Thursday, August 2, 2012

இச்சா பத்தியம்

Posted On Aug 2,2012,By Muthukumar

யோகப் பயிற்சிகளில் ஒரு வகையான பயிற்சி உண்டு. உடல் வலிமையுள்ள ஒரு ஆடவன், தனியான ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும், அவளைத் தொடாமலேயே இருக்கும் பயிற்சி அது.
`இல்லறத்தில் பிரம்மசரியம்' என்று இதனைக் காந்தியடிகள் விவரித்தார்கள்.
இப்போது அமெரிக்காவில் இந்து ஞானிகளைச் சுற்றிலும் அமெரிக்கர்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
அங்கே ஒரு இந்து ஞானி, ஒரு யோகப் பயிற்சியைத் தொடங்கி வைத்திருப்பதாக `டைம்' பத்திரிகையில் படித்தேன். அதன் புகைப்படத்தையும் அதில் பார்த்தேன்.
ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக நிற்கிறார்கள். அவர்கள் ஒரு வட்டவடிவத்தில் நின்று கொள்கிறார்கள். அதிலும் ஒரு ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறார்கள். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொள்கிறார்கள். எல்லோருடைய அங்கங்களும் திறந்திருக்கின்றன. இந்த நிலையில் ஒருவர் மீது மற்றவருக்கு ஆசை ஏற்படாதவாறு பயிற்சி செய்கிறார்கள்.
நான் பல இடங்களில் குறிப்பிட்டது போல, `இயக்கத்தில் இயலாமை', `இருந்தும் இல்லாமை', `கிடைத்தும் ஏற்றுக் கொள்ளாமை' என்பது இதுவே.
இதை யோகாசனம், என்பதைவிட `மோகாசனம்' என்பது பொருந்தும்.
மனிதனது உணர்ச்சிகளில் சீக்கிரம் தூண்டப்படக்கூடியது. `பாலுணர்வு' ஒன்றே.
பசியும் ஒரு உணர்ச்சிதான்; அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மனிதனுடைய தன்னடக்கத்தை மீறி எந்த உணர்ச்சியும் எழுந்து விடுவதில்லை.
ஆனால், காமம் எந்த மேதையையும் முட்டாளாக்கிக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.
கிடைக்காத பெண்ணுக்கே ஏங்குகின்ற உலகத்தில், கிடைத்து விட்ட பெண்ணை அனுபவிக்காமல் இருக்கப் பயிற்சி பெற வேண்டும்.
அதன் பெயரே, `இல்லறத்தில் பிரம்மசரியம்!'
சித்தர்கள் இதனை, `இச்சா பத்தியம்' என்பார்கள்.
காந்தியடிகள் பிற்காலங்களில் அப்படி வாழ்ந்து காட்டினார்.
அவருக்கு முன்னால் பரமஹம்சர் வாழ்ந்து காட்டினார்.
செயலற்ற நிலையில் பலவீனமான மனிதன், `நான் என் மனைவியைச் சகோதரியாகப் பாவிக்கிறேன்' என்றால், அது `திராணி' இல்லாததால் வந்த தத்துவம்.
உடல் கெடாமல் உள்ளத்தில் உணர்ச்சி மேலோங்கிய நிலையில், அந்த அடக்கம் தோன்றிவிடுமானால், அதுவே ஆன்மாவைப் புடம் போட்ட
ஞானம்.தேகம் ஆன்மாவை வென்றுவிடும். தறிகெட்டு ஓடும்.
ஆன்மா அதை வெல்ல முடியுமானால் அதுவே அற்புதமான யோகம்.
விவேகானந்தரைப் போன்ற இளம் துறவிகளை இன்னும் இந்து மதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவ மதத்திலும் அப்படிப்பட்ட சகோதரர் கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனத்தால் உடம்பை அடக்கியவர்கள்.
அடக்க முடியாமல் கெட்டுப்போய் ஞானிகளானவர்கள் எல்லாம், `உடம்பு என்னை ஆட்டிப் படைக் கிறதே' என்றுதான்
எழுதியிருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மசாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.
உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை அவர்
மேற்கொண்டிருந்தார்.அவரது உடம்பின் பளபளப்புக்குக் காரணம் அது தான் என்று சொல்வார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மசாரிகள் நீண்ட நாள் வாழ்வதில்லை.


ஒரு குறிப்பிட்ட காலம் வரை இல்லறத்தில் வாழ்ந்த பிறகு, அனுபவித்த மனைவியையே சகோதரியாகப் பாவிக்கும் பாவனையையே நான், `இச்சா பத்தியம்' என்று குறிப்பிடுகிறேன்.
காம உணர்ச்சி ஒருவனுக்கு இல்லாவிட்டாலும் கூட, அவனுடைய உணவு முறையின் மூலம் தூக்கம் பிடிக்காத நிலை ஒன்று ஏற்படும். விபரீத சிந்தனைகள் தோன்றும்.
அதனால் தான் இந்துக்கள், `தனியாக இருக்கும் ஆடவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது' என்றும், `பெண்கள் மல்லாந்து படுக்கக்கூடாது' என்றும் கூறுவார்கள்.
இதனை அறிந்துள்ள எந்த இந்துப் பெண்ணுமே மல்லாந்து படுப்பதில்லை. ஒருக்கணித்துதான் படுப்பாள்.
இந்துமதத்தின் சாது சந்நியாசிகள் அந்நாளில் தலைக்குத் தலையணை வைக்கக்கூடாது என்ற விதி இருந்தது.
சாதாரணமாகச் செதுக்கப்பட்ட மரக்கட்டையைத்தான் தலைக்கு வைத்துக் கொண்டு படுப்பார்கள்.
ஒரு வகை மரத்தில் செய்யப்பட்ட கட்டையைத்தான் செருப்பாகப் பயன்படுத்துவார்கள். மெத்தென்ற தோல் செருப்பு அணிய மாட்டார்கள்.ராமகிருஷ்ண பரமஹம்சரும், காந்தியடிகளும் உணவைக் குறைத்ததற்குக் காரணமே, `இல்லறத்தில் பிரமசரிய'த்தை அனுஷ்டிப்பதற்குத்தான்.
இதைக் காந்தியடிகளே ஒரு முறை கூறி இருக்கிறார்.
ஒரு முறை பரமஹம்சரின் சீடர்கள் அவரைப் பார்ப்பதற்காக அவர் தங்கும் இடத்திற்கு வந்தார்கள்.
அப்பொழுது நள்ளிரவு.
பகவான் தேவியாரோடு உள்ளே இருந்தார். `ஐயோ! இந்த நேரத்தில் வந்து விட்டோமே, அவரது சந்தோஷத்தைக் கெடுத்து விட்டோமே' என்று அந்த இளம் உள்ளங்கள் பயந்தன.
அவர்களுடைய நினைப்பு, பகவான் தேவியாரோடு சல்லாபித்துக் கொண்டிருப்பதாக.
திடீரென்று வெளியே வந்தார் பரமஹம்சர். அவர்கள் சொல்லாமலே அவர்களது பயத்தை உணர்ந்தார்.
மெல்லச் சிரித்துக் கொண்டே, `நான் தேவியின் அருகே இருந்தாலும் தெய்வத்தின் அருகில் தான் இருக்கிறேன்' என்றார்.
சீடர்களுக்குக் குளிர் விட்டதுபோல் இருந்தது.
காம லயத்தை விட்டு விட்டவனுக்கு மரத்தைத் தொடுவதும், மனைவியைத் தொடுவதும் ஒன்றுதான்.
`துறவு' என்பதற்கே `நிர்வாணம்' என்று பெயர்.
ஒரு பெண்ணின் நிர்வாணத்தில் கூட அவன் தெய்வீகத்தையே காணுகிறான்.
கண்ணகி கற்புக்கரசி என்றார்கள்; அதில் அவளுக்கென்ன புதுப் பெருமை?
அவள் கற்போடு இருந்து தீர வேண்டிய குலமகள்.
மதுரையை அவள் எரித்ததை வேண்டுமானால், `மறக்கற்பு' என்று கூறலாம்.
ஆனால், மாதவி கற்போடு இருந்தாளே, அதுதான் பெருமை.
மாதவி வீட்டுக்குப் பத்துப்பேர் வந்துபோனால் அதைப்பற்றி யாரும் பேசப் போவதில்லை. அவள் அதற்கென்றே நிர்ணயிக்கப்பட்டவள்.
வசதி இருந்தும், நியாயம் இருந்தும், அதை அவள் பயன்படுத்திக் கொள்ளாமல் கற்போடு வாழ்ந்தாள்.
அதைப் போன்றதுதான் இல்லறத்தில் பிரம்மசரியம்.
கெட்டுப் போய் ஞானிகள் ஆனவர்கள், பெண்களைக் கேவலமாகத் திட்டி இருக்கிறார்கள்.
`நாற்றச் சரீரம்' என்றும், `ஊத்தைச் சரீரம்' என்றும் `மலசலம் நிறைந்த மண்பாண்டம்' என்றும், `ஆறாத புண்' என்றும், `வெட்டுண்ட காயம்' என்றும் அவர்கள் பலவாறாகப் பெண்களை ஏசி இருக்கிறார்கள்.
இவையெல்லாம் செயலற்ற காலத்துத் தரிசனங்கள்.
அவர்கள் உடம்பு நன்றாக இருந்தபோது, `குவளை மலர்' என்றும், `முல்லைமலர்' என்றும், பெண்ணை, அவர்களே தான் வருணித்திருக்கிறார்கள்.ஞானிகள் நிலை அதுவல்ல.
உடம்பு நன்றாக இருக்கும் போதே உள்ளத்தில் தோன்றும் ஒளி, காம லயத்தில் இருந்து அவர்களைப் பிரித்து விடுகிறது.
சுவேதகேதுவின் காலத்திலிருந்து, பல வகையான ஞானிகள், இதை ஒரு பயிற்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலம்வரை, பிள்ளைப் பேறுக்காகவே மனைவியோடு உடலுறவு வைத்திருக்கிறார்கள்.
காம வயப்பட்ட மனிதர்கள் உடலுறவு கொள்ளும் போது சில விநாடிகளிலேயே உடல் தளர்ந்து விடும்.
ஆனால், மனதைப் புடம் போட்டவர்கள் உடலுறவு கொள்ளும் போது, மனைவி எவ்வளவு நேரம் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறாளோ, அவ்வளவு நேரம் நீடிக்கும்.
காரணம் அவர்களிடம் வெறி உணர்வு இல்லை.
பொற்கொல்லர்கள் சங்கிலி செய்வது போலவும், விவசாயிகள் ஏரோட்டுவது போலவும், கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கடமை புரிவதினால் கால வரம்பு நீடிக்கிறது. அதிலே மிருகத்தனம் இல்லை; தெய்விகம் இருக்கிறது. காமம் இல்லை; யோகம் இருக்கிறது. வெறும் விளையாட்டு இல்லை; ஒரு தவம் நடக்கிறது. பற்றற்ற கருமமாகவே அது பாவிக்கப்படுகிறது.
சிட்டுக் குருவியைப்போல், அந்தி பகல் எந்நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருப்பவன், அந்தச் சிந்தனையினாலேயே பலம் இழந்து விடுகிறான்.
உடம்பு செயலாற்றுவதால் ஏற்படும் உஷ்ணத்தைவிட சிந்தனையினால் ஏற்படும் உஷ்ணம் பத்து மடங்கு அதிகம்.
அதுவும் காமச் சிந்தனையாக இருந்தால், அந்தப் பத்து மடங்கு உஷ்ணமும் உடனே ஏறிவிடுகிறது.
அதன் பிறகு அவன் செயலாற்றத் தொடங்கும் போது மனைவியின் கண்ணுக்கே நபும்சகனாகக் காட்சியளிக்கிறான்.
அதனால்தான் இந்துக்கள், தியான முறையைக் கையாண்டார்கள்.
ஈஸ்வர தியானத்தினால் உடம்பில் உள்ள உஷ்ணம் இறங்கி விடுகிறது.
மனத்தின் சிந்தனைப் போக்கு உணர்ச்சி வயப்படாத ஒன்றில் ஐக்கியமாவதால், உடம்பு சம சீதோஷ்ணத்துக்கு வந்து விடுகிறது.
இல்லறத்தில் பிரம்மசரியம் தொடங்கிய பிறகே காந்தியடிகளும், பரமஹம்சரும் தத்துவ ஞானிகள் ஆனார்கள்.
இது பற்றிக் காந்தியடிகள் கூட விரிவாகக் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment