Saturday, March 31, 2012

இளமையின் சுகமான சிந்தனைகள்

Posted On March 31,2012,By Muthukumar
இளம் பருவத்து இனிய நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றன.
கை கால்களுக்கு ஜீவனிருக்கும் காலத்தில் மரங்களின் உயரம் கூடக் குறைந்து விடு
கிறது.
ஏரியில் நீந்திய மீனுக்குத் தெரியும், அதைவிட நான் எவ்வளவு வல்லவன் என்று.
இளமை என்பது ஒரே ஒரு தரம் ஆண்டவனால் பரிசளிக்கப்படுகிறது.
மாமரத்தில் மாங்காய் காய்க்கும் போது மனித மனத்திலே துடிதுடிப்பிருக்கும் காலமே
இளமைக்காலம்.
இளமையின் சிந்தனைகள் சுகமானவை.
அவை வானக் கூரையைப் பிளந்து கொண்டு மேலே தாவுகின்றன.
காட்டாற்று வெள்ளத்தில் குதித்து எதிர் நீச்சல் போடுகின்றன.
கங்கை நதிக்கு குறுக்கே பாய்ந்து, தன் கைகளாலேயே அதைத் தடுத்து நிறுத்த முயல்கின்றன.
ரத்தத்தின் ஜீவ அணுக்கள் சித்தத்தை துடிதுடிக்க வைக்கின்றன.
இன்பம் துன்பம் இரண்டிலும் மிகைப்பட்ட நிலையை இளமைக்காலம் கண்ணுக்குக் காட்டுகிறது.
அது மேளச் சத்தத்தோடு சேர்ந்து கொள்கிறது.
வீணையின் ஒலியில் நர்த்தனமாடுகிறது.
மார்கழிப் பனியில் சட்டையைக் கழற்றிவிட்டு அந்தப் பனியை அனுபவிக்கச் சொல்கிறது.
கோடை காலத்து வியர்வையைக் கம்பீரமாகத் துடைத்துவிடச் சொல்கிறது.
`இப்போது உனக்கு என்ன வேண்டும்' என்று இளமையைக் கேட்டால், `எல்லாம் வேண்டும்' என்கிறது.
இரதத்திலே கயிற்றைக் கட்டிப் பல்லாலே இழுக்கிறது.
முதுமையில் தூக்கவே முடியாத எலும்புகளைப் பல்லால் நறநறவென்று கடித்துத் துப்புகின்றது.
கிராமத்து வாழைத் தோட்டங்களுக்குள்ளே ஓடி விளையாடச் சொல்கிறது.
எந்தப் பெண்ணைக் கண்டாலும் மனம் ஏதோ செய்கிறது.
ஆடல், பாடல், எதிர்வழக்காடல், ஏச்சுக்கு ஏச்சு, பேச்சுக்குப் பேச்சு- ருத்ர மூர்த்தியின் ஆனந்தத் தாண்டவம், இளமையின் ஊழிக்கூத்து.
எனக்குப் பன்னிரண்டு வயதான போது கிராமத்தின் பனை மரத் தோப்புகளில் அடிக்கடி அமர்ந்திருப்பேன்.
மாடு மேய்க்கும் சிறு பெண்கள் பாடிக்கொண்டே போவார்கள்.
ஆயர்குலச் சிறுவர்கள் சுதி சேராமல் புல்லாங்குழல் வாசிப்பார்கள்.
பருந்தைப் பார்த்தால் பறக்க நினைப்பேன்.
வெள்ளாடுகளைப் பார்த்தால் ஓட நினைப்பேன்.
பூமியைக் குத்தியதும் பீறிட்டுக் கிளம்பும் செயற்கை நீரூற்றுகளைப் போல வாலிபத்தின் சிந்தனையும் வளமானதாகவே இருந்தது.
அது ஆடி மகிழ்ந்த காலம்.
இது எண்ணிப் பார்க்கின்ற காலம்.
அதே துடிதுடிப்பை மீண்டும் பெறுவதற்கு நான் வைத்தியரை நாடப் போவதில்லை.
அந்தச் சுகமான சிந்தனைகளை இப்போது நான் வேறு பக்கம் திருப்பி இருக்கிறேன்.
வேதாந்தத்தில்,
தத்துவ விசாரத்தில்,
-சுகமான சிந்தனைகள் புறப்படுகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்த சில விஷயங்கள், இப்போது ஜீரணிக்கப்படுகின்றன.
`சிந்தனையில் எனக்கு என்ன வேண்டும்' என்று அருட்பெரும் ஜோதி வள்ளலாரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
`தம்பி! மனம் சலனமுடையது; சபலம் மிக்கது; ஆனால் அக்கம் பக்கம் திரும்பாமல் ஒரே நோக்கில் ஆண்டவனை எவன் தியானிக்கிறானோ, அவனது நட்பு உனக்கு வேண்டும்.
கோயில் கட்டுகிறேன் என்பான்; கோயில் சொத்திலேயே கொள்ளையடிப்பான்.
அரகர சிவ சிவ என்பான்; அங்கு வரும் பெண் மீதே கண்ணாக இருப்பான்.
மனம் ஒன்று நாடும்; காதொன்று கேட்கும்; வாயொன்று பேசும்;
இவன் பக்தனல்ல; போலி; வேடதாரி.
ஒருமையுடன் தியானிக்கும் உத்தமர் தம் உறவு உனக்கு வேண்டும்.
உள்ளத்தில் வஞ்சம் மறைந்திருக்கும்; முகத்திலே புன்னகை மலர்ந்திருக்கும்.
`வாருங்கள் வாருங்கள்' என்று வாயால் அழைப்பான்; சமயம் வாய்த்தால் காலைத்தான் வாருவானே தவிர உன்னை வரவேற்க மாட்டான்.
`பொய்' என்று தெரிந்து கொண்டே சத்தியம் செய்வான், அவன் கள்ளத்தில் பூத்த மலர்; கபடத்தில் புழுத்த புழு; வெள்ளத்தில் வந்த குப்பை; வேஷத்தில் வாழும் மனிதன்.
அந்த நடிகனோடு, நீ உறவு கொள்ளாதே!
பாடுவதென்றால், மனிதனைப் பற்றிப் பாடாதே; இறைவனைப் பற்றிப் பாடு; பேசுவதென்றால் அவனைப் பற்றியே பேசு.
அவன் ஏராளமான வரங்களை உனக்கு அள்ளித் தரா விட்டாலும் உன்னைக் கேலி செய்யமாட்டான்.
தோளிலே கைபோட்டுப் பையிலே என்ன இருக்கிறது என்று தடவும் நண்பனை விட்டு விலகு.
யாரையோ, ஊரையோ காப்பாற்ற வேண்டுமானால் பொய் பேசு; இல்லையேல் பொய்யே பேசாதே.
ஆசைகளில் எல்லாம் உச்சமான ஆசை எது தெரியுமா?
பெண்ணாசை!
மூன்று நாட்களாகப் பட்டினி கிடக்கும் ஒருவனின் முன்னால் சோற்றையும் வைத்துப் பெண்ணையும் வைத்தால் அவன் முதலில் பெண்ணையே தொடுவான்.
மனித மனத்தின் மைய மண்டபத்தில் இருந்தே துயரங்கள் எழுகின்றன.
வாளிப்பான உடம்பையும், வளமான கூந்தலையும் பார்த்து மோகித்து விடாதே.
இந்திரியம் தீர்ந்துவிட்டால், சுந்தரியும் பேய் போலே!
பெண்ணை மறக்க எப்போது `கற்றுக்' கொள்கிறாயோ, அப்போது உன்னை நினைக்கக் கற்றுக் கொள்கிறாய்.
உன்னை நினைக்கக் கற்றுக் கொண்டு விட்டால், நீ மறக்கவே முடியாதபடி தெய்வம் வந்து உன் மனத்திலே உட்கார்ந்து கொண்டு விடும்.
எல்லாவற்றுக்கும் `அறிவு' வேண்டும்.
அவனது `கருணை' என்னும் நிதி வேண்டும்.
மதத்திலே அன்பு வேண்டும்; வெறி கூடாது.
ஒழுக்கம் என்னும் நெறி வேண்டும்; அடுத்தவன் பணத்தில் குறி கூடாது.
பலபேர் சொன்ன விஷயங்கள்தான். அவற்றைப் பற்றி ஒழுகாத காரணத்தால் வயதான காலத்தில் புலம்புவோர் எவ்வளவு பேர் தெரியுமா?
அதனால்தான் `சென்னை நகரக் கந்த கோட்டத்தில் குடியிருக்கும் சண்முகவேலைப் பற்றி இப்படிப் பாடினேன்' என்று பாடிக்காட்டினார்:
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மைபேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வுதான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்
தலம் ஓங்கும் கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!
-இந்தத் தத்துவங்களில் எனக்கு எவ்வளவு அனுபவங்கள் தெரியுமா?
நான் கடன்பட்டுக் கஷ்டப்பட்ட காலத்தில் என்னைக் காப்பாற்றுவார் என்று ஒரு வழக்குரைஞரை அண்டினேன்.
அவருடைய சகாக்களோ, என்னுடைய எதிரிகளுக்கெல்லாம் நண்பர்களாக இருந்தார்கள்.
வாங்காத கடனை எல்லாம் நான் கட்டவேண்டியிருந்தது.
கையெழுத்தும் இல்லை; நான் வாங்கவும் இல்லை; அப்படி இருந்தும் ஒரு வழக்கு என்மீது டிகிரி ஆயிற்று.
அவர் சிரித்துப் பேசுவார்; `கவிஞரே' என்று உயிரை விடுவார்.
ஆனால், அந்தரங்கத்தில் என் கழுத்தை அறுத்து விட்டார்.
இறைவனுடைய தர்மச்சக்கரம் நியாயம் கேட்கும் என்பதைத் தவிர, வேறு எதை நான் எதிர்பார்க்க முடியும்?
கடவுளின், தண்டனையை நான் நம்புகிறேன்.
உத்தமமான பக்தனுக்குக் கூடத்தான் சோதனைகள் வருகின்றன; ஆனால், அவை காலம் பார்த்து மீளுகின்றன.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகர்களோ, ஆனந்தமாக வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
அடிவிழ ஆரம்பித்தால் அவர்களைத் தூக்கிப் பிடிக்க ஆள் இருக்காது.
அவர்களது பிணத்தின் முன்னால்கூட மற்றவர்கள் குசுகுசுவென்று கேவலமாகப் பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, புகழ்ந்து பேச மாட்டார்கள்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட என்னுடைய தந்தையார் சில நகைகளை ஒருவரிடம் ஈடு வைத்தார்.
ஐயாயிரம் ரூபாய் பொறுமானமுள்ள நகைக்கு ஆயிரமோ, ஆயிரத்து ஐநூறோதான் வாங்கி இருப்பார்.
மீட்பதற்கு வசதி இல்லாமற் போய்விடும்.
நகை வட்டியிலே மூழ்கி விட்டதாகச் செட்டியார் அறிவித்து விடுவார்.
இப்படிப் போன சொத்துக்கள் ஒன்றா, இரண்டா?
என் தாயார் அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார்கள், `நந்தம் படைத்த பண்டம் நாய் பாதி; பேய் பாதி' என்று.
சென்னை அயனாவரம் கிராமமே எங்களைச் சேர்ந்தது.
அங்கே வாழுகின்ற மக்கள் அனைவரும் அறிவார்கள்.
மத்திய அரசாங்கம் கோச் பாக்டரி கட்டியிருக்கும் இடமும் எங்கள் இடமே.
இன்று பத்துக்கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்தச் சொத்துக்களில் ஒரு அங்குலம் கூட எங்களுக்கு உதவவில்லை.
அதனை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தவர் வசதியாக அதனை அனுபவித்தார்.
முன்பெல்லாம் அவர் எப்போது சந்தித்தாலும், `எதற்காகக் கவலைப்படுகிறீர்கள்; உங்கள் சொத்து கோடி பெறும்' என்பார்.
அந்தக் கோடியையும் தான் அனுபவிக்க நினைத்தாரே தவிர, எங்களுக்குத் தர விரும்பவில்லை.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் சுமார் முப்பது வழக்குகள் நடைபெறுகின்றன.
ஒரு வழக்கு முடிந்து சுமார் இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு இடம் எங்களுக்குத் தீர்ப்பாயிற்று.
நானும் எனது சகோதரர் ஏ.எல்.எஸ். அவர்களும் அந்த இடத்தைச் சென்று பார்த்த போது, அங்கே `கருணாநிதி நகர்' என்று போர்டு போட்டிருந்தது. சுமார் நூறு குடிசைகள் போடப்பட்டிருந்தன.
அந்தக் குடிசைகளை இடித்துத் தள்ளுவதற்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அந்தப் பகுதியில் வாழும் திரு. வேலூர் நாராயணன் அவர்களோடு குடிசைவாசிகளை அணுகிக் கேட்டோம்.
யாரும் குடிசைகளைக் காலி செய்வதாக இல்லை.
என் சகோதரரும் போனால் போகட்டும் என்று விட்டு விட்டார்.
இன்னும் ஐகோர்ட் உத்தரவு எங்கள் கையில் இருக்கிறது.
அந்தச் சொத்துக்கு முதல் பங்காளியான என் சகோதரி, என் வீட்டிலேயே என் அரவணைப்பிலேயே வாழ்ந்து, அதே ஏக்கத்திலேயே மாண்டு போனார்.
வஞ்சகர்களை நம்பினால் சொத்துக்கள் போகும்; மானம் பறிபோகும்.
உத்தமர்கள் உறவு, தலைமாட்டிலேயே காவலிருக்கும்.
1944-ல் முதன் முதலாக `திருமகள்' என்ற பத்திரிகையில் எனக்கு வேலைக்காகச் சிபாரிசு செய்து ஒரு நண்பர் கடிதம் கொடுத்தார்.
திருச்சியில் அவர் கடிதம் கொடுத்தார். நான் புதுக்கோட்டைக்குப் போக வேண்டும்.
கையிலே பணம் இல்லை.
`மலையரசி தாயே' என்று வேண்டியபடி பாலக்கரை வழியே நடந்து கொண்டிருந்தேன்.
திடீரென்று ஒரு கடை என் கண்ணில்பட்டது.
அது ஒரு வட்டிக் கடை அல்ல, வட்டக் கடை.
கொஞ்சம் கமிஷன் எடுத்துக் கொண்டு நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்கும் கடை.
அதிலே உட்கார்ந்திருந்தார் ஒருவர்.
அவர் பெயர் வையிரவன் செட்டியார். எங்கள் ஊரைச் சேர்ந்தவர்.
நான் அவரிடம் போய் கடிதத்தைக் காட்டிக் கெஞ்சினேன்.
அவர் ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.
காலத்தால் அவர் செய்த அந்த உதவி எனக்கு முதல் உத்தியோகத்தை வழங்கிற்று.
இறை நம்பிக்கையின் விளைவாகத் துன்பத்துக்கிடையேயும் இன்பமும் தோன்றுவதை நான் பார்க்கிறேன்.
இப்போது நான் நினைத்தால் செய்ய முடியாத பல காரியங்களை, இதற்கு முன்னாலேயே செய்து முடிக்கும்படி இறைவன் எனக்கு உதவி இருக்கிறான்.
உதாரணம், எனது ஐந்து புதல்வியரின் திருமணங்கள்.
எனது ஏராளமான ஆழ்ந்த தத்துவார்த்த எழுத்துக்கள்.
நான் கவிதையிலே பொய் சொல்லுவேன், கற்பனை என்ற பெயரில். ஆனால், வாழ்க்கையில் பொய் சொல்ல மாட்டேன்.
எனக்கு மதநெறி உண்டு; வெறி கிடையாது.
எங்கே, இப்போது மீண்டும் வள்ளலார் பாடலைப் படித்துப் பாருங்கள்.
இந்தப் பாடல், துயரப்பட்டபின் எனது சிந்தனையைக் கிளறிற்று.
உங்களுக்கு இதுவே ஒரு சுகமான சிந்தனையாக இருக்கும்.

No comments:

Post a Comment