Tuesday, September 27, 2011

இரங்குபவன் இறைவன் !

                 இரங்குபவன் இறைவன் !

இளைமையிலேயே இறைஅறிவு பெற்று உய்திட அழைத்த அருணந்தி சிவாச்சாரியாரின் குருபூசைத்தினம் இன்று. சிவஞான சித்தியாரைத் தமிழ் உலகுக்குத் தந்த
அருணந்தி சிவாச்சாரியாரின் குருபூசை. சிவஞானத்தில் சித்தியடைதல் இவ்வுலக வாழ்விற்கும் சிவனடி அடைதற்கும் அவசியமானது என்பதை வலியுறுத்துவதே சிவஞான சித்தியாரின் நோக்காக உள்ளது. சைவசித்தாந்த சாத்திரத்தின் - தமிழர் ஆன்மீகத் தத்துவத்தின் இரண்டாவது நூலாகப் போற்றப்படும் சிவஞான சித்தியார் சிவஞானத்தில் சித்தி பெறுதலுக்கான எண்ணங்களை நம்பிக்கையைத் தந்திடும் இறைவெளிப்பாடு எனலாம்.
சுவேதனப் பெருமாள் என இயற்பெயர் கொண்டவரை பரஞ்சோதி முனிவரின் அருட்பார்வைத் தீட்சை தெய்வப்புலமை பெற வைத்து மெய்கண்டார் என்னும் அருட்பெயரும் அவராலேயே அருளப்பட்டு பொல்லாப் பிள்ளையார் துணையால் சிவஞான போதம் என்னும் சிவஞானத்தின் அறிவினை வெளிப்படுத்தும் இறைவெளிப்பாட்டு நூலை எவ்வாறு எழுத வைத்ததோ - அவ்வாறே சிவஞான போதத்திற்கு வழிநூலாகிய சிஞானசித்தியாரை எழுதிய அருணந்தி சிவாச்சாரியாரையும் சிவஞானத்தை வாழ்வில் பெற்று சித்திகள் அடைதற்கான வழிகள் விளக்கும் இறைவெளிப்பாடாகவே சிவஞானசித்தியாரை எழுத சிவனருள் வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
இதனால் தான் அஃறிணைப் பொருளாகிய சிவஞானசித்தி என்னும் நூலுக்கு உயர்திணை விகுதியான ஆர் கொண்டு சிவஞானசித்தியார் என முடித்து உயிர்களையும் உலகையும் இயக்கும் பேராற்றல் மிகு மூலமுதல்வனின் அருளாற்றலின் சொல்லாற்றால் வெளிப்பாடு இந்நூல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
சகலாகம பண்டிதர் என்னும் அறிவுக்கடலாகத் திகழந்து மெய்கண்டாரின் பெற்றோர்க்கே திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்புக்கே நூல்கட்டிப்பார்க்கப் பணித்து திருமறைக்காடு சென்று சிவனருளால் சுவேதனப் பெருமாளைக் குழந்தையாகப் பெற வழிகாட்டியவர் அருணந்தி சிவாச்சாரியார். பின்னர் அருணந்தி சிவாச்சாரியாரே மெய்கண்டாராக அக்குழந்தை அருள் உபதேசம் செய்வதையும் இதனால் தன்னிடத்தில் படிக்கும் சீடர்கள் தொகை குறைந்து அக்குழந்தையிடத்திலேயே சீடர்கள் தொகை குறைவதையும் கண்டு மனக்கொதிப்படைகிறார். மெய்கண்டார் உபதேசிக்கும் இடத்திற்கே சென்று ஆணவம் என்றால் என விளக்கு என அறிவின் மமதையில் கட்டளை பிறப்பிக்கின்றார். மெய்கண்டாரோ எதுவுமே பேசாது அவரையே உற்றுப்பார்க்கத் தானே ஆணவம் என்பதின் மொத்தவடிவாக நிற்பதை அருணந்தி சிவாச்சாரியார் உணர்கிறார். உடனேயே மெய்கண்டாரை வணங்கி அவரையே தனது குருவாகவும் ஏற்று அவர் எழுதிய சிவஞானத்தை மக்கள் மயப்படுத்தும் சிவஞான சித்தியாரையும் அருளினார் என்பது வரலாறு.
ஆணவம் ஒடுங்கும் பொழுது சிவசித்தி சித்திக்கும் என்பது சிவஞானசித்தியாரின் தோற்றக்கதை தரும் பெருவிளக்கமாக அமைகிறது. . “கருவினுள் அழிவதாயும், கழிந்திடாது அழிவதாயும் - பரிணமித்து அழிவதாயும், பாலனாய் அழிவதாயும் - தருணனாய் அழிவதாயும், தான் நரைத்து அழிவதாயும் - உருவமே அழிவேயானால், உள்ளபோதே பார் உய்ய”. என்பது அருணந்தி சிவாச்சாரியார் விடுக்கும் அழைப்பு.
என் பிள்ளை நன்றாக கணித விஞ்ஞானத்தில் தேறி பட்டங்கள் பல பலக்கலைக்கழகத்தில் பெற்று பெரும் பதவிகளும் பெற்று நல்ல இடத்தில் திருமணம் செய்து வாழ்வாங்கு வாழ்ந்து முதுமையில் சிவப்பணி செய்து சிவப்பேறு பெற்றிடல் வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. இதற்காகத் தாங்களும் பிள்ளைகளும் இறைவனை வழிபட்டு அவன் அருளை இச்செயற்திட்டத்திற்குப் பெற்றிடல் வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழர்களின் இறைவழிபாட்டு நோக்காகவும் அமைகிறது.
இவை மனித மனதின் இயல்பான எண்ணங்கள் என்பதும் உண்மை. ஆனால் உயிரின் தோற்றமும் ஒடுக்கமும் உயிரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே அருணந்தி சிவாச்சாரியாரின் மேற்சொன்ன பாடல் எமக்கு நெஞ்சிருத்துகிறது.
திருமூலநாயனாரும் திருமந்திரத்தில், “ கண்ணதும் காய்கதிரோனும் உலகினை - உள்நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்- விண்உறு வாரையும் வினை உறுவாரையும் - எண்ணுறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே” எனப்பாடி முப்பது வயதளவில் ஒரு ஆன்மாவுக்கு விண்ணா மண்ணா என்ற அடுத்த பிறவிக்கான தீர்ப்பு எழுதப்பட்டிடும் எனக்கூறி இளவயதிற்குள்ளேயே செபமும் தவமும் சிறுவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.
மேலும் நான்மறை பயிலும் நாட்டில் பிறப்பதும் வாழ்வதும் இறைகொடை என்றார் அருணந்தி சிவாச்சாரியார். “ நரர்பயில் தேயந்தன்னில், நான்மறை பயிலா நாட்டில்,- விரவுதல் ஒழிந்து, தோன்றல் மிக்க புண்ணியத்தான் ஆகும்; தரையினில் கீழை விட்டு தவம்செய் சாதியினில் வந்து – பரசமயங்கண் செல்லர் பாக்கியம் பண்ணொணாதே.” என்னும் சிவஞானசித்தியார் பாடல் மூலம் அருணந்தி சிவாச்சாரியார் வேதமுறையையும் தவநெறியையும் கொண்டு பிறசமயங்களுள் செல்லா மன உறுதி கொண்டிட அழைக்கின்றார்.
இது இன்றைய புலத்துச் சைவமக்கள் மனத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான கட்டளையும் கூட. இங்கு தவம் செய் சாதி எனச் சைவர்களை குறித்துள்ளமை மிக முக்கியமான ஒன்று. “உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை – அற்றே தவத்திற் குரு” என்று தவத்தின் வடிவம் என்பது விரதத்தால் தன் உயிருக்கு உற்ற நோயை மாற்றுதலும் பிற உயிர்கள் எதற்கும் தீங்கு செய்யாது வாழ்தலும் என்று தவத்திற்கு தவம் குறித்த தன் அதிகாரத்தில் வரைவிலக்கணம் தரும் வள்ளுவர் பின்னர் ‘சான்றாண்மை’ என்னும் அதிகாரத்தில், “ கொல்லா நலத்தது நேர்ன்மை பிறர் தீமை - சொல்லா நலத்தது சால்பு” என்று கூறி உயிர்களைக் கொல்லாமை தவம் உயிர் வருந்தக் கூடிய வகையில் பிறரின் தீமைகைளச் சொல்லாது இருப்பது சால்பு” என்று அழகாக விளக்கம் தருகிறார்.
இன்னா சொல்லும் இன்னா செய்யாமையும் சைவவழி என்பதை வள்ளுவம் எடுத்துரைக்கிறது. சைவன் எனப்பட்டவன் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாது வாழ்பவன் என்னும் தத்துவத்தைக் கடைப்பிடிப்பதற்காகவே புலால் உண்ணாமை சைவத்தின் அடிப்படை விதியாகிறது. இது ஒருவகைத் தவமே இதனால் தான் தவஞ்செய் சாதியில் பிறத்தலே பெரும் புண்ணியம் என அருணந்தி சிவாச்சாரியார் அழகுற எடுத்தியம்புகிறார்.
வாழ்வு மயக்கம் தரும் தன்மையானது. வறுமை சிறுமைகளைச் செய்விக்கும் போக்குடையது. இவற்றிலிருந்து தப்புவதற்குத் தெய்வ அருள் வேண்டும். கூடவே வாழ்வில் பணிவு என்னும் பண்பு மனத்தில் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கே நான் என்னும் அகங்கார முனைப்பும் எல்லாமே எனக்கு என்னும் எனது என்னும் மமகாரப் போக்கும் அடங்கும். இந்தத்தன்மை பெறவும் இறையருள் அவசியம். “வாழ்வெனும் மையல் விட்டு, வறுமையாம் சிறுமை தப்பி – தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் - ஊழ்பெறல் அரிது சால் உயிர் சிவஞானத்தாலே,- போழ் இழ மதியினானைப் போற்றுவார், அருள் பெற்றாரே” என்னும் சிவஞானசித்தியாரின் பாடல்.
இந்த தாழ்வு என்னும் பணிவு இறைவனை அடைதற்கான முதல் நிபந்தனை என்பதைக் கிறிஸ்தவத்தைத் தோற்றுவித்த இயேசுநாதரும் பலதடவைகளில் வலியுறுத்துவதைக் காணலாம். அவர் “ஊசிமுனைக் காதுக்குள் ஒட்டகங்கள் போனாலும் செல்வந்தர்கள் கடவுளின் அரசுக்குள் செல்ல மாட்டார்கள்” என அடித்துக் கூறினார். தாழ்வென்னும் தன்மை பெறத் தடையாவன செல்வத்தை போற்றும் செல்வந்தர்களை சிவஞானசித்தியார் செத்த பிணத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறது. “அரிசனம் பூசி மாலை அணிந்து பொன்னாடை சாத்தி,- பரிசனம் பின்பு செ;ல்ல, பாரகர் பரிக்க, கொட்ட – வரிசின்னம் ஊத தொங்கல் வந்திட உணர்வு மாண்டு, - பெரியவர் பேச்சும் இன்றிக் கிடத்தலால் பிணத்தொடு ஒப்பர்” என்பது பிறருக்கு உதவாத செல்வந்தர் குறித்து சிவஞான சித்தியார் தரும் சொற் காட்சி.
இந்த செல்வத்தைத் தன்னிடத்திலே குவித்தல் என்னும் சுரண்டலுக்கு எதிரான இந்த போர்க்குணம் மறைஞானசம்பந்தரிலும் இருந்தமையை உமாபதி சிவாச்சாரியார் பல்லக்கில் பகற்பொழுதில் தீப்பந்தங்கள் புடைசூழ போவதைக் கண்டு அவர் சொல்லிய “பட்ட கட்டையில் பகற்குருடு போகிறது” என்ற வசனம் நினைவுபடுத்துகிறது. இந்த வார்த்தைகளே உமாபதிசிவாச்சாரியார் வாழ்வு மாறுபாட்டுக்கான செல்நெறியாகியமை வரலாறு.
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை வென்றிடல் என்பதற்கு மனக்கட்டுப்பாடு என்பது பயிற்றுவிக்கப்படல் வேண்டும். இதனையே அறவாழ்வு தருகிறது. மண்ணை அறுத்துச் செல்லும் நீர்ப்பெருக்குப் போன்று இறைஅருட்பெருக்கால் வாழ்வுக்கான பாதையை வகுத்துக் கொள்தலே அறம். அறமே இறைவனை எம் உள்ளம் தாங்கும் வாகனம். இதனால் தான் அறத்தின் சின்னமான விடை மீது சிவபெருமான் எழுந்தருளுகின்றார்.
இந்த அறவழி என்ன என்பதைச் சிவஞானசித்தியார் ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம் வழுக்கு இலாத் தவம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை அழுக்கு இலாத் துறவு அடக்கம் அறிவொடு அர்ச்சித்தல் ஆதி இழுக்குஇலா அறங்களால் இரங்குவான் பணி அறங்கள் என வகுத்துக் கூறி இந்த அறவழி வாழ்பவர்களுக்கு இரங்குபவன் இறைவன் என்பதையும் அடித்துக் கூறுகிறது.
மதங்கள் இந்த அறத்தைக் கடைப்பிடித்தல் என்னும் தன்மையைக் கொண்டிருத்தலால்தான் பல்வேறு மதங்களிலும் வழிபாடு பெறும் ஒரே கடவுள் என்ற தத்துவம் பிறக்கிறது. மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையில் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றி சினமுதல் அகற்றி வாழும் செயல் அறமானால் யார்க்கும் முனம் ஒரு தெய்வம் எங்கும் செயற்குமுன் நிலையாம் அன்றே. என்று ஒன்றே தேவன் என்ற தத்துவத்திற்கு தெய்வம் போற்றி சினம் முதலாம் அறத்திற்கு எதிரான தன்மைகள் நீக்கி வாழ்தல் நிபந்தனையாகிறது என்பதை இச்சிவஞானசித்தியார் பாடல் விளக்குகிறது.
இதற்கு அடுத்த பாடலாகத் தான் யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி என்னும் புகழ்மிக்க பாடல் வருகிறது. யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்மாம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள் வேதனைப்படும், இறக்கும் ,பிறக்கும் மேல் வினை செய்யும் , ஆதலான் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே. என சமயசமரசம் பேசும் இப்பாடல் சிவன் மூலமுதல்வன் என்பதினால் தோற்றம் நிலைத்தல் ஒடுங்கல் என்னும் தன்மையைக் கொண்டிருந்த மற்றைய தெய்வங்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கி தானே அருள்செய்கின்றான் என்ற விளக்கத்தைத் தருகிறது. இதனை சிவஞானசித்தியாரின் அடுத்த பாடல் மேலம் தெளிவாக்குகிறது.
இங்கு நம் சிலர்க்குப் பூசை இயற்றினால், இவர்களோ வந்து அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண் , எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது அங்கு நாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன். என யாருக்குப் பூசை செய்தாலும் அவற்றை ஏற்று பூசையின் பலனை அவர்களுக்கு அளிப்பவன் இறைவன் என்பதை அருணந்தி சிவாச்சாரியார் எடுத்து விளக்குகின்றார்.
இதனை அருணந்தி சிவாச்சாரியார் அவர்கள் திருமூலரின் பின்வரும் பாடலை அடியொற்றி எழுதினாரா என்கிற கேள்வி உண்டு.
சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச்சியமே
சைவம் என்பது ஒரு மனிதன் நன்மைத்தனத்தை சிவத்தை தொடர்புறும் நிலை. அதன் பின் அம்மனிதன் தன்னால் இயன்ற நன்மைத்தனத்தை வெளிப்படுத்தி நிற்பான். சைவம் என்பது ஒன்றாயும் உடனாயும் வேறாயும் தன்அகத்தில் உள்ள இறைவனைச் சிவத்தை உணர்ந்து தன் செயல் எல்லாம் அவனால் செய்விக்கப்படுகிறது என அவனில் சாரும் நிலை. இந்த நிலையை அடைகையில் சிவம் என்பது மூலசக்தி அதனை உணரத்தான் முடியுமே தவிர விளக்க முடியாது என்கிற உண்மை தெளிவாகும் பொழுது சிவம் என்ற உருவநிலையை வழிபடும் நிலையில் நின்று விடுபட்டு மதங்கடந்த இறைவனை எங்கும் எல்லாமாய் நிறைந்துள்ள இறைவனை எல்லாவற்றையும் இயக்குகின்ற இறைவனை எல்லாவற்றையும் நிலைப்படுத்தி அனுபவப்படுத்தி இருவினை ஒப்பு ஏற்பட்டு மலபரிபாலனம் நிகழ்ந்து ஆன்மா சக்திநிபாதனமாகச் சக்தியில் சரண் புகும் பொழுது தன்னைக் காட்டித் தன்னோடு ஒடுக்கி அருள்செய்யும் இறைவனை அறிவர் - காண்பர் - மகிழ்வர்.
இந்நிலையில் சைவம் சிவானந்தம் தரு வழியாகிறது. சாயுச்சியம் என்னும் இறைவனுக்கு மிகநெருக்கமாகத் - தாள் தலையாக அவனில் நிலைபெறும் தன்மையை அளிக்கிறது என்பது திருமூலரின் விளக்கம். இதனை அடைய வைப்பது ஞானம். தடையில்லா ஞானமே சிவசக்தி என்பது சிவஞானசித்தியார் தரு விளக்கம். இதனால் தான் ஞானநூல், தனைஓதல் ஓதுவித்தல் நல்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை ஊனம் இலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம் ஒன்றுக்கு ஒன்று உயரும், இவை ஊட்டுவது போகம் ஆனவையான் - மேலான ஞானத்தால் அரனை அர்ச்சிப்பர் வீடு எய்த அறிந்தோர் எல்லாம். என ஓதல் ஓதுவித்தல் - கேட்டல் கேட்பித்தல் - கேட்டதைச் சிந்தித்தல் என்பதே எல்லாப் பூசைகளுக்கும் வழிகாட்டும் தினச்செயலாகும் என அருணந்தி சிவாச்சாரியார் எடுத்து விளக்குகிறார்.
இதனைச் செய்ய வேண்டிய கடமை உள்ளவர்கள் பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - குருக்கள் - ஊடகங்கள் - தலைவர்கள். இதில் இவர்கள தவறும் பொழுதே அமைதியின்மை யுத்தம் துன்பம் துயரங்கள் வாழ்வாகின்றன. மனிதன் தான் விதைத்தவை விளையும் பொழுது கடவுளாலும் எதுவும் செய்ய முடியாத நிலை தோன்றிவிடுகிறது.
“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் - மெய்வருத்தக் கூலி தரும்” ஆம். நமது வினைகளை மாற்ற தெய்வத்தால் முடியாது. ஆயினும் முயற்சி தவம். வழுக்கு இலாத் தவத்தை நாம் செய்து அதன் வழி எம் உடல் வருந்தினாலும் உறுதியுடன் உழைத்தால் நிச்சயம் “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி – தாழா துஞற்று பவர்” என்ற தன்மையைப் பெறுவோம்.
மாண்டன உயிர்பெறும். மாண்புகள் சிறப்புறும். மகாகவி பாரதி தனது வாழ்வின் இறுதிச் செய்தியாகச் சொன்ன “ நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.” மரணமில்லாத மனித குலம் இந்த மண்ணில் சாத்தியம் சிவத்துள் ஒடுங்குதல் அழிவில்லை. ஆனந்தம். சிவத்திலிருந்து தோன்றுதல் படைப்பு அல்ல பயணம். அனுபவப் பயணம். மாசுக்கள் நீங்கிச் சிவத்தில் நிலைபெறலுக்கான அழைப்புப் பயணம். அரிது அரிது மானிடராதல் அரிது ஒளவையின் குரலொலி கேட்கிறது. அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்சவருவதும் இல்லை.
நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவா என்றெமையாள்வான் அமரர நாதன்
அயனொடு மாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவடிக் குற்றேவல் செய்கென்றாலும்
குணமாகக் கொள்ளோம் எண் குணத்துள்ளோமே!
அப்பர் தந்த பாடலின் தத்துவப் பலம் தான் சிவஞானசித்தியார் தரும் அற்புத விளக்கங்கள். திருச்சிற்றம்பலம்.


No comments:

Post a Comment