Saturday, August 11, 2012

சூஷ்ம பார்வையில் ஆக்ஞா சக்கரத்தின் செயல் முறை

Posted On Aug 12,2012,By Muthukumar


சென்ற பதிவில் தெய்வ ஜோதி வடிவாக காணப்படும் சகஸ்ரார சக்கரம் பற்றிப் பார்த்தோம். இந்த சக்கரமே சக்தியின் மூலம். இந்த பதிவில் இந்த சக்கரத்தின் ஒளி பரவுவதன் மூலம் சூட்சும பார்வையினை மனிதனிற்கு வழங்கும் சக்கரமான ஆக்ஞா சக்கரம் பற்றி பார்ப்போம். சகஸ்ரார ஒளி ஒவ்வொரு சக்கரங்களில் பாயும் போதும் அந்த சக்கரத்திற்குரிய சூஷ்ம சக்திகளை பெறுவோம் என்பதே இதன் அடிப்படை. அந்த வகையில் ஆக்ஞா சக்கரம் சூஷ்ம பார்வையினைத் தரக்கூடியது. 

இது மனிதனின் இரு புருவங்களுக்கு நடுவே நெற்றியில் இருக்கிறது. மனிதனது மன எண்ணங்களின் வேகங்களுக்கு உத்வேகங்களுக்கு ஆதாரமாக உள்ளது இந்த சக்கரமே. ஒருவன் ஆழ்ந்து சிந்திக்கும்போது புருவமத்தி சுருங்கி மடிவதனை அவதானிக்கலாம். ஒருவன் மனதினை ஏகாக்கிரப்படுத்தும் போது இந்த சக்கரம் செயல்படவேண்டும். அதன் மறுதலையாக இந்த சக்கரத்தினை செயற்படுத்தினால் மனம் ஏகாக்கிரமடையும். ஒருவன் தனது கண்களை உட்புறமாக திருப்பு புருவத்தினை நோக்கு செலுத்தி ஒரு விடயத்தினை சிந்திக்கும் போது ஆழமாக சிந்திக்கலாம். இதனை நீங்கள் உங்கள் அனுபத்திலேயே உணரலாம். ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு நெற்றிப்பொட்டில் சிறிது நம நமப்பு உணர்ச்சி தோன்றும். இந்த சக்கரத்தின் மீது ஒருவர் கவனிப்பதன் மூலம் ஒருவர் தனது மனதின் மீது பரிபூரண கட்டுப்பாட்டினை அடையலாம். 

யோக சாதனையிலும் யோக நூற்களிலும் புருவ மத்தியில் பார்வையினை செலுத்தி தியான, ஏகாக்கிர சாதனைகள் செய்யும் படி கூறப்படுவதன் காரணம் இதுதான். 

கண்களை உள்முகப்படுத்தி (அதாவது கண்ணை மூடி, விழிகளை )ஆக்ஞா சக்கரத்தின் பால் செலுத்தி நெற்றிக்குள் இருக்கும் இருட்டை கவனிக்கத்தொடங்கினால் சற்று நேரத்தில் இருள் நீங்கி ஒளி தோன்றத்தொடங்கும். மேலும் சற்று நேரம் அவதானிக்க படிப்படியாக காட்சிகள் தோன்றத்தொடங்கும். எங்கிருந்து இந்த ஒளி வருகிறது. சகஸ்ரார சக்கரத்திலுள்ள ஒளி மனதினை ஆக்ஞா சக்கரத்தில் ஒருமுகப்படுத்தும் போது வருகிறது. இந்த நிலையினால் சகஸ்ரார சக்கரத்திற்கும் ஆக்ஞா சக்கரத்திற்கும் தோடர்பு ஏற்பட்டு ஆக்ஞா சக்கரம் செயற்படத்தொடங்குகிறது. இந்த மன ஏகாக்கிரம் கூட கூட இந்த ஜோதி ஆக்ஞா சக்கரத்தினூடாக எமது இச்சா சக்தி கொண்டு வெளிப்படுத்தினால் எம்மைச் சுற்றியுள்ள சூஷ்ம உலகம் அந்த ஒளிப்பிரவாகத்தில் தோன்றத் தொடங்கும். இதன் பின் எமது இச்சா சக்தி மூலம் எந்த சூஷ்ம விடயங்களை காணவேண்டும் என சங்கல்பிக்கின்றோமோ அந்த விடயம் நேரடியாக நடப்பது போல் காட்சிகளாக தோன்றும்.  

இதுவே சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுறது என்பதற்கு விளக்கமாகும், வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக இதன் சுருக்கத்தினை கீழே தந்துள்ளோம். 

மனிதனின் சூஷ்ம உடலில் உள்ள சக்கரங்களை விழிப்பித்து சூஷ்ம சக்திகளை அடைலாம்.

இந்த சூஷ்ம் சக்திகளுக்கு ஆதாரம் சகஸ்ரார சக்கரத்தில் உள்ள தெய்வ ஒளியில் உள்ளது.  அந்த தெய்வ ஒளியினை குறித்த சக்கரத்தில் எமது இச்சா சக்தி மூலம் பரவச் செய்தால் சூஷ்ம புலனறிவுகளையும் சக்திகளையும் பெறலாம்.

அந்த அடிப்படையில் சூஷ்ம பார்வையிற்கு ஆக்ஞா சக்கரத்தினை செயற்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம். 

இந்த பதிவின் இறுதியில் வாசிக்கும் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் இந்த குறிப்புகள் யோகசாதனையின் வழி சாதனை புரிபவர்களுக்கானது. சக்கரங்கள், சூஷ்ம உடல், சூஷ்ம உலகம் பற்றி நன்கு கற்றறிந்து அனுபவமுடைய குருவின் வழி அனுமதி பெற்றே இதனை செய்தல் வேண்டும். இந்த பதிவு தகவலுக்கு மட்டுமே. முயற்சித்து பலனடைய வேண்டுபவர்கள் தக்க குருவை அடைந்து முயற்சிகவும். நாம் இருக்கும் சூழல், வாழ்க்கை முறைக்கு அமைய இந்த ஆற்றல் ஆன்ம வாழ்க்கைக்கும், உலக வாழ்க்கையும் இடையூறானதாக கூட அமையலாம். 

ஸத்குரு பாதம் போற்றி!

No comments:

Post a Comment