Saturday, July 26, 2014

பொன்னாக மாறிய புற்றுமண்! அம்மன் அற்புதங்கள்

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் வழியில் அழகுற அமைந்திருக்கிறது சாமுண்டிபுரம். கிராமத்தின் பெயருக்கு மட்டுமல்ல, அதன் சிறப்புக்கும் செழிப்புக்கும் காரணமாகத் திகழ்கிறாள், அங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசாமுண்டி அம்மன்.
மண்ணும் பொன்னான அற்புதம்!
ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் அது.  வளையப்ப செட்டியார் என்பவர், வளையல் வியாபாரத்துக்காகப் புறப்பட்டார். வழியில் புற்று ஒன்று தென்பட்டது. அதை அவர் கடக்கும் தருணத்தில், திடுமென புற்றுக்குள் இருந்து ஒரு கை நீண்டது. வளையப்பர் திடுக்கிட்டார். தொடர்ந்து ஒலித்த அசரீரி, ‘எனக்கும் வளையல் அணிவித்து விடு’ என்றது. அவ்வாறே செய்த வளையப்பரும், வளையல்களுக்குக் கூலி கேட்டார். ‘கீழேயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொள்’ என்றது அசரீரி. அதன்படியே வளையப்பர் ஒரு பிடி மண்ணை அள்ளியெடுக்க, அந்த மண் பொன்னாக மாறி மின்னியது!
இந்தத் தகவல் ஊருக்குள் பரவியது. புற்றின் சாந்நித்தியத்தை அறிந்து சிலிர்த்த மக்கள், அன்றிலிருந்து அந்தப் புற்றையே அம்மனாகக் கருதி, வழிபடத் துவங்கினார்களாம். பிற்காலத்தில் கி.பி. 1558-ல், திப்புசுல்தான் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் சரித்திரத் தகவல் உண்டு.
வளைகாப்பு நாயகி!
ஸ்ரீசாமுண்டி, வளையல் பிரியை ஆயிற்றே! எனவே, வளையல் பிரார்த்தனையும் இங்கே பிரசித்தம். வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாத பெண்கள், கோயிலுக்கு வந்து அம்மனுக்கு வளையலும் பூமாலையும் வாங்கித் தருகிறார்கள். அவற்றை அம்மனுக்குச் சாற்றிய பிறகு, பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கே அம்மன் பிரசாதமாகத் திருப்பித் தருகிறார்கள். இது, வளைகாப்பு செய்வதற்குச் சமம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
பலிக்கும் பிரார்த்தனைகள்
அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு மற்றும் மஞ்சள் கயிறு மாலை அணிவித்து வழிபட்டு, 9 பேர் அல்லது 11 பேர் என்ற (ஒற்றைப்படை) எண்ணிக்கையிலான சுமங்கலிப் பெண்களுக்கு அந்த மஞ்சள் கயிற்றை வழங்கினால், தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும். அதேபோன்று, கோயிலைச் சுற்றியுள்ள நிலங்களில் அறுவடைக்கு முதல் நாள், நிலத்தில் விளைந்த பயிரின் விளைச்சலை அம்மனுக்கு வைத்து வழிபட்ட பிறகே அறுவடையை ஆரம்பிக்கிறார்கள். இதனால் மகசூல் அதிகமாகும் என்பது நம்பிக்கை.
நினைத்தது நிறைவேறும்
ஆடி வெள்ளி- செவ்வாய்க் கிழமைகளில் அம்மனுக்கு நடைபெறும் விசேஷ வழிபாடுகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வழிபட, தொழிலில் விருத்தியும், இல்லத்தில் செழிப்பும் உண்டாகும். மேலும், ஆடி மாதத்தில், சாமுண்டி அம்மனை விளக்கேற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் சமர்ப்பிப்பதும், அன்னதானம் செய்வதும் இங்கே விசேஷமாக நடைபெறுகிறது.
அம்மன் தெற்கு நோக்கி அருள்வது சிறப்பம்சம் என்கின்றனர். கணபதி, அக்னி பைரவர், கால பைரவர், ராக்காச்சி அம்மன் மற்றும் நாக கன்னியர்களையும் இங்கே தரிசிக்கலாம்.
அண்ணனுக்கு சீர்வரிசை!
கம்பம் நகரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகம்பராய பெருமாள், சாமுண்டி அம்மனுக்கு அண்ணன் முறையாம். ஆனி மாதம் பெருமாள் கோயிலில் திருவிழா துவங்கும். முதல் நாள் கொடியேற்றத்தன்று அண்ணனுக்கு சீர்செய்வதற்காக அங்கு எழுந்தருள்வாள் சாமுண்டி அம்மன்.
நிறைவு நாளன்று அண்ணனுக்குச் சீர் செய்யும் அம்மன் பதில் சீர் தரும்படி கேட்க, பெருமாள் கோயிலில் இருந்து சாமுண்டி அம்மனுக்கு பதில் சீர் தரப்படுகிறது. ஆனால் அது தனக்குப் போதாது என்று கோபித்துக் கொண்டு அம்மன் தனது ஆலயத்துக்கு திரும்புகிறாள்!
சகோதர- சகோதரி உறவின் உன்னதத்தையும் அவர்களுக்கு இடையேயான உரிமைகளின் சிறப்பையும்… தெய்வத்தை முன்னிலைப்படுத்தி விளக்கும் இந்த விழா- வைபவத்தை வாழ்வில் ஒருமுறையேனும் நாம் தரிசிக்கவேண்டும்.

Wednesday, June 25, 2014

மந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை

Posted On 26/06/2014 By Muthukumar
om
நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம்.  மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர்.  ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன.  பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன.  சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை.  இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான்.  மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள் உள்ளன.  அவற்றில் எல்லாவற்றையும் பின்பற்ற இயலாது.  ஒரு சில விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மந்திர செபத்தில் வெற்றி பெற எமக்கு தெரிந்த விதிமுறைகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-
 1. மந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.
 2. மந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்.
 3. மந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்.
 4. மந்திர செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
 5. மந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
 6. மந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின்  நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
 7. மந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
 8. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்.
 9. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.
 10. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்.
 11. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.
 12. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.
 13. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.
 14. பால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
 15. உணவில் தயிர் சேர்க்கக்கூடாது.  தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.
 16. உணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும்.  இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.
 17. செபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.
 18. ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.
 19. மற்றொரு சங்கினை எடுத்து ஊத வேண்டும்.
 20. மந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.
 21. பால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
 22. சங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.
 23. 12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.
 24. பிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.
 25. மந்திர செபம் முடிந்தவுடன் சங்கினை ஊதி மேற்கண்ட எலுமிச்சை பானத்தினை அருந்த வேண்டும்.
 26. அதன் பின்னர் மற்றொரு சங்கில் வைத்த இளநீரினை பருக வேண்டும்.
 27. மந்திர செபம் செய்வதை யாரிடமும் கூறக்கூடாது.
 28. முதல் நாளிலேயே அதிகமாக செபம் செய்ய கூடாது.
 29. படிப்படியாக செபம் செய்யும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும்.
 30. ஒரே இடத்தில் தான் செபத்தினை செய்ய வேண்டும்.  அடிக்கடி இடத்தினை மாற்றுதல் கூடாது.
 31. வெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.
 32. உயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.
 33. கால சந்திகளில் செபம் செய்தல் மிகுந்த பலனை கொடுக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!