாறாக இருக்கும் படி - அர்த்தமுள்ள வாழ்வு அமையட்டும்.. ! 
எவனும் எக்கேடும் கேட்டுப் போகட்டும்னு - அநியாயம் பண்ணிக்கிட்டு, ஒரு கூட்டம் திரியுது இல்லையா? அதே மாதிரி , எவனும் எப்படியும் போகட்டும்னு நாம , நல்ல காரியம் செய்வோம்..!

ஒவ்வொருவரும் ஜெயிச்சுக் காட்டுவோம்... ! ஒரு கோவில் , பொது இடம் னு வந்தா , உங்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கிற அளவுக்கு - ஒவ்வொருத்தரும் வாழ்ந்து காட்டுவோம்..!

உங்கள் திறமை, முயற்சி , செயல் படுத்தும் திறன்.. நேர்மையா இருந்தால் , ஆண்டவனின் அனுக்கிரகம் உங்களுக்கு கண்டிப்பாக உண்டு.. !


தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும்ங்கிற மாதிரி - நாம படற கஷ்டம்போதும்னு , நம்ம முன்னோர்கள் நினைக்கிறாங்க... !

நம் முன்னோர்கள் எல்லாம் இந்த மகாளய பட்ச காலத்தில் - (வரும் அமாவாசை வரும்வரை), நம்மளை எல்லாம் பார்த்திட்டுப் போக , நம் வீடு வருகிறார்களாம். நீங்கள் இந்த கட்டுரையை படிப்பதை கூட , அவர்கள் கவனித்துக் கொண்டு இருக்கலாம். ஏன்..? அவர்களில் ஒருவர் கூட , இந்த கட்டுரையை என்னில் இருந்து , இயக்கிக் கொண்டு எழுதி இருக்கலாம்... !

உங்கள் பாசத்துக்குரிய அந்த ஜீவன், உங்கள் தாத்தா , அப்பா ... சொன்னா ... அதன்படி கேட்டுக்க மாட்டீங்களா? உங்க நல்லதுக்குத்தானே சொல்றோம்..!
செஞ்சு காட்டுங்க.. ராசா ..!

உலகத்திலே நீங்க எந்த மூலைல , இப்போ இருந்தாலும், பாசத்தோட ஒரு கை , உங்க தலையை தடவிக் கொடுப்பது , ஆசீர்வாதம் செய்வது உண்மை.. நம்ம நலனுக்காக , நம்ம வீட்டு வாசல் தேடி வந்து இருக்கிற... அந்த புண்ணிய ஆத்மா முன்னாலே உறுதிமொழி எடுத்துக்கோங்க.. ! 


ஜெயிச்சுக் காட்டுவீங்க.. கண்டிப்பா...!


அனைவருக்கும் அடியேனின் மனமுவந்த வாழ்த்துக்கள்... ! 
இப்படி ஒரு நல்ல விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள , எனக்கு வாய்ப்பளித்த அந்த சிவத்தின் கருணை , நம் அனைவருக்கும் கிடைக்க , மனமார வேண்டுகிறேன்..!


1 comment: