Saturday, September 17, 2011

இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்


இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

Posted On Sep 17,2011,By Muthjukumar


இன்சொல் மட்டுமே பேசுங்கள்
எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.
திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.
திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.
கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.
திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.
இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான
துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.
கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

No comments:

Post a Comment