Friday, March 30, 2012

பெண்களை பெருமைப்படுத்துவோம்-கவியரசு கண்ணதாசன்

Posted On March 30,2012,By Muthukumar

`என்ன குழந்தை பிறந்திருக்கிறது?' என்று கேட்கிறார்கள்.
`பெண் குழந்தை' என்று பதில் வருகிறது.
பாட்டி அலுத்துக் கொள்கிறாள்.
அத்தனைக்கும் அவளும் ஒரு பெண்தானே!
என் தாயாருக்கு முதற்குழந்தை பெண்ணாகப் பிறந்தது.
மருமகளுக்குக் குழந்தை பிறந்தால், மாமியார் வந்து மருந்து இடித்துக் கொடுப்பது எங்கள் குல வழக்கம்.
`பெண் குழந்தையா பெற்றிருக்கிறாள்?' என்று எங்கள் பாட்டி அலுப்போடு வந்தார்களாம்.
இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.
பாட்டியிடம் போய்ச் சொன்னார்களாம்.
`இவளுக்கு வேறு வேலை இல்லையா...?' என்று பாட்டி அலுத்துக் கொண்டார்களாம். ஆனாலும் வந்து மருந்து கொடுத்தார்களாம்.
மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.
என் பாட்டியோ, `அவளையே மருந்து இடித்துக் குடிக்கச் சொல்!' என்று சொல்லி விட்டார்களாம்.
பிறகு, அவர்களைக் கெஞ்சிக் கெஞ்சி அழைத்து வந்தார்களாம்.
நாலாவது குழந்தை வயிற்றில் இருந்த போது என் தாயார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தார்களாம்.
ஆண்டவன் லீலையைப் பாருங்கள்; அதுவும் பெண்ணாகவே பிறந்தது.
கடைசிவரை என் பாட்டி அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லையாம்.
`மலையரசி அம்மன் புண்ணியத்தில் ஐந்தாவதாக என் மூத்த சகோதரர் பிறந்தார்' என்று என் தாயார் சொல்வார்கள்.
எந்தப் பெண்ணுமே தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.
பெண் குழந்தை பிறந்தால் பெற்ற தாயே சலித்துக் கொள்கிறாள்.
`பெண்ணென்று பூமிதனில்
பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்!'
-என்றான் பாரதி.
பெண் பிறப்பு என்ன அப்படிப் பாவப்பட்ட பிறப்பா?
தாய் என்கிறோம்; சக்தி என்கிறோம்; ஆனால், குழந்தை மட்டும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறோம்.
என்னைப் பொறுத்தவரையில் பெண் பிறந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கார் விபத்தில் சிக்கி நான் பாண்டிச்சேரி `ஜிப்மர்' மருத்துவமனையில் இருந்த போது, என்னைப் பார்த்துப் பார்த்து அழுதவை, பெண் குழந்தைகளே!
ஆண் பிள்ளையோ மனைவி வந்து விட்டால், அப்பனை வீட்டை விட்டுக் கூடத் துரத்தி விடுவான்.
பெண் குழந்தையின் பாசமும், பரிவும் ஆண் குழந்தைக்கு வராது.
ஒரு வயதுப் பெண் குழந்தைக்குக்கூட தாய், தகப்பன் மீதிருக்கிற பாசம் தெய்வீகமாக இருக்கும்.
அதிலும், இந்தியப் பெண்மை என்பதே மங்கலமானது.
அதன் இரத்தம், இரக்கம், கருணை, பாசங்களாலே உருவானது.
மேல் நாட்டுப் பெண்மைக்கும் இந்தியப் பெண்மைக்கும் உள்ள பேதம் இதுதான்.
மேல் நாட்டுப் பெண்மை ஒரு இடத்திலும் ஒட்டு, உறவு, பாசம் என்பதை வளர்த்துக் கொள்வதில்லை.
அது தண்ணீரில் விட்ட எண்ணெயைப் போல் தனித்தே நிற்கிறது.
இந்தியாவில்தான் இது சங்கிலி போட்டுப் பின்னப்படுகிறது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
என் சின்ன வயதில் எங்கள் சமூகத்தில் பெண்கள் குறைவு. அதனால், ஒரு பெண்ணை ஒரு வாலிபன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
நான் வளர வளரக் கவனித்து வந்தேன்.
என் முதல் சகோதரி திருமணத்தின் போது பெண்ணின் விலை, மிக அதிகம்.
இரண்டாவது சகோதரிக்குத் திருமணம் நடந்த போது, அது குறைந்தது.
மூன்றாவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மேலும் குறைந்தது.
நான்காவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மிக மிகக் குறைந்து விட்டது.
ஐந்தாவது திருமணம் வந்த போது மாப்பிள்ளைக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டி வந்தது.
ஆறாவது திருமணத்தில் அது இன்னும் அதிகமாயிற்று.
இப்போது பெண்ணைப் பெறுகிறவர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள்.
நான் ஐந்து பெண்களுக்குத் திருமணம் செய்தேன்.
என் அண்ணனும், தேவரும் கைகொடுத்தார்கள்.
இப்பொழுது அதே திருமணங்களைச் செய்வதென்றால் என்னால் முடியாது.
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல், பெண் பிறந்து விட்டால் தாய் தகப்பனின் தலை சுழல்கிறது. அந்தப் பொருளாதார நோக்கத்தில் பெண் பிறப்பு வெறுக்கப்படுகிறது.
ஆண் குழந்தை அடி மடையனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
தாய்மையின் கம்பீரத்தை, `சக்தி' வடிவமாகக் காணும் இந்திய நாடு, பெண்ணை வெறுக்க நேர்வது எவ்வளவு துரதிருஷ்டம்?
வரதட்சணை முறையைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள். ஆனால், அந்தக் கொடுமை இன்னும் நீடித்துக் கொண்டேதானிருக்கிறது.
பெண்மையின் எதிர்காலம் முழுவதுமே பணத்தில் அடங்கிக் கிடக்கிறது. அதன் மேன்மை உணரப்படவில்லை.
உத்தமமான ஏழைப் பெண்மையில் தெய்வீகம் காட்சியளிக்கவில்லை.
ஒரு ஏழைப் பெண், தான் குங்குமம் வைப்பதற்கே கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கிறது.
கழுத்திலே ஒரு பொட்டுத் தாலியைக் கட்டிக் கொள்வதற்குத் தாய் தகப்பனைக் கசக்கிப் பிழிய வேண்டியிருக்கிறது.
கூன், குருடு, செவிடு, நொண்டிக்காவது வாழ்க்கைப்பட்டு, `சுமங்கலி' என்ற பெயரோடு சாவதற்கு இந்துப் பெண் ஆசைப்படுகிறாள்.

ஆனால், அதற்கும் விலை தேவைப்படுகிறது.
நடுத்தரக் குடும்பத்தில் பிரச்சினைகளிலெல்லாம் பெரிய பிரச்சினை, மகளே!
எங்கள் சமூகத்தில் மகளைத் திருமணம் முடித்துக் கொண்டு விடுவதோடு தகப்பன் கவலை தீர்ந்து விடுவதில்லை.
தீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், மகள் பிரசவித்தாலும் அவன் பணம் தேட வேண்டியிருக்கிறது.
இல்லையென்றால், `உன் அப்பன் என்னடி கொடுத்தான்?' என்று மாமியார் கன்னத்தில் இடிக்கிறாள்.
கட்டிக்கொண்ட கணவனோ கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கிறான்!
அவனுக்குச் சுயதர்மமும் தெரியாது; சுயகர்மமும் புரியாது.
`எனக்கு மனைவிதான் தேவை; மாமனார் வீட்டு சீர்வரிசை அல்ல!' என்று சொல்லக்கூடிய ஆண் மகனாக அவன் பெரும்பாலும் இருப்பதில்லை.
`அடியம்மா! கதையைக் கேட்டாயா? அண்ணன் மனைவிக்கு சம்பந்தி வீட்டார், போட்ட சங்கிலி காற்றிலே பறக்கும்,' என்று நாத்தனார் கேலி செய்கிறாள்.
ஒரே வீட்டில் ஒரு மருமகள் ஏழையாகவும், இன்னொரு மருமகள் பணக்காரியாகவும் வந்து விட்டால், அந்த ஏழை மருமகள் படும்பாட்டை இறைவன் கூடச் சகிக்கமாட்டான்.
இந்துக்களின் துயரங்களிலெல்லாம் பெரிய துயரம் இந்தத் துயரமே.
சனாதன வைதிக இந்துக்கள் கூட இதில் கருணை உள்ளவர்களாக இல்லை.
சீதையை ராமன் மணந்ததும்,
ருக்மிணியைக் கண்ணன் மணந்ததும்,
-சீர்வரிசைகளுக்காக அல்ல.
வள்ளி, தெய்வானையிடம் உமா தேவியார் என்ன சீர்வரிசைகளா கேட்டார்கள்?
அகலிகை என்ன கொண்டு வந்தாள், முனிவரின் ஆசிரமத்திற்கு?
`நாளை உதயமாகக் கூடாது' என்று சூரியனுக்கே கட்டளையிட்ட நளாயினி, கற்பென்னும் அணிமணிகளை மட்டுமே அணிந்திருந்தாள்.
தேவர்களைக் குழந்தைகளாக்கிய அனுசூயையின் கழுத்தில் திருமாங்கல்யம் மட்டுமே பிரகாசித்தது.
இந்து வேதம் படிக்கிறான்; புராணம் படிக்கிறான்; இதிகாசம் படிக்கிறான்.
மகனுக்குப் பெண் தேடும் போது, மனிதாபிமானத்தையே இழந்து விடுகிறான்.
ஊரில் நடக்கும் திருமணங்களை எல்லாம் பார்த்தபடி உள்ளுக்குள் குமுறும் இந்துப் பெண்கள் எவ்வளவு பேர்?
பையன் பட்டப் படிப்புப் படித்து விட்டான் என்பதற்காக, `ஸ்கூட்டர் கொடு; பங்களா கொடு' என்று வம்பு செய்யும் மாமன்மார் எத்தனை பேர்?
இந்து சமூகத்தில் புரையோடிவிட்ட இந்தப் புற்று நோயை இளைஞர்கள் களைந்தாக வேண்டும்.
அழகான ஒரு அனுசூயையைத் தேர்ந்தெடுப்பதே அவனுடைய பணியே தவிர, ஸ்கூட்டருக்காகவும், வரதட்சிணைக்காகவும் எந்த அலங்கோலத்திலும் சிக்கிக் கொள்வதல்ல.
`ஒரு பெண் புக்ககம் வருகிறாள் என்றால், ஒரு தெய்வம் அடியெடுத்து வைக்கிறது' என்று பொருள்.
`தெய்வமே வைர நகைகளோடு வந்தாக வேண்டும்' என்று ஒரு நல்ல இந்து கேட்க மாட்டான்.
கற்புடைய ஒரு பெண்ணைவிட, அவள் அணிந்து வரும் நகைகள் விலையுயர்ந்தவையல்ல.
அழகான புள்ளிமானிடம் கவிஞன், கலையைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே தவிர மாமிசத்தையல்ல!
பையனைப் படிக்க வைக்கும்போதே, தான் செய்யும் செலவுகளையெல்லாம் சம்பந்தியிடம் வட்டி போட்டு வசூலிப்பது என்று தகப்பன் முடிவு கட்டிக் கொள்கிறான்.
அதை ஒரு தார்மிகப் பெருமையாகவும் கருதுகிறான்.
இந்து தர்மத்தின் முழு ஆதார சுருதியையும் அவன் அங்கேயே அடித்துக் கொன்று விடுகிறான்.
அவன் திருநீறு பூசுகிறான்; திருமண் இடுகிறான்; ஒரு மணி நேரம் பூஜையில் அமர்கிறான்; உலக க்ஷேமத்துக்காக பிரார்த்திக்கிறான்; வீட்டில் இருக்கிற சாமி சிலைக்குக் கூட வைர நகை செய்து போட்டு அழகு பார்க்கிறான்; ஆனால், மருமகளைத் தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அவன் யூத வியாபாரியாகி விடுகிறான்.
கண்ணைப் பறிக்கின்ற அழகு- கடவுளே மதிக்கின்ற கற்பு- ஆனால், அவளோ ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பிறப்பு.
அந்த இரண்டு அற்புதமான குணங்களுக்காக ஒரு பணக்காரன் அவளை கட்டிக்கொள்ள முன் வரவில்லையே?
ஒரு அனாதைக்கோ, தற்குறிக்கோ அல்லவா அந்தத் தெய்வப் பெட்டகம் போய்ச் சேருகிறது?
பொருளாதாரம் பெண்ணின் வாழ்வோடு விளையாடுவதை, இளைஞர்கள் தடுக்க வேண்டும்.
`உத்தியோகம் பார்க்கின்ற பெண் எனக்கு வேண்டும்' என்று ஒரு இந்து இளைஞன் கேட்பது எனக்குப் புரிகிறது.
அந்தப் பொருளாதாரத்தில் அடிப்படை நியாயம் இருக்கிறது.
`நான் படித்திருக்கிறேன்! நாற்பதாயிரம் வேண்டும்' என்பது தான் எனக்குப் புரியவில்லை.
துர்ப்பாக்கிய வசமாக ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்குமே குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன.
அதிலும் வறுமை மிக்க இல்லங்களில் இறைவன் பெண்ணாகவே படைத்துத் தள்ளுகிறான்.
அவன் இந்துக்களை ஆத்ம சோதனை செய்கிறான்.
`பிரமாத தத்துவம் பேசும் நீங்கள் என் சிருஷ்டியை எப்படி மதிக்கிறீர்கள்? பார்க்கிறேன்!' என்று சவால் விடுகிறான்.
நாம் ஒருபோதும் அவனது சவாலை ஏற்றுக் கொண்டதில்லை.
ஒரு கையில் தராசையும், ஒரு கையில் பையையும் வைத்துக் கொண்டுதான் பெண்ணைத் தேடுகிறோம்.
நமக்கு வருகிற வியாதிக்கெல்லாம் காரணம், இதுவே.
பெண்ணை மாமியார் வீட்டுக்கு வழியனுப்பும் போது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்களே, ஏன்?
`திருமணத்திற்கு முன் இவ்வளவு பாடுபடுத்தினார்களே, திருமணத்திற்குப் பின் என்ன செய்வார்களோ...?' என்று அஞ்சுகிறார்கள்.
என்னையே எனது ஒரு பெண்ணின் திருமணத்தில் அழ வைத்திருக்கிறார்கள்.
`இவர் கவிஞராயிற்றே, கவியரசாயிற்றே' என்ற மரியாதையெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது.
பெண்ணைப் பெற்றவன், கண்ணீர் விட்டே ஆக வேண்டும்; அவ்வளவுதான்.
`பாரதத்தில் ஒருமுறைதானா குருக்ஷேத்திரம் நடந்தது?'
நாம் ஒவ்வொருவரும் குருக்ஷேத்திரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு நெருங்கிய நண்பராக இருந்த எழுத்தாளர் காலமானார்; அவருக்கு நான்கு பெண்கள்.
அவர் உயிருடன் இருக்கும்போதே ஒருத்திக்கு முப்பத்தி நான்கு வயது; ஒருத்திக்கு முப்பது வயது; ஒருத்திக்கு இருபத்தி ஆறு வயது; ஒருத்திக்கு இருபது வயது.
ஒருத்திக்கும் திருமணம் ஆகவில்லை.
இங்கே கலப்புத் திருமணத்திற்குத் தங்கப் பதக்கம் கொடுக்கிறார்களாம்!
இந்தக் கொடுமையில் இருந்து சமுதாயம் மீள வேண்டும்.
இது வெறும் வாதப் பிரதி வாதங்களால் நடக்கின்ற காரியமல்ல.
`இறைவா! எனக்கு ஒரு சீதையைக் கொடு; அனுசூயையைக் கொடு; கோலார் தங்கச்சுரங்கம் வேண்டாம்' என்று பிரார்த்திக்க வேண்டும்.
`நான் வரதட்சிணை வாங்காதவன்' என்பதே ஒரு இந்து இளைஞனின் பெருமையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment