Friday, September 9, 2011

நேரில் தரிசனம் தந்த ஸ்ரீ ராம , லட்சுமணர் - மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் !

Posted: 09 Sep 2011,By Muthukumar,

 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTwFQy2eNznaQPR85elc5dTodUCSsK5zLaufInczU6D4kzJF3hM5w
உண்மையிலேயே கடவுளைக் காண முடியுமா, அப்படிக் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால், பதில், ஆம். இருக்கிறார்கள் என்பதுதான். கடவுளைக் கண்டது மட்டுமல்ல; அவ்வாறு கண்டதை அவர்கள் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது.


 Colonel Lionel Blaze (கலோனெல் லையோனெல் ப்ளேஸ்) என்பவர் 1795 – 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு ஆங்கிலேயே அதிகாரி. இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல; சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம்.

 ஒருநாள்… அவரது ஆட்சிக்குட்பட்ட மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. அவ்வாறு உடைந்தால் அந்த ஊரும் சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களும் வெள்ளத்தால் அழிந்து விடும். அதனால் அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரைச் சந்தித்து ஏதாவது செய்யும் படி வேண்டிக் கொண்டனர். அந்த அதிகாரி உடனே மக்களிடம், ”நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே?” என்று கேட்டார்.
 உடனே அங்குள்ள பெரியவர் ஒருவர், “ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ஸ்ரீராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்” என்றார் நம்பிக்கையுடன். ”ம், அதையும் தான் பார்ப்போமே” என்று சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார் அந்த அதிகாரி. மக்களும் ஸ்ரீ ராம பிரானை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர்.
நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.


 வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ” இந்த மழைக்கு நிச்சயம்  இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்” என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.

 அந்த வெளிச்சம் அடங்கும்போது  , ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும் வில்லேந்தியிருந்தார்கள். ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி கண்டார். அடுத்தாற்போல் அக்காட்சியைக் கண்ட அந்த ஆங்கிலேய அதிகாரி, தரையில் மண்டியிட்டு விழுந்து ஏதேதோ சொல்லிச் சொல்லி அரற்றினாராம். 

மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி, தான் கடவுளைக் கண்ட சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன் அன்று முதல் ஸ்ரீ ராமபிரானின் பக்தராகவும் ஆனார். ஸ்ரீ தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார். நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வெட்டிலும் வெ பதிப்பித்தார். – “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம்.




அந்த ராமர் கோயிலின் பெயர் 'ஏரி காத்த பெருமாள்'.


மூலவர் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் கைகளைப் பற்றியவாறு, நின்ற திருக்கோலத்தில், கோதண்டராமராகக் காக்ஷி தருகிறார். தர்மத்தைக் காக்க திருஅவதாரம் செய்து தானே மனிதனாக வாழ்ந்த ராமபிரான் சீதா லக்ஷ்மண ஸமேதராய் எழுந்தருளியிருக்கிறார். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் இருக்கிறார். ஸ்ரீதேவி பூதேவி சமேத கருணாகரமூர்த்தியும் இங்கு எழுந்தருளியுள்ளார். கர்ப்பக்ருஹத்திற்குள்ஆஞ்சநேயர் இல்லை என்பது ஆச்சர்யம்.

ஆஞ்சநேயர், கோயிலுக்கு வெளியே புஷ்கரிணியின் கரையில் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

மனைவியின் கரம் பிடித்த ராமன் : ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் மூலஸ்தானத்தில், சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு காட்சி தந்ததாகச் சொல்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஜனக மகராஜாவின் மகளாகவளர்ந்ததால் இவளுக்கு இப்பெயர்.)

தனிச்சன்னிதியில்
யந்த்ர சக்கரத்தாழ்வார் காக்ஷி தருகிறார். பின்புறம் யோக நரசிம்ஹர். ஆண்டாள், ராமனுஜருக்குத் தனிச்சன்னிதிகளும் உள்ளன. நவநீதக்கண்ணன் ராமானுஜர் சன்னிதியில் காக்ஷி தருகிறார்.

ஆண்டாள் சந்நிதிக்கு அருகில் உள்ள மகிழமரத்தடியில்தான் ராமாநுஜர் பெரிய நம்பிகளிடம் மந்திர உபதேசம்பெற்றார் என்பதும் அங்கு பொறிக்கப்பட்டு வரைபடமாகவும் உள்ளது.
 

பிரகலாத வரதன் : கம்பராமாயணம் எழுதிய கம்பர், அதை அரங்கேற்றும் முன்பு ராமன் தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது, ஓரிடத்தில் சிங்கம் உறுமும் சத்தம் கேட்டது. பயந்துபோன கம்பர், அவ்விடத்தைப் பார்த்தபோது நரசிம்மர் லட்சுமியுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் சிங்க முகமில்லாமல், மனித முகத்துடன் சாந்த நரசிம்மர் சிலை வடிக்கப்பட்டது. உற்சவரான இவரை "பிரகலாத வரதன்' என்கின்றனர். 

ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்: ஸ்ரீரங்கத்தில் சேவை செய்து வந்த ஆளவந்தாரின் சீடர் பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுப்பதற்காக காஞ்சிபுரம் சென்றார். இவ்வேளையில் ராமானுஜர் அவரிடம் தீட்சை பெறுவதற்காக ஸ்ரீரங்கம் கிளம்பினார். இருவரும் இத்தலத்தில் சந்தித்துக் கொண்டனர். பெரியநம்பி ராமானுஜருக்கு ஆச்சார்யாராக இருந்து இத்தலத்திலேயே "பஞ்ச சம்ஸ்காரம்' என்னும் தீட்சை செய்து வைத்தார். இந்த வைபவம் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியன்று இக்கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் நடக்கும்.

ராமர் பூஜித்த கருணாகரர்: ராமர் தலமாக இருந்தாலும் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் கருணாகரப்பெருமாளே (உற்சவர்) பிரதான மூர்த்தியாக அருளுகிறார். விபண்டகரால் பூஜிக்கப்பட்ட இவரே விழாக் காலங்களில் பிரதானமாக புறப்பாடாகிறார். பங்குனி உத்திரத்தன்று ஜனகவல்லித் தாயாரையும், போகிப்பொங்கலன்று ஆண்டாளையும் மணந்து கொள்பவரும் இவரே ஆவார். இங்கு வந்த ராமர், சீதையை மீட்க அருள வேண்டி இவரை பூஜித்துச் சென்றார். இதனால் இவருக்கு பிரதான இடம் பெற்றிருக்கிறார். தவிர ராமருக்கும் உற்சவ வடிவம் உண்டு.

யந்திர சக்கரத்தாழ்வார்: பதினாறு கரங்களுடன் அக்னி கிரீடம் அணிந்த சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யந்திரத்துடன் சுவாமியை தரிசிப்பது நிறைந்த பலன் தரும். இவருக்குப் பின்புறமுள்ள யோக நரசிம்மர் நாகத்தின் மீது காட்சி தருகிறார். சித்திரை நட்சத்திர நாட்களில் இச்சன்னதியில் சுதர்சன ஹோமத்துடன் பூஜை நடக்கும்.

குரு சிஷ்யர் தரிசனம்: ராமானுஜரும், அவருக்கு தீட்சை கொடுத்த பெரியநம்பியும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். ராமானுஜர் தீட்சை பெறும் நிலையில் வணங்கிபடியும், பெரியநம்பி ஞானமுத்திரை காட்டியபடியும் இருக்கின்றனர். இவ்வாறு குரு, சிஷ்யர் இருவரையும் ஒரே சன்னதியில் தரிசிக்கலாம். குழந்தைகள் கல்வியில் சிறப்புப் பெற, இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்தச் சன்னதியில் பெரியநம்பி பூஜித்த குழந்தை கண்ணன் இருக்கிறார். இவர் கையில் வெண்ணெயுடன், வலக்காலை மலர் மீது வைத்த நிலையில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு தொட்டில் சேவை செய்து வைத்து வேண்டுகிறார்கள்.

தீட்சை முத்திரைகள் : பெருமாள் பக்தர்களுக்கு தீட்சை தரும்போது, கைகளில் சங்கு, சக்கர முத்திரைகள் பதிப்பர்.

பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுக்க பயன்படுத்திய சங்கு, சக்கர முத்திரைகள் இக்கோயிலில் உள்ளது. 1935ல் கோயில் திருப்பணி நடந்தபோது, இம்முத்திரைகள் இங்கு கிடைத்தது. இந்த சங்கு, சக்கர தரிசனம் கிடைப்பது மிக அபூர்வம்.


No comments:

Post a Comment