Tuesday, September 20, 2011

பிள்ளைப்பேறு தரும் எறிசோறு சடங்கு


 பிள்ளைப்பேறு தரும் எறிசோறு சடங்கு

Swine Flu
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு புலியூரான் பகுதியில் கட்ட புளியமரம் என்ற இடத்தில் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் வாழ்ந்து வந்தார். அவர் அப்பகுதி மக்களுக்கு விஷமுறிவு தீர்த்தங்கள் வழங்கியும் மூலிகைகளால் வைத்தியம் செய்தும் குணப்படுத்தியுள்ளார்.
சித்தருக்கும் 21 தெய்வங்களுக்கும் ஆதிமுக்திருள பண்டாரம் என்பவர் வீடுதோறும் இரட்டை காவடி எடுத்து, சேவை செய்து வந்தார். எப்பொழுதுமே இறைவனுக்கு சேவை செய்யும் பொழுது மனிதர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்பது சித்தர்களின் கருத்து. அதனாலேயே சித்தர்கள் அதிகம் கோபம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த  இரு நண்பர்களுக்கு, வயதான முதியவர் இறைவனுக்கு எப்படி சேவை செய்வார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. இதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் ஒருநாள் அவரை தொடர்ந்து சென்றனர்.
அக்காலத்தில் கட்டபுளியமரம் பகுதியில் ஆற்று நீர்ப் பிடிப்பு பகுதியை தாண்டி மறைவான பகுதியில் ஒளிந்து கொண்டார்கள். இவர்களைப் பார்த்துவிட்ட சித்தர், அவர்களுடைய நோக்கத்தைத் தெரிந்து கொண்டு, இருவரும் செத்து மடியுமாறு கோபத்துடன் சாபம் இட்டார். இதனை கண்ட ஆதிமுக்திருள பண்டாரம், சித்தரை வணங்கி, தனக்காக அவர்களுக்கு இட்ட சாபத்தைத் திரும்ப பெருமாறும், மக்களின் நலன்களை காப்பது அவருடைய கடமை என்றும் கூறி வேண்டி நின்றார். உடனே சித்தரும் ஆற்றிலுள்ள தீர்த்தத்தை தெளித்து அவர்களை உயிர்ப்பித்தார். அவர்களுக்கு காலம் உள்ளவரை தனக்கு பணிவிடை செய்யுமாறு  சித்தர் கூறினார். ஆதிமுக்திருள பண்டாரம் நாம் எவ்வளவு கவனமாக இருந்தும் தெய்வங்களுக்கும், சித்தர்களுக்கும் சேவை செய்தது மானிடருக்குத் தெரிந்துவிட்டதே என சஞ்சலப்பட்டு ஊரார் முன்னிலையில் ஆடி 18ம் தேதி சித்தநாதர் கோயிலில் ஜீவ சமாதி
அடைந்தார்.
இக்கோயிலில் மூலவராக தட்சிணாமூர்த்தி உருவத்தில் சிவன் உள்ளார். இவர் சித்தநாதர் என்று அழைக்கப்படுகிறார். சித்தரால் உருவாக்கப்பட்டதால் சித்தநாதர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  மூலவராக குருநாதரும், இடது பக்கம் மகமாயியும், வலது பக்கம் அங்காளபரமேஸ்வரியும் காட்சி அளிக்கின்றனர். இவர்களோடு  சித்தர், சிதம்பர தாண்டவர், நந்தீஸ்வரர், வீரபத்திரர்,
இருளிபர், பாதாளம்மன், விநாயகர், முத்து இருளப்பர், முத்துக்கருப்பர், பேச்சியம்மன், நல்லதம்பி, ஒன்றி வீரப்பர், பைரவர், கம்பத்தடியர், ஆலடியார், கருப்பண்ணசாமி, ராக்காயி அம்மன், ஓரக்கடையம்பர், சோனைச்சாமி, இருளப்பர் உடன் பிறப்பான பொன்முத்திருளாயி ஆகியோர் காட்சி தருகின்றனர். அந்நாட்களில் பொன்முத்திருளாயி அம்மன் மிகவும் துடிப்பான அம்மனாக திகழ்ந்துள்ளாள். இப்பகுதியில் மக்கள் சுத்தமில்லாமல் இருந்தால் அவர்களைக் கடுமையாக தண்டித்துள்ளார். மிகவும் கோபக்கார அம்மனாக கிராமத்தை வலம் வந்துள்ளாள். இதனால் இப்பகுதி மக்கள் அஞ்சி சித்தரிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். இருளப்பரும் சித்தரிடம், ‘‘உங்கள் சகோதரி, இங்கிருப்பவர்கள் அனைவரையும் கடுமையாக தண்டித்து வருகிறார். நீங்கள்தான் அவளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று முறையிட்டுள்ளனர். உடனே இருளப்பர், ஊருக்கு கிழக்குப் பகுதியில் உள்ள மயானக் கரையில் தனது சகோதரியை எரித்து சாம்பலாக்கினார். கூடவே, வருடத்திற்கு ஒருமுறை சிவராத்திரிக்கு முதல்நாள் உயிர்த்தெழுமாறு கூறி சாபத்தை முடிக்கிறார்.  அதிலிருந்து மக்கள் பொன்முத்திருளாயி அம்மனுக்கு சிவராத்திரிக்கு முதல்நாள் சித்தநாதர் கோயிலிலிருந்து காளியம்மன் சிலையை மாவுகளால் உருவாக்கி கப்பரை இடுகின்றனர். சிவராத்திரிக்கு மறுநாள்தான் எந்த கோயிலிலும் கப்பரை வைத்து சாமி கும்பிடுவது வழக்கம். வித்தியாசமாக பொன்முத்திருளாயி அம்மனுக்கு மட்டும் முதல்நாள் கப்பரை வைத்து எறிசோறு எறிவார்கள். அதனை வாங்கிக் கொண்டு அம்மன் சென்று விடுவாள் என்று நம்பிக்கை.
இப்பகுதி மக்கள் பொன்முத்திருளாயி அம்மனை வெள்ளி, செவ்வாய் தோறும் கும்பிடுவது வழக்கம். இந்தக் கோயிலுக்கு கட்டடமோ, காம்பவுண்ட் சுவர்களோ கிடையாது. வெறும் வெட்ட வெளியில் மயானக் கரையில் படுத்துக் கொண்டு ஆட்சி புரிகிறாள் அன்னை. இங்கு எறிசோறு எறிந்து விட்டு சித்தநாதர் கோயிலுக்கு வந்து பிள்ளை இல்லாத தம்பதிகள் வேண்டிக் கொள்கிறார்கள். அதேபோல தேமல், அரிப்பு, வெண்புள்ளி, அரும்பாலை மாதிரியான பல சரும நோய்களை குணப்படுத்த தீர்த்தமும் திருநீறும் கொடுத்து அனுப்புகிறார்கள். மக்களும் பெருநம்பிக்கையுடன் வழிபட்டுச் செல்கிறார்கள். அனைத்து தெய்வங்களுக்கும் தினமும் பூஜை நடைபெறுகிறது. பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சித்தநாதரை வேண்டிச் செல்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து 10.கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சுழி. அதனருகே புலியூரான் கிராமத்தில் உள்ளது இந்த சித்தர் நாதர் கோயில்.

No comments:

Post a Comment