Sunday, March 18, 2012

ஞானியின் பக்குவம்

Posted On March 18,2012,By Muthukumar

இறைவனை நெருங்கிவிட்ட ஞானிக்கு அரசனும் துரும்பாகி விடுகிறான்.
கனபரிமாணத்தில் அளவிட முடியாததாக இருக்கும் ஆலமரத்தைக் கண்ணுக்குத் தெரியாத காற்றும் சாய்த்து விடுகிறது.
துறவிக்கு வேந்தன் துரும்பு.
சொத்து சுகங்களில் எவனுக்குப் பற்றில்லையோ, அவனுக்கு இவை எல்லாமே துச்சம்.
`நான், நான்' என்னும் ஆணவத்தைப் பற்றி, `அர்த்தமுள்ள இந்து மதம்' முதல் பாகத்தில் எழுதியிருக்கிறேன்.
அந்த ஆணவம் போகிக்கு வரும்; யோகிக்கு வராது.
எல்லாவற்றையும் கடந்த நிலை ஞானியின் நிலை.
`என்னுடையது' என்று சொல்ல இறைவனைத் தவிர அவனுக்கு எதுவும் இல்லை.
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.
அந்த மிராசுதார் ஒரு பெரிய நஞ்சை நிலப்பரப்பைக் காட்டி, `இவையெல்லாம் என்னுடையவை', என்றார்.
தன்னுடைய சொத்துக்களை ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டி, `இது எனக்குச் சொந்தம்', என்றார்.
கடவுள் அமைதியாக அவருடைய உடம்பைச் சுட்டிக் காட்டி, `இது எனக்குச் சொந்தம்', என்றார்.
எவ்வளவு பெரிய ஆணவக்காரனும் இறுதியில், இறைவன் என்னும் நெருப்புக்கே சொந்தமாகி விடுகிறான்.
ஆனால், பற்றற்ற துறவியின் சடலம் எரியும்போது கூட அந்த நெருப்பு அவர்கள் ஊணுடலை எரிப்பதோடு நின்று விடுவதில்லை; ஞான ஒளியையும் பரப்புகிறது.
புறப்பட்ட இடம் எவனுக்குத் தெரிகிறதோ, அவனுக்கே தான் போய்ச் சேர வேண்டிய இடமும் தெரியும்.
ஜனநாயகத்தில் ஐந்து வருட காலம் என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வருகிறவனே, அந்தப் பதவி நிரந்தரமானது, என்பது போல் ஆடத் தொடங்கி விடுகிறான்.
அவன் மந்திரியான உடனே அரசாங்கக் கார்கள் ஓடி வருகின்றன.
அதிகாரிகள் `சலாம்' போடுகிறார்கள்; போலீஸ்காரர்கள் `சல்யூட்' அடிக்கிறார்கள்.
அதே போலீஸ்காரன் ஒரு சமயத்தில் அதே மந்திரியை கைது செய்கிறான்.
தான் நியமித்த நீதிபதியாலே அவன் விசாரிக்கப்படுகிறான்.
தான் நிர்வகித்த சிறைச்சாலைக்குள்ளேயே அவன் குடியேறுகிறான்.
மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ, அப்படியே அவனும் நடத்தப்படுகிறான்.
ஆனால், பற்றற்ற துறவிக்கோ, இந்தச் சிக்கல்கள் எவையும் இல்லை.
தன் உடலுக்காக ஒரு `சோப்பு'க் கூட அவன் வாங்குவதில்லை.
கங்கையில் தண்ணீர் ஓடினால் அவன் குளிக்கிறான்; அது வற்றிவிட்டால் அவன் கிணற்றுத் தண்ணீரை நாடுகிறான்.
ஆனால், பதவி மோகக்காரனோ, ஒரு புதிய கங்கையை உற்பத்தி செய்ய விரும்புகிறான்.
`விட்டுவிடப் போகுதுயிர், விட்டவுடனே உடலை சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்,' என்றார் பட்டினத்தார்.
`மேல் விழுந்து உற்றார் அழுமுன்னே ஊரார் சுடும் முன்னே குற்றாலத்தானையே கூறு' என்றார்.
மரணம் நிச்சயம் என்று தெரிந்தும், மனிதன் ஆசையாலும் ஆணவத்தாலும் அலைமோதுகிறான்.
ஆனால், ஞானிக்கு ஒருவகை ஆணவம் வருகிறது. அந்த ஆணவம் வென்றும் விடுகிறது.
`நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்றாரே அப்பர் சுவாமிகள். அவர் கடைசி வரையிலே தன்னை ஒரு இறைவனின் குடிமகனாகக் கருதினாரே தவிர, ஒரு அரசனின் குடிமகனாகக் கருதியதில்லை.
ஒரு பஞ்சப் பரதேசி, துறவி, சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.
குளிர்காலத்தில் வெயில் காய்வதற்காக ஆற்று மணலிலே துண்டை விரித்து அவர் படுத்திருந்தார்.
உலகத்தையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவன் அருகிலே வந்தான்.
ஞானி அவனைக் கவனிக்கவில்லை.
கால்மேல் கால் போட்டபடி சூரிய கிரணங்களில் குளித்துக் கொண்டிருந்தார்.
`நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்!' என்றான் அவன்.
`அப்படியா?...' என்று சாதாரணமாகச் சொன்னார் ஞானி.
`ஏ, ஞானியே! உனக்கு என்ன வேண்டும், கேள்; நான் தருகிறேன்!' என்றான் அலெக்சாண்டர்.
`எனக்கு ஒரு உதவி வேண்டும்,' என்றார் ஞானி.
`என்ன வேண்டும்? பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா, மாளிகை வேண்டுமா?' என்று கேட்டான்.
`ஒன்றும் வேண்டாம். நீ கொஞ்சம் விலகி இருக்க வேண்டும். உன் நிழல் வெயிலை மறைக்கிறது' என்கிறார் ஞானி.
அலெக்சாண்டர் என்றால் உலகமே நடுங்கும்; ஞானி நடுங்கவில்லை.
அலக்சாண்டரின் ஆணவத்தை, ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.
காரணம், ஞானிக்குத் தேவை என்று எதுவுமில்லை.
யாரிடமிருந்தும் எதையும் எதிர்பாராத ஆணவம், தன்னம்பிக்கை.
ஆசை வயப்பட்ட ஆணவம், திமிர்.
ஒரு ஞானியிடம் ஒரு பணக்காரன் போனான்.
`இதோ பார்! நான் வந்திருக்கிறேன்' என்றான்.
ஞானி அமைதியாக அவனைப் போகும்படி கை அசைத்தார்.
`பின் எப்பொழுது வருவது?' என்று அவன் கேட்டான்.
`நான் செத்த பிறகு வா' என்றார் அவர்.
`நீ செத்த பிறகு நான் வந்து என்ன செய்வது?' என்றான் அவன்.
`நான் என்றால், நான் அல்லடா! `நான் வந்திருக்கிறேன்' என்றாயே, அதிலுள்ள `நான்' என்ற ஆணவம் செத்த பிறகு வா!' என்றார் அவர்.
மனிதர்களுக்கு வெற்றி வரும்போது, இந்த ஆவணம் கூடவே வரும்.
அடி விழும்போது அதுவும் நாய்க்குட்டிபோல் அடங்கி விடும்.
ஆனால், ஞானியின் ஆணவம், இறைவனைச் சந்திக்கின்ற வரை நீடிக்கும்.
காரணம் அந்த ஆணவம் தன்னை அறிந்து கொண்டதற்கான தத்துவ விளக்கம்.
`மனிதர்களைப் பார்த்து இறைவன் இரண்டு முறை சிரிக்கிறான்' என்றார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
`இது என் சொத்து! இது என் சொத்து!' என்று பங்காளிகள் சண்டையிடும் போது ஒருமுறை சிரிக்கிறானாம்!
`நோயாளியைப் பார்த்து மருத்துவர் கவலைப்படாதே; `நான்' குணப்படுத்தி விடுகிறேன்' என்று சொல்லும் போது ஒருமுறை சிரிக்கிறானாம்!
உலகத்தில் தலைசிறந்த- முடிவான டாக்டர் ஆண்டவனே! மற்றவர்களெல்லாம் தற்காலிகமானவர்களே!
வாழ்க்கை அரங்கில் எவனுடைய ஆணவமும் செல்லுபடியாகாது.
ஆனால், ஞானியின் ஆணவம் உலகத்தையே ஆட்டுவிக்கும்.
சொல்லப் போனால் அதற்குப் பெயர் ஆணவமல்ல; தெய்வீக உணர்ச்சியின் திரட்சி.
ஞானி இறைவனுடைய காலாக நிற்க விரும்புகிறான். மனிதனோ இறைவனுடைய தலையே தானென்று எண்ணுகிறான்.
`ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!'
-என்று இறைஞ்சினார், குலசேகர ஆழ்வார்.
மன்னாதி மன்னன், மகுடம் தாங்கிய தலைவன், வேங்கடத்தானின் பாதத்தில் அவன் தலை மோதிற்று.
இறை நம்பிக்கை என்பது சாதாரண மனிதனையே அரச பதவிக்கு உயர்த்தி விடுகிறது.
அரசனுக்கு பூமியிலே வைகுந்த பதவியைத் தருகிறது.
அரசு பதவி என்றால், எல்லோரையும் ஆட்டிப் படைக்கின்ற சக்தி.
இன்னும் நம் நாட்டில் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்; நிலப் பிரபுக்கள் இருக்கிறார்கள்; தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள்; ஆனால், காஞ்சிபுரத்து சந்நியாசியின் காலைத்தான் உலகம் தொட்டு வணங்குகிறதே தவிர, கோடீஸ்வரனின் காலை, அவனிடம் பணம் பெற்றுக் கொண்டவன் கூடத் தொடுவதில்லை.
பெறுதலைவிட, துறத்தலுக்குரிய மரியாதை அதுதான்.
வரவு-செலவு எழுதுகின்ற செட்டியாரைவிட, துறவு கொண்டு விட்ட ஞானிக்குத்தான் மரியாதை அதிகம்.
ஆசையும் தேவையும் இல்லாதவன் எவனுமே தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
எனக்கு ஒரு பணக்காரரைத் தெரியும்.
கோடி ரூபாய்க்கு அவருக்குச் சொத்து உண்டு.
இப்பொழுது அவரிடம் போய், `கொத்தவால் சாவடியில் கத்தரிக்காய் வாங்கி ஜாம்பஜாரில், கொண்டு வந்து விற்றால் பத்து ரூபாய் கிடைக்கும்' என்று சொல்லுங்கள்; வருவார்.
நம்மிடந்தான் கோடி இருக்கிறதே, பத்து எதற்கு என்று கருத மாட்டார்.
அக்காளை மணந்தவனுக்கு தங்கையும் தேவைப்படுகிறது.
சென்னையில் புதுநகர் வந்தால் ஆங்காங்கே புதுபங்களா சிலருக்குத் தேவைப்படுகிறது!
இவனையெல்லாம் வருமானவரி அலுவலகக் குமாஸ்தா கூட மிரட்டுவான்.
ஆசை வளர்வதும், ஆணவம் பெருகுவதும் மனிதனது அழிவுக்கே அறிகுறி.
இன்றைய அறிவு எனக்கு ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்குமானால், நான் ஒரு துறவியாகவே இருந்திருப்பேன்.
லெளகீகத்தில் இறங்கிவிட்ட மனிதனது நிலைமைதான் என்ன?
நாய்க்குட்டி வளர்க்கிறான்; அதற்குப் பால் வேண்டுமே என்று பசு மாடு வாங்குகிறான்.
பசுவைப் பாதுகாக்க வேண்டுமே என்று வேலைக்கு ஆளை வைக்கிறான்; வேலைக்காரனைக் கண்காணிக்க வேண்டுமே என்று வீட்டுக்காரியைக் கொண்டு வருகிறான்.
வீட்டுக்காரி வந்த பின் சும்மா இருக்க முடியவில்லை; பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறான். பிள்ளைகளுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசை வயப்பட்டு அலைகிறான்.
நினைத்தது கிடைக்கவில்லை என்றால் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறான்; நினைத்ததெல்லாம் கிடைத்து விட்டால் `நான் யார் தெரியுமா?' என்கிறான்.
ஒன்று அவலம்.
இன்னொன்று ஆணவம்.
இந்த இரண்டுமற்ற நிலையில் ஒரு மனிதனுக்குத் தேவையானது லெளகீக வாழ்விலும் ஒரு ஞானியின் பக்குவம்.
அப்படிப்பட்டவனை, `இல்லறத் துறவி' என்பார்கள்.
`வெள்ளை வேட்டி சந்நியாசி' என்பார்கள்.
அவன், வருவதைக் கடவுள் பெயராலே செலவு எழுதுகிறான்.
லெளகீகத்தில் இருந்து கொண்டே ஞான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவனும், எந்தக் காலத்திலும் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
நமது தலைமுறையில் காந்திஜி ஒரு உதாரணம்.
அவர் நீட்டிய கையில் கொட்டிக் கொடுத்தது நாடு.
கொட்டிக் கொடுத்ததை அப்படியே குவித்துக் கொடுத்தார் நாட்டுக்கு.
தேவதாஸ் காந்திக்குக் கொடுத்தாரா, தேறாத பிள்ளைக்கு ஒதுக்கினாரா?
குடும்பத்தில் இருங்கள்.
ஞானியாகத் திகழுங்கள்.
பசி எவ்வளவோ அவ்வளவுக்கு உணவு தேடுங்கள்.
பறவைக்குக் கூடு போதும்; சிங்கத்தின் குகை தேவை இல்லை.
சிங்கத்தின் குகை அதற்குத் தேவைப்பட்டால், சிங்கத்திற்கு அது தேவைப்படும்.

No comments:

Post a Comment