Tuesday, September 20, 2011

மறந்தால்தானே நினைபபதறகு!


மறந்தால்தானே நினைபபதறகு!

Swine Flu
இந்த கன்றுக்குட்டிக்கு இவர்தான் கிருஷ்ணர் என்று தெரியுமா? அதன் தாய் பிருந்தாவன லீலைகளை இதற்கு எப்படிச் சொல்லியிருக்கும்? நூறு வருடங்கள் கழித்தும் அந்த மண்ணின் ஜீவனுக்கு கிருஷ்ணரை தெரிகிறதே! பக்தியையும் பிரேமையையும் ஞானத்தையும் கூட பிருந்தாவனப் பசுக்கள் பாலோடு தந்தனவோ என்று எண்ணி ருக்மிணி வியந்தாள்.
‘‘என் கண்ணையா... கோபாலா... கிருஷ்ணா... இங்கு வாப்பா’’ என்று யசோதை அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டாள். ‘‘எப்படியப்பா இருக்கிறாய்? உன்னை பார்க்க வேண்டுமென்றுதானடா வந்தேன். நான் வேறெங்கும் செல்வதில்லையடா. எனக்கு பூஜை இல்லை. புனஸ்காரம் இல்லை. எப்போதும் உன் நினைப்புதானடா, கண்ணா. இந்தா இன்னொரு கவளம் வெண்ணெய் சாப்பிடப்பா. அப்போது நீ வெண்ணெய் திருடும்
போதெல்லாம் உன்னை அடித்திருப்பேனடா... தினம் தினம் அதை நினைத்து அழுவேன் கண்ணா. ஆஹா... இப்போது குழந்தை வெண்ணெய்க்கு என்ன செய்வான், அங்கு யாரிடம் போய் கேட்பான் என்றெல்லாம் பரிதவித்திருக்கிறேன். அதனால் இப்போது இதை உண்டு விடப்பா...’’ என்று யசோதையை கொஞ்சியபடியே ஊட்ட எல்லோரும் நெகிழ்ந்து அழுதார்கள். பலராமர் ஓடி வந்தார். நந்தகோபர் பலராமரை மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.
பிருந்தாவனத்திலிருந்து வந்திருக்கிறார்கள் என்றதும் வசுதேவரும் தேவகியும் குந்தியும் ஓடி வந்தனர். யசோதையின் எளிமையையும் பிரேமையையும், அந்தப் பிரேமைக்குள் மூழ்கிப்போய் தன்னை மறந்திருக்கும் கிருஷ்ணரையும் பார்த்ததும் கண்ணீர் உகுத்தாள், தேவகி. இதுதான் தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசமா என்று தன்னை மறந்து யோசித்தாள். ரோகிணி எப்போதும் தேவகி பற்றியே யசோதைக்கு சொல்லிக் கொண்டிருப்பாள். ஆனால்,
பார்த்ததேயில்லை. இப்போது யசோதையிடம்
தேவகியை ரோகிணி அழைத்துப் போனாள்.
தேவகி யசோதையை கட்டிக் கொண்டாள். இருவரும் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். தேவகி யசோதையை பார்த்து, ‘‘நீ கொடுத்த இந்த கோபால ரத்தினம் இது. அன்றைக்கு நீ கொடுக்காது போனால் எனக்கு இப்படியொரு பிள்ளை கிடைத்திருக்குமா? உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்” என்று யசோதையிடம் கூறினாள்.
‘‘அப்படியல்ல தேவகி. என்னிடத்தில் ஏதோ பத்து வருஷம் வளர்ந்தான். நான் சரியாக வளர்த்தேனோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், நீ பாக்கியவதி தேவகி. நான் வளர்த்தது பெரியது இல்லை. அன்று பெற்றவுடனேயே என்னிடத்தில் கொண்டு வந்து சேர்த்தாயே அதுதான் உன் மனது. உன்னுடைய பாக்கியம்தான் பெரியது’’ என்று தழுதழுத்தாள்.
வசுதேவர் நந்தகோபரை கட்டிக் கொண்டார். ‘‘நந்தகோபா, சௌக்கியமா? உனக்கு நான் என்ன செய்து விட முடியும்? இன்றைக்கு நான் ராஜாதி ராஜனாக இருக்கலாம். அன்றைக்கு நான் எப்படி இருந்தேன் என்று உனக்குத் தெரியும். கைகளிலும், கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டு சிறையில் கிடந்தேன். ஆனால், இன்று நான் இப்படியிருக்க நீயே காரணம். இந்த உபகாரத்திற்கு உனக்கு என்ன கைம்மாறு செய்து விட முடியும்? இப்படியொரு பிள்ளையை எனக்கு வளர்த்துக் கொடுத்திருக்கிறாயே. உன்னை மறக்க முடியுமா நந்தகோபா.. ஒவ்வொருநாளும் நான் உன்னை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டேயிருப்பேன். கண்ணீரைத் தவிர வேறெதுவும் உனக்கு செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும்,’’ & வசுதேவர் உணர்ச்சி மயமாக பேசினார். நந்தகோபரின் கண்களில் நீர் துளிர்த்தது.
இப்போதுதான் கிருஷ்ணர் கொஞ்சம் திரும்பிப் பார்த்தார். கோபிகைகள் அப்படியே கண்கள் கலங்கி நின்றிருந்தார்கள். கிருஷ்ணர் எந்தவொரு சிறு வயதுகளில் அவர்களை விட்டுவிட்டு வந்தாரோ அதே வயதினராக அவர்கள் தோன்றினார்கள். நூறு வருடங்களில் அவர்கள் வயோதிகர்களாக மாறியிருக்க வேண்டும். கிருஷ்ணருக்கு நூறு வயது எனில் அவர்களும் நூறையாவது தாண்டியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் முகத்தில் வயது தெரியவில்லை. கிருஷ்ணர் எப்படி இருக்கிறாரோ அவர்களும் அப்படியே இருந்தார்கள். கிருஷ்ணரின் சொரூபம் இப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை. இங்கு கோபிகைகளும் அன்றிருப்பது போலவே இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். ராசலீலையின்போது அவர்கள் எப்படியிருந்தார்களோ அப்படியிருந்தார்கள். அதே
குமரிகளாக, அழகிகளாக.
‘‘ஹே.. சகிகளே... என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா’’ என்று கிருஷ்ணர் கேட்டார்.
எல்லோரும் அதிர்ந்தார்கள். நாங்கள் எப்போது மறந்தோம் மீண்டும் நினைப்பதற்கு என்று கிருஷ்ணரை பார்த்தனர். ஆனால், கிருஷ்ணன் தான்
மாறவேயில்லை என்பதாலேயே இப்படி கேலியாக எங்களைப் பார்த்துக் கேட்கிறான். இப்படி அவன் கேட்கவில்லை என்றால்தான் அவர்களுக்கு கோபம் வரும்.
எல்லா கோபிகைகளுக்கும் சட்டென்று பதில் சொல்லத் தெரியவில்லை. அப்படியே உருகி
நின்றார்கள். ராச லீலையை சொல்வதா, வெண்ணெய் திருடித் தின்றதை சொல்வதா, ஆற்றில் எங்கள் வஸ்திரங்களை அபகரித்துச் சென்றதை நினைவுபடுத்துவதா.. எதைச் சொல்வது என்று தெரியாது மயங்கினார்கள். எல்லா கோபிகைகளுக்கும் தலைவியான ராதையை கிருஷ்ணர் பார்த்து விட்டார். அவ்வளவு பெரிய கோபிகைகள் கூட்டத்தினூடே சென்று ராதையின் கைகளை பற்றிக் கொண்டார்.
‘‘ஹே... ராதே... எப்படியிருக்கிறாய்?’’ என்றதுமே அவள் கண்களை மூடிக் கொண்டாள். கோர்த்த கைகளை இறுக்கமாக பிணைத்துக் கொண்டாள். உதடு துடிக்க தவித்தாள். கிருஷ்ணர் முகத்தை தாங்கிக் கொண்டார். ‘‘இதோ பார். நான் சீக்கிரமாக வந்துவிடலாமென்றுதான் இருந்தேன். இங்கே ரொம்பவும் தொந்தரவாக இருக்கிறது ராதே. எவ்வளவு ராஜாங்க வேலை. எத்தனை மக்களை காப்பாற்ற வேண்டும். இங்கு ஓடி அங்கு ஓடி யாரையும் பார்க்க முடியவில்லையடி. ஆனால், தினமும் உறங்கும் முன்பு ராதே... ராதே... என்று உன்னை நினைத்துக் கொள்கிறேன். சரி, அடுத்த வாரம் போய் பார்த்து விடலாம்... அடுத்த மாதம்... வரும் வருடம்... என்று போய்க் கொண்டே இருந்தது. இதோ நூறு வருடம் கடந்து விட்டது’’ &கிருஷ்ணர் சொல்ல ராதை குழைந்தாள்.
ராதைக்கு கிருஷ்ணனை நூறு வருடங்களாக பார்க்கவில்லையே என்கிற தாபம் பெரிதாக படவில்லை. இப்போது பார்த்து விட்டோமே என்கிற ஆனந்தமும் பெரிதில்லை. நூறு வருடங்களாகியும் கிருஷ்ணரை தான் மறக்காது துடிப்பதும் ஆச்சரியமாகப் படவில்லை. ஆனால் தன்னை அவன் தினம் தினம் எண்ணி வாழ்ந்திருக்கிறானே என்பதை அறிந்தபோது, ராதையால் நிற்க முடியவில்லை. அப்படியே கிருஷ்ணரின் மார்பில் சாய்ந்து கொண்டாள். முதுகை தடவி கிருஷ்ணர் ஆசுவாசப்படுத்தினார். தொலை தூரத்தினின்று ருக்மிணி இதை பார்த்தாள். யாரை துவாரகாதீசன் ஆற்றுப்படுத்துகிறார் என்று அருகே வந்தாள். அவளுடனேயே பாமா, ஜாம்பவதி என்று அஷ்ட மகிஷிகளும் கூடவே வந்தார்கள்.
‘‘ருக்மிணி, இவள்தான் ராதை. உன்னிடம் கதை கதையாக நிறைய சொன்னேனல்லவா... அந்த ராதை இவள்தான். இவள் என் தோழி. என் காதலி. என் சிஷ்யை. ஏன் எனக்கு பிரேமையை சொல்லிக் கொடுத்த குரு. என் இதய ராணி. எனக்குள், என்னோடேயே உறையும் ஆத்மா’’ என்று கம்பீரமாக, முகம் மலர அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பு எந்த ராஜ்ய சபையிலும் கிருஷ்ணர் இப்படி கலங்கிப் பேசி யாருமே பார்த்ததில்லை.

No comments:

Post a Comment