Thursday, August 9, 2012

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள்

Posted On Aug 9,2012,By Muthukumar
எமது பதிவுகளைப்படிக்கும் பலர் ஆர்வத்துடன் யோக, மன, சித்த ரகசியங்களை பதிவிடும்படியும் மேலதிக விபரங்களைதரும்படியும் மின்னஞ்சல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரது ஆவலையும் தாகத்தினையும் தீர்க்கும் வண்ணம் எம்மால் எழுதுவதற்கு காலதேவனும், எமது நாளந்த கடமைகளும் அனுமதிப்பதில்லை. இந்தபதிவுகளில் வரும் விடயங்கள் அனைத்தும் எமது தேடலிலும் குருநாதரிடம் பயின்றவற்றையும் சுருக்கு இந்த துறையில் ஆர்வம் உடைய அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிடப்படுகிறது. ஆர்வம் உடையவர்களுக்கு சரியான பாதை தெளிவு எமது பதிவுகளால் கிடைக்குமானால் குருஅருள் எனக்கொள்க!

எமது நேரக்குறைவு காரணமாக மிகச்சொற்பமான அளவே எம்மால் இதற்காக அர்ப்பணிக்க முடிகிறது என்பதில் மனவருத்தமே! யோக வித்தையில், சித்த வித்தையில் ஆர்வம் உடையவர்களுக்கு பயன்படக் கூடிய அரிய நூல்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.

அந்த வரிசையில் முதலாவது நூல் 

மானச யோகம்

ஆசிரியர்: டாக்டர். பண்டிட். ஜீ. கண்ணைய யோகி.


ஆசிரியர் பற்றிய அறிமுகம்

கண்ணைய யோகியார் ஐந்தாவது வயதிலேயே அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பொதிகை, நீலகிரிப்பகுதிகளில் உள்ள சூஷ்ம சித்தாஸ்ரமத்தில் ஆன்ம, யோக, ஞான, மானச, சித்த பயிற்சிகள், மந்திர, யந்திர, சாஸ்திரங்கள், மூலிகை மர்மர், சித்த வைத்தியம், இரசவாதங்கள் என்பன பயிற்று வித்து தனது கர்ம பலனை அனுபவித்து தீர்த்து வரும்படி குரு உத்தரவிட்டதன் பெயரில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரண பாமரன் போல் சென்னை அம்பத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்தவர், அவர் எக்காரணம் கொண்டும் தந்து ஆற்றலை, சித்திகளை தனது பெயரிற்கோ, புகழிற்காகவோ வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அகஸ்திய மகரிஷியின் உத்தரவின் பெயரில் புலிப்பாணிச் சித்தரிடமும் வித்தை பயின்றவர். குரு நாதரின் ஆணையில் தனது கர்மவினையினை அனுபவித்து வந்த அதே வேளை உண்மையான சித்தர் வழி சாதனை புரிபவர்களுக்காக இக்கால மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சித்தர்களின் கலைகளை சிறு சிறு பாடங்களாக தமது கைப்பட எழுதி தம்மை அண்டி வந்த மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். அவரது மாணவர்கள் மிகச்சிலரே! அதைக்கொண்டே உண்மை யோகியின் இலட்சணம் அறியலாம்! இன்று ஒரு சில புத்தகங்களை படித்து விட்டு தங்களை யோகி எனக் கூறிக்கொள்பவர்கள் இருக்கையில் தமது மாணவர்களுக்காக மிக எளிய முறையில் எழுதி அவற்றை பயிற்சி செய்ய வைத்து இடையில் வரும் சந்தேகங்களை தீர்த்து அவர்களையும் உன்னத இறை நிலைக்கு அடைய வைக்கும் உண்மை குருவாக திகழ்ந்தவர்கள். "நூறாண்டு காலம் வாழ வழி" என மாணவர்களுக்கு கற்பித்த வாரே 108 ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து காட்டியவர். கற்பிக்கும் அனைத்து வித்தைகளையும் ஆதாரப்பூர்வமாக விஞ்ஞான விளக்கங்களுடன் கற்பித்தவர். 

மேலும் கண்ணைய யோகியார் பற்றி வேறு பதிவுகளில் பார்ப்போம். 

கண்ணைய யோகியாரின் மாணவர்களில் முதன்மையானவரும் குரு பணிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் எமது குரு நாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், காயத்ரி சித்தர் இலங்கையில் சாதாரண தொழிலாளி ஒருவரின் மகனாக பிறந்து, குருவருளால் அகஸ்தியமகரிஷியின் தொடர்பு பெற்று அவர் வழிகாட்டலில் கண்ணைய யோகியரிடம் சென்று கிட்டத்தட்ட 44 வருடங்கள் குரு சேவை செய்து கண்ணைய யோகியாரின் பரிபூரண ஞான அருள் பெற்றவர். கண்ணைய யோகியாரிடம் பெற்ற காயத்ரி குப்த விஞ்ஞான சாதனை பயிற்சி மூலம் அருள் நிலை அடைந்தவர். 

மற்றவர் தமிழ் நாடு இரயில் திணைக்களத்தின் உயர் பதவி வகித்து, தந்து இல்வாழ்க்கையினையையே யோக வாழ்க்கை ஆக்கி கண்ணைய யோகியாரிடம் இராஜ யோக பயிற்சி (அக்காலத்தில் ஜனக மஹாராஜா வாழ்ந்த நிலையே உண்மையான இராஜ யோகம்) என்னும் உயர் பயிற்சி பெற்ற அருட் திரு. இராஜமோகன் அவர்கள். இராஜ மோகன் ஐயா அவர்கள் தமது பணி ஓய்வின் பின் தமது குரு நாதர் தமக்கு கற்பித்த ஞானத்தினை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அத்துடன் குரு நாதர் கையெழுத்துப்பிரதிகளாக கற்பித்த வித்தைகளை புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்கள். அத்தகைய ஒரு பாடமே மானச யோகம் எனும் இந்த நூலாகும். 

மானச யோகம் ஏன் வெளியிடப்பட்டது?

யோகம், ஞானம், பக்தி, கர்மம், நாத்திகம், விஞ்ஞானம் மற்றும் எந்த கொள்கையாயினும், சமயம், வழிபாடு அரசியல் என்று இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்தும் மனதின் வழியாகவே செயற்படுகிறது. மனதின் வழியில்லாமல் மனிதனிற்கு இகவாழ்வுமில்லை பரவாழ்வுமில்லை. இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் மனமே! மனதினை கட்டுப்படுத்தினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். இதுவே அகத்திய மகரிஷியின் மூல உபதேசம். 

இதை எப்படி செயல்முறையில் செய்வது என்பதனைக் கூறுவதுதான் மானச யோகம். 

குரு நாதர் கீழ்வரும் தலைப்புகளில் மனதின் செயல் முறையினை மிக எளிய முறையில் நுண்மையாக விளக்கியுள்ளார். இந்த நூலினை கற்ற பின் (முழுமையாக புரிந்து கொள்ள பல முறை வாசிப்பு தேவை) ஒருவன் மனம் பற்றியும் அதன் செயல்முறை, அதனால் ஏற்படும் விளைவிகள் என்பவற்றை தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

பொருளடக்கம்
  1. வாழ்க்கையின் குறிக்கோள்
  2. வாழ்க்கையின் வேற்றுமைகள்
  3. மனமும் வாழ்க்கையும்
  4. மனதின் இலக்கணம்
  5. மனதின் இயக்கம்
  6. சங்கற்ப விகற்பங்கள்
  7. மனமும் உடலும்
  8. மனமும் கர்மாவும்
  9. மனமும் சித்தமும்
  10. மனமும் சோதிடமும்
  11. மனமும் கடவுளும்
  12. மனமும் ஒழுக்கமும்
  13. மனமும் சூழ் நிலைகளும்
  14. மனசிருஷ்டி விஞ்ஞானம்
  15. மன சக்தி
  16. மன அலையின் தத்தும்
  17. மனமும் தெய்வ ஞானமும்
  18. மானத தந்தி விஞ்ஞானம்
  19. சூஷ்ம திருஷ்டி விஞ்ஞானம்
  20. சூஷ்ம யாத்திரை
  21. சூஷ்ம தரிசனம்
  22. மனமும் பேய் பிசாசுகளும்
  23. மனமும் ஏகாக்கிரமும்
  24. மனமும் தியானமும்
  25. மனமும் அட்டமாசித்திகளும்
  26. மனமும் ஹிப்னாடிசமும்
  27. எளிய மனச் சாதனைகள்
  28. மனமும் முக்தியும் 
  29. முடிவுரை 

அனைத்து அத்தியாயங்களும் இரத்தின சுருக்கமாக விடயத்தினை தெளிவாக கூறி அதனை செயன் முறைப்படுத்தும் வழியினையும் கூறுகிறது. 

மனதினைப்பற்றி அறிந்து கொள்ளவிரும்புபவர்கள், யோக சாதனை செய்பவர்கள் எந்த மார்க்கத்தினை சேர்ந்தவர்களாயிருந்தாலும் இந்த நூலினை வாசித்தல் அவர்களது வாழ்வினை மாற்றும் என்பதற்கு நாம் உறுதி கூறிகிறோம். 

பெற விரும்புபவர்கள் கீழ்வரும் முகவரியில் தொடபு கொண்டு விபரங்களை பெறமுடியும்:
  • ஆத்ம ஞான யோகசபை, சென்னை : 044-26531166/09840987338/09383531166
  • ஆத்ம ஞான யோக சபை, கொழும்பு: 0094-75-7287151/0094-77-6271292

No comments:

Post a Comment