Wednesday, August 8, 2012

கடவுள் மனிதனாக

Posted On Aug 8,2012,By Muthukumar

`கடவுளுடைய திருநாமம் பேசப்படும் இடமெல்லாம் புண்ணியத் தலங்களே'.
இவ்வாறு இருக்க, அவர் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?
தெய்விக உண்மையைப் புலப்படுத்தும் அவரிடம் நாம் எவ்வளவு பக்தியுடன் இருக்க வேண்டும்?
ஆனால், உலகத்தில் ஆன்மிக உண்மையை அளிக்கும் மகான்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமிக்க வாழவும் இயலாது. மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்; `தமக்கென்று நோக்கமெதுவுமில்லாத கருணா சமுத்திரம்!'.
`குருவை நான் என்று அறி' என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் பகருகிறார். இத்தகையோர்கள் எந்தக் கணம் முதல் இல்லாமல் போகிறார்களோ அப்பொழுதே உலகம் பயங்கரமான நரகமாகி அதன் அழிவை நோக்கித் துரிதமாகச் செல்லத் தொடங்குகிறது. இவர்களை விட உயர்வும் மகிமையும் உள்ள ஆசாரியர்கள் உலகில் தோன்றுகிறார்கள். அவர்களே ஈஸ்வர அவதாரங்கள்.
அவர்கள் தங்கள் விருப்பத்தாலேயே, ஒரு முறை தொடுவதாலேயே ஆன்மிக அறிவைப் பிறரிடம் பாய்ச்சுவார்கள். அவர்கள் கட்டளையினால் மிக இழிந்தவர்களும் ஒரு விநாடியிலே பெரிய ஞானிகள் ஆகிவிடக் கூடும். அவர்கள் ஆசாரியர்களுக்கும் ஆசாரியர்கள்; கடவுள் மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே அவர்கள். அவர்கள் மூலமாகவன்றிக் கடவுளை நாம் காண முடியாது. அவர்களை நாம் பூஜிக்காமல் இருக்க இயலாது. உண்மையாக அவர்களே நம் பூஜைக்கு உரியவர்கள்.
இந்த மானிட உருவத்தில் அளிக்கப்படும் தோற்றங்களிலன்றி இறைவனை வேறு விதத்தில் எவரும் காண இயலாது. வேறு வழியில் நாம் அவரைக் காண முயலும் போது அவரே வெறுக்கத்தக்க ஒரு போலியை உருவாக்கி, அதுவே அவர் என்று நம்புகிறோம்.
இதை விளக்கும் ஒரு கதை உண்டு.
ஒருவனைச் சிவபிரான் உருவத்தைச் செய்யச் சொன்னார்கள். அவன் நெடுநாள் முயன்று ஒரு குரங்கு உருவத்தைப் படைத்தானாம். ஆகவே, கடவுளை அவரது பரிபூரண நிலையிலிருத்திப் பார்க்க முயலும் போதெல்லாம் நமக்குத் தோல்வியே உண்டாகிறது. நாம் மனிதராய் இருக்குமட்டும், மனித நிலையை விட்டு வேறாக நாம் அவரைக் கருத இயலாது. நாம் நம் மானிட நிலையைத் தாண்டி மேலேறுவோமானால், அவரை அவர் உள்ளபடி நாம் உணரக் கூடும்.
ஆனால், நாம் மனிதராய் இருக்கும் மட்டும் அவரை மனிதரில் வைத்து மனிதராகவே பூஜிக்க வேண்டும். நீ எதை வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் முயலலாம். ஆனால், கடவுளை மனிதராக அல்லாமல் வேறு எந்த வகையிலும் உன்னால் நினைக்க முடியாது. இதைத் தவிர வேறு வழியில்லை.
இறைவனையும், நானிலத்துள்ள பொருள்கள் அனைத்தையும் பற்றி அறிவொளி மிக்க பெருஞ் சொற்பொழிவாற்றலாம். தருக்க நிபுணராய்த் திகழ்ந்து இறைவனின் மனித அவதாரங்களைப் பற்றிய நிகழ்ச்சிகள் யாவும் பேதைமையென்று திருப்தியுற நீர் மெய்ப்பிக்கலாம். ஆனால், செயல் முறைக்கு உதவும் பொது அறிவு நிலைக்குச் சற்றே செல்வோம்.
இத்தகைய அறிவுப் பொலிவின் பின்னுள்ளது யாது? சூனியமே! ஒன்றுமின்மையே! அவ்வளவும் நுரை மட்டுமே! கடவுளின் அவதார வழிபாட்டை எதிர்த்து ஒருவர் அறிவு நலம் மிக்க சொற்
பொழிவை நீர் அடுத்த முறை கேட்குங்கால், அவரைப் பற்றி இழுத்து, `கடவுளைப் பற்றி நீர் கொண்ட கருத்து யாது? ஸர்வ சக்தித்துவம்.' `ஸர்வ வியாகபத்துவம்' என்பவற்றிற்கும் இவை போன்ற பிற மொழிகட்கும் அவற்றின் எழுத்துகளுக்கு அப்பால் நீர் கண்ட பொருள்கள் எவை?' என்று வினவுவீராக.
அவற்றால் அவர் அறிந்தது யாதுமில்லை என்பதே உண்மை. அவரது சொந்த மனித இயற்கையால் பாதிக்கப்படாத எக்கருத்தையேனும் அவற்றின் பொருளாக அவர்க்கு வரையறுத்துக் கூற இயலாது. இது பற்றிப் பேசின், ஒரு நூலையும் வாசித்திராதொரு மனிதன் அமைதியாய் இருப்பான். உலக அமைதியைக் குலைக்காதிருப்பான். ஆனால், இப்பெரிய பேச்சாளரோ மன்னுயிருக்குத் தொந்தரவையும், துயரத்தையும் படைத்தளிப்பார். யாது கூறினாலும் சமயம் என்பது அனுபூதியே, பேச்சுக்கு. அனுபூதி ஞானத்திற்கும் மிகச் செவ்வனே வரையறுக்கப்பட்டுள்ள வேறுபாட்டைக் காண வேண்டும்.
நாம் ஆன்மாவிற்குள் ஆழத்தைப் பெறும் அனுபவமே மெய்யுணர்வாகும். இப் பொருள் பற்றியவரை பொது அறிவைப் போன்ற அத்துணை அசாதாரணமானது உண்மையிற் பிறிதொன்றில்லை.
நமது இப்போதைய அமைப்பால் நாம் வரையறையுற்றவர் ஆதலின், இறைவனை மனிதனாகக் காணும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாவோம். உதாரணமாக எருமைகள் இறைவனை வணங்க விரும்புமாயின், அவை தமது சொந்த இயற்கைக் கேற்ப, அவரை ஒரு பேரெருமையாகவே காணும். ஒரு மீன் இறைவனை வழிபட விரும்புமாயின், அவரைப் பற்றிய ஒரு கருத்து ஒரு பெரும் மீனாகவே அமைய வேண்டியதாகும். மனிதனும் அவரை மனிதனாகவே நினைக்க வேண்டியவனாவான்.
இப் பல்வகைக் கருத்துகளும் நோயினால் விரைவுற்ற கற்பனையில் எழுந்தவையல்ல. மனிதனும், எருமையும், மீனும் யாவும் அத்தனை வேறு வேறான கலங்களைக் குறிப்பதாகக் கருதலாம். இத்தனைக் கலங்களும் தத்தம் சுய வடிவிற்கும், கொள்ளும் அளவிற்கும் ஏற்ப நீரை நிரப்பிக் கொள்ளும் பொருட்டு இறைவன் என்னும் கடலுக்குச் செல்லுகின்றன. மனித கலத்தில் நீர் மனித வடிவையும், எருமைக் கலத்தில் எருமை வடிவையும், மீன் கலத்தில் மீன் வடிவையும் பெறுகிறது. இக்கலங்கள் ஒவ்வொன்றிலும் இறைவன் என்னும் கடலிலுள்ள இதே நீர் உள்ளது. மனிதர் இறைவனைக் காணும் போது, அவனை மனிதனாகக் காண்கின்றனர். விலங்குகளிடம் இறைவனைப் பற்றிய கருத்து இம்மியேனும் உண்டாயின் ஒவ்வொன்றும் அதன் தன் சொந்த இலட்சயத்திற்கு ஏற்ப அந்தந்த விலங்காகத்தான் அவரை கண்டு தீர வேண்டும். ஆதலால் இறைவனை மனிதனாகக் காணுதல் நமக்கு தடுக்க வொண்ணாதது. ஆதலால் அவரை மனிதனாக வழிபடும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகிஇருக்கிறோம்.
கடவுளை மனிதனாக வழிபடாதவர் இரு வகையினர். அவருள் மதம் என்பதில்லாத காட்டுமிராண்டிகள் ஒரு வகையினர்; மானிட எளிமைகளெல்லாம் தாண்டி அப்பாற் சென்றவர்களும், தங்களுக்கு இயல்பான மானிட சுபாவத்தின் எல்லையைக் கடந்தவர்களுமான பரமஹம்சர்கள் மற்றொரு வகையினர். அவர்களுக்கு `பிருகிருதி' எல்லாம் தாமே ஆகிவிடுகின்றன. அவர்களே கடவுளை அவருடைய உண்மை நிலையில் வைத்துப் பூஜிக்கக் கூடும். பிற விஷயங்களில் போல இரண்டு ஓரங்களும் மடமையின் எல்லையும், ஞானத்தின் எல்லையும் ஒன்று கூடுகின்றன.
இவ்விருவரும் பூஜை புரிய வேண்டியதில்லை. காட்டுமிராண்டி, தன் அஞ்ஞானத்தால் பூஜை செய்வதில்லை. ஜீவன் முக்தர்கள் (வீடு பெற்றவர்கள்) கடவுளைத் தம்மிடத்தில் காண்பதால் பூஜை செய்வதில்லை. இவ்விரு நிலைகளுக்கும் இடையிலே நிற்கும் எவனேனும் கடவுளைத் தான் பூஜை செய்யப் போவதில்லை என்று கூறுவானானால் அவனிடம் விழிப்பாயிரு. மரியாதையாகச் சொல்லுவோமானால், அவன் பொறுப்பற்றுப் பேசுகிறவன். அவன் மதம் நேர்மையற்றது; அறிவற்றவர்களுக்கே ஏற்றது எனலாம்.
மானிடர்க்குரிய குறைகளைக் கடவுள் அறிகிறார். மானிட இனத்திற்கு நன்மை புரியும் பொருட்டு அவர் ஒரு மனிதராகிறார். `தர்மம் குறைந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்; யுகந்தோறும் அறத்தை நிலை நிறுத்தவும், மறத்தை அழிக்கவும், நல்லோர்களைக் காக்கவும் நான் வருகிறேன்.'
`முரடர்கள் மானிட உருவெடுத்து என்னை, நான் சர்வ லோகங்களுக்கும் பிரபு என்பதை உணராமல் இகழ்கிறார்கள்'. இதுவரை அவதாரங்களைப் பற்றி கீதையில் சொல்லப்பட்டவை, `பெரும் புயல் வரும் போதே சிறிய வாய்க்கால்களும், சாக்கடைகளும் தாம் அறியாமலே வெள்ளத்தால் நிரம்பி விடுகின்றன. அப்படியே அவதாரம் என்று உலகில் ஏற்படும் போது, பெரியதோர் ஆன்மிக வெள்ளம் உலகத்தில் பரவ, மக்கள் யாவரும் வானமெல்லாம் ஆன்மிகம் நிறைந்துள்ளதை உணர்கிறார்கள்!' என்று பகவான் இராமகிருஷ்ணர் கூறுகிறார்.
மேலே நான் குறிப்பிட்டிருப்பது சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவில் ஒரு பகுதியாகும்.
கீதையை உபதேசித்த கண்ணன் யார்? அவன் மனிதனா, கடவுளா? கடவுளை மனிதனாகக் காண்பது சாத்தியமா?
இந்தக் கேள்விகளுக்குத்தான் சுவாமி விவேகானந்தர் மேலே கண்டபடி பதில் அளிக்கிறார்.
மற்ற மதங்கள், கடவுளை மனிதரின் தூதுவராகக் காண்கின்றன.
இந்துக்கள் கடவுளையே மனிதராகக் காண்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் சொல்வது போல், எருமையின் கண்ணுக்குக் கடவுள் ஒரு பெரிய எருமை என்றால், மனிதனின் கண்ணுக்குக் கடவுள் ஒரு மனிதர் தான்.
அதனால்தான், அவதார புருஷர்களை நாம் வழிபடுகிறோம்.
இராமாவதாரத்தையும், கிருஷ்ணாவதாரத்தையும் மனிதர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, அந்த இருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவதாரங்கள்.
அவர்களிலே கிருஷ்ணன் ஒரு ஞானாசிரியன்; இராமன் ஒழுக்கத்துக்கு இலக்கணமான பேராசிரியன்.
கடவுளை மனிதனாகப் பார்ப்பதால் தான் அவனைக் காதலியாக, காதலனாகப் பாவிக்கிறோம்.
இந்த பாவனையில் தெய்வத்தின் ஸ்வரூபமல்லாது, விஸ்வரூபம் வெளியாகிறது.
தாயைப் பார்க்கும் மகனைப் போல ஆண்டவனை நாம் பார்க்கிறோம்.
மனிதர்கள் அணியும் ஆடைகளையே அவனுக்கும் அணிவிக்கிறோம்.
மனிதர்கள் சூடிக் கொள்ளும் மலர்களையே இறைவனுக்கும் சூட்டுகிறோம்.
அந்த மனித பாவத்தில், நம்முடைய அறிவு லயித்து விடுகிறது.
தெய்வம் என்பது எல்லாவற்றையும் கடந்தது என்ற நிலைபோய், அது நம்மோடுஇருக்கும் ஒன்று என்ற நிலை வந்து விடுகிறது.
மனிதனுடைய பகுத்தறிவு, தெய்வத்தைப் பக்கத்தில் காணவே விரும்பி இருக்கிறது. அந்த விருப்பத்தின் உருவங்களே அவதாரங்கள்.
அத்தகைய அவதார புருஷர்கள் பிற்காலத்தில் பிறக்கவே இல்லையா என்றால், இன்றும் பிறந்திருக்கிறார்கள் என்பதே பதிலாகும்.
ஆடி, ஓடி, அலுத்துக் களைத்து, நோய்வாய்ப்பட்டுச் சாகும் மனிதனுக்குக் காட்டுக்கு நடுவே இருக்கும் ரோட்டைக் காட்டுவது போல், ஞானத்தை ஊட்டும் நல்லாசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
அவர்களில் பலர், தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால், அவதாரங்களாகவே வாழ்கிறார்கள்.
உயர்தர மருத்துவர்களே, `என் விதி முடிந்து விட்டது' என்று சொல்லும் போது, உள்ளூர் மருத்துவர்கள் ஏன் கையைப் பிடித்துப் பார்க்க வேண்டும் என்பது போல, ரமண மகரிஷி இறைவன் திருவடிகளை அடைந்தார்.
சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் தங்களை ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள். அந்த இடத்திலேயே நிலையாக நின்று விடுகிறார்கள்.
அவர்களில் ஒருவரை நாடி, உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பால வயதில் இருந்து குருசிஷ்ய பாவத்தில் ஈடுபடாதவர்கள் நடுத்தர வயதில் அப்படியொருவரை அணுகுவதே நிம்மதிக்கு வழி.
வெறும் புத்தகங்களைப் படிப்பதின் மூலமே ஞானம் பெற்றுவிட முடியாது.
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால் தான் அழுகை அடங்குகிறது.
யாராவது ஒரு ஞானாசிரியரிடம் உபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலே தான், ஏற்கெனவே இருந்த மனோபாவம் மாற முடியும்.
வாழ்க்கை வெறும் கேள்விக் குறிகளாலே ஆனது.
சிக்கல் விழுந்துவிட்ட அந்த நூலை அறுந்து விடாமல் ஜாக்கிரதையாகப் பிரிக்க வேண்டும்.
அந்த வேலை தையல்காரருக்குத் தெரிந்த அளவு நமக்குத் தெரியாது.
நாமே நமக்குள் பெற்றுக் கொள்ளக் கூடிய நிம்மதியை நூறு மடங்காக ஆக்கத் தெரிந்தவர்கள் ஞானிகள் மட்டுமே.
அவர்களை அண்டி, மிச்சக் கால வாழ்க்கையை மேன்மைப்படுத்திக் கொள்ள முயல்வதே நிம்மதிக்கு ஒரே வழி.

No comments:

Post a Comment