Posted On Aug 2,2012,By Muthukumar |

தபசு என்றால் தவம். திருநெல்வேலி மாவட்டத்தில் சமையல்காரரை தபசுப்பிள்ளை என்பர். சமையல் கூட ஒரு வகையான தவம் தான். தவத்திற்கு தேவை, மனதை ஒருமுகப்படுத்துவது. சமையலுக்கு தேவையும் அதுவே. சற்று கவனம் சிதறினாலும், உப்போ, காரமோ கூடி விடும். அதனால் தான், மனதை ஒருமுகப்படுத்தி, சமையல் செய்பவரை, தபசுப்பிள்ளை என்றனர்.
பார்வதிதேவியும், சிவனும் இணைந்து, அர்த்தநாரியாகக் காட்சி தந்துள்ளனர். அர்த்தம் என்றால் பாதி. நாரி என்றால் பெண். பாதி பெண்ணும், பாதி ஆணும் கொண்ட வடிவம் இது. இதே போல, அம்பாளுக்கு தன் கணவரையும், அண்ணனையும் ஒருசேரக் காணும் எண்ணம் ஏற்பட்டது. இந்தக் காட்சி, சாதாரணமாக கிடைத்து விடுமா? அதற்காக, பூலோகம் வந்து தவம் செய்தாள். அவளுடன் தேவர்கள், பசு வடிவில் வந்தனர். பசுக்களை, "கோ' என்றும், "ஆ' என்றும் சொல்வதும் வழக்கம். அம்பாள், அவர்கள் மத்தியில் நிலவை போல் பளிச்சென நின்றாள். இதனால், அவள், "ஆ'க்களை உ<டையவள் என்ற பொருளில் ஆவுடையம்மாள் என்றும், "கோ'க்களின் மத்தியில் பிரகாசமாக நின்றவள் என்ற பொருளில், கோமதி என்றும் பெயர் பெற்றாள்.
ஆடிமாத பவுர்ணமியன்று, சிவனும், நாராயணனும் இணைந்து, சங்கரநாராயணராக கோமதிக்கு காட்சி தந்தனர். இவ்வூரே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரநாராயணர் கோவில் ஆனது. அது@வ, சங்கரன்கோவில் என பெயர் மாற்றம் பெற்றது.
திருநெல்வேலியில் இருந்து, 35 கி.மீ., தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சென்று, அங்கிருந்து, 6 கி.மீ., தூரத்திலுள்ள கோடரங்குளம் கிராமத்திலும் ஒரு சங்கரன்கோவில் உள்ளது. இதை, தெற்கு சங்கரன்கோவில் என்பர். தாமிரபரணியும்,
மணிமுத்தாறும் கலக்குமிடத்திலுள்ள இந்த கோவிலிலும், ஆடித் தபசு விழா பிரசித்தம். ஆடித்தபசு திருவிழாவின் போது, தாமிரபரணி நதிக்கரையில் தபசு மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளுகிறாள். சிவன் சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமாகவும் காட்சி தருகிறார்.
இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக ராகு, கேது அம்சமாக உள்ளார். எனவே, ஜாதக ரீதியாக இந்த தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடைக்கு ஆளாவர். அவர்கள் ஆடித் தபசு விழாவில், கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், தடை நீங்கும் என்பது ஐதீகம். வீடுகளில் பல்லி, பூரான் உள்ளிட்ட பூச்சித்தொல்லை அதிகமாக இருந்தால், அது குறைய, இந்தக் கோவிலில் விற்கப்படும் பூச்சி உருவங்களை உண்டியலில் இடுகின்றனர். முகப்பரு உள்ளவர்கள், உப்பு, மிளகு காணிக்கை செலுத்துவது வழக்கம்.
விவசாயிகளுக்கு இது முக்கியத் திருவிழா. "ஆடிப்பட்டம் தேடி விதை' என்பர். ஆடியில் துவங்கும் விவசாயப் பணிகள், தங்குதடையின்றி நடந்து, விளைச்சல் பெருக, அம்பாளை வேண்டி வரலாம். அம்பாளுக்கு காணிக்கையாக, விளை பொருட்களை அளிப்பதும், இங்கு மரபாக உள்ளது. அம்பாளின் தபசுக் காட்சி காணும் பக்தர்கள், பிறந்த வீடு, புகுந்த வீடு சண்டையை மறந்து, ஒற்றுமையாக வாழ உறுதியெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment