Wednesday, July 25, 2012

உண்ணாவிரதம்

Posted On July 25,2012,By Muthukumar
உலகத்தில் அதிகம் சாப்பிட்டுச் செத்தவர்கள் உண்டே தவிர, குறைத்துச் சாப்பிட்டு மாண்டவர்கள் குறைவு.
ஒரு மகாராஜா சாப்பாட்டில் ஆழாக்கு நெய் ஊற்றிக் கொள்வார். ஆட்டுத் தலை தான் அதிகம் சாப்பிடுவார். கொழுப்புச் சத்துக்களை மிக அதிமாகச் சேர்த்துக் கொள்வார். ஆனால், வருஷத்தில் ஒரு மாதம் லங்கணம்!
உடம்பில் உள்ள கொழுப்பை இறக்குவதற்கு, அந்த ஒரு மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.
இரண்டு பேர் தினமும் ஒருவகை எண்ணெய் போட்டு உடம்பைத் தேய்ப்பார்கள். இரண்டு வேளை உணவு. இரண்டு வேளையும் அரைக்கிலோ வெங்காயம் சாப்பிடுவார்கள்.
வெங்காயத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு: கொழுப்பைக் கரைக்கும். காம இச்சையைத் தூண்டும்.
அதனால் தான் நெய்யும், சர்க்கரையும் அதிகம் சாப்பிடுகிற பிராமணர், வெங்காயச் சாம்பார் சேர்த்துக் கொள்கிறார்கள்.
விதவைகள் வெங்காயம் சேர்ப்பதில்லை.
காஞ்சிப் பெரியவர்கள் ஒரு பிடி அவலிலும், பாலிலுமே காலம் கடத்துகிறார்.
வாரியார் சுவாமிகளும் அப்படியே.
மலையில் வாழ்ந்த சித்தர்கள், சமையல் செய்தா சாப்பிட்டார்கள்? காய், கனி, கிழங்கு கந்த மூலங்களோடு சரி.
இந்துக்கள் வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
நான் சொன்ன மகாராஜாவைப் போல முஸ்லிம்கள் வருஷத்தில் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இந்துக்களில் சிலர் திங்கட்கிழமை `சோமவார' விரதம்; சிலர் செவ்வாய் விரதம்; சிலர் சனிக் கிழமை விரதம்; அது போல மாதங்களும் உண்டு. அது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
சிலர் ஆடி மாதம் முழுக்க மாமிசம் சாப்பிட மாட்டார்கள். சிலர் புரட்டாசி.
என்னுடைய சுவீகாரத் தாயார், கார்த்திகை விரதி.
உணவு செரிமானத்தை ஒழுங்கு படுத்துவதே உண்ணா விரதத்தின் நோக்கம்.
இது இறைவன் பெயரால் வழங்கப்படும் தேக ஆரோக்கியம்.
தெய்வ பக்தியோடு இந்துக்கள் ஆரோக்கியத்தைக் கலந்தார்கள்; காந்தியடிகள் தேச பக்தியும் கலந்தார்.
உண்ணாவிரதத்தை ஒரு ஆயுதமாக்கி, தேச பக்திக்கு அதைப் பயன்படுத்தினார்.
தன்னை வருத்திக் கொள்ளும் அந்த முறையின் மூலம் அந்நிய அதிகார வர்க்கத்தை அவர் நடுங்க வைத்தார்.
அவரது தேக ஆரோக்கியத்திற்கும் கூட, அவர் மேற்கொண்ட உண்ணா விரதங்கள் பயன்பட்டன.
மகாகவி பாரதியார் சொல்வது போல் நிறையச் சாப்பிடக் கூடாது என்பதும் தவறு; நிறையச் சாப்பிட வேண்டும் என்பதும் தவறு. அளவறிந்து சாப்பிட வேண்டும்.
இப்போதெல்லாம் டாக்டர்கள் வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள். அதாவது `இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தரம் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்' என்று. `வயிறு காலியாகக் கிடப்பதால் தான் வாயு உற்பத்தியாகிறது' என்கிறார்கள்!
அது ஓரளவுதான் உண்மை.
வாயுவில் மூன்று வகை உண்டு.
ஒன்று காலியான வயிற்றில் உண்டாவது. மற்றொன்று உஷ்ண வாயு. இன்னொன்று பதார்த்த வாயு.
உஷ்ணமில்லாத உடம்பில், உண்ணா விரதத்தினால் வாயு உண்டாவதில்லை.
எப்போதுமே உண்ணாவிரதம் உடம்பை உற்சாகமாக வைத்திருக்கும்.
அது வரம்பு மீறிப் பசி பட்டினி என்று போகும் போது தான் களைப்புத் தோன்றும்.
இப்படி நான் சொல்வது, உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு மட்டுமே.
நல்ல உழைப்பாளிகள் சாதத்தை மலையாகக் குவித்து அதிலே ஒரு குளம் வெட்டிச் சாம்பார் ஊற்றி நீச்சலடிக்கிறார்கள். அவர்களுக்கும் தொந்தி விழுகிறது. ஆனால் அந்தத் தொந்தி ஒரு பெரிய யானையையே தாங்கும்.
நாம் எங்கே உழைக்கிறோம்...?
நான் கூடச் சாப்பாடு குறைகிறதே என்று வருத்தப்படுவது உண்டு. இப்போது முப்பது பவுண்டு இளைத்துவிட்டேன். உடம்பு இளைக்கிறதே தவிர, களைக்கவில்லை.
நடமாடும் சக்தி பலவீனப்படாமல் இருக்கும் அளவுக்கே உணவு.
ஆசையிலும், பசியிலும் சில நாட்கள் அதிகம் சாப்பிட்டு விட்டால், அதைச் சமன் செய்யவே உண்ணாவிரதம்.
தெய்வ பக்தியுள்ள எந்த இந்துவுக்கும் இந்த விரதம் உண்டு.
இந்துக்களில் அதிகமான பேர் கைக்கொள்வது முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம்.
இது மாதத்தில் இரண்டு நாள் வரும்.
எனது உயிருக்கு உயிரான புரவலர் திரு.சின்னப்பா தேவர், இந்த சஷ்டி விரதத்தை நாற்பது வருஷங்களாகக் கடைப்பிடித்தார்.
அதே சஷ்டியில், வைசாகத்தில், வெள்ளிக்கிழமையில் அவர் மரணம் அடைந்தார்.
வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டியைவிடப் பிரதானமானது.
பக்தியுள்ள இந்துக்கள் ஒரு மாதத்தில் நான்கு வெள்ளி, இரண்டு சஷ்டி- ஆக ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது மாதத்தில் ஐந்தில் ஒரு பங்கு.
உடம்பு பலவீனம் அடையாமலும், அதே நேரத்தில் உடம்பு ஏறாமலும் இது காப்பாற்றுகிறது.
இன்னும் சில அதிசய இந்துக்கள் உண்டு. அவர்கள் ஒரு மாதம் முழுக்க உப்புச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
சிலர் நெய் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
உடம்பில் உப்போ, கொழுப்போ சேராமல் காப்பாற்ற எவ்வளவு அற்புதமான வழி!
இந்துமதம் ஆரோக்கியத்தையும், பக்தியையும் ஒன்றாக இணைத்தது.
`உடம்பு கெட்டுப் போனால் ஞானம் கை கூடாது' என்று அது கருதிற்று.
அதனால் தான் மருந்து மாத்திரைகள் இல்லாத காலத்திலேயே, நமது யோகிகளின் உடம்பு புடம் போட்டு எடுக்கப்பட்டது போலிருந்தது.
அவர்கள் படிக்கட்டில் ஏறினால் மூச்சு வாங்காது.
தண்ணீரில் நடந்து ஜலஸ்தம்பம் செய்வார்கள்.
காற்றைப்போல் துறுதுறுவென்று அலைந்தார்கள்.
`உண்ணா நோன்பு' என்பது ஒரு தவம்.
சிறு வயதில் இருந்தே அதை ஒரு பயிற்சியாகக் கொள்ள வேண்டும்.
முப்பது வயதுவரை கண்டதைத் தின்று விட்டால் வாய்வுத் தொல்லை வரும்.
அதன் பிறகு உண்ணாவிரதம் இருந்தால் வாய்வு அதிகமாகும்.
இளம் பருவத்தில் இருந்தே இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நான் படித்த குருகுலத்தில் உண்ணாவிரதம் இல்லையே தவிர, உணவு முறையில் ஒழுங்கிருந்தது.
புதன் கிழமையும், சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, மாதம் ஒரு முறை பேதிக்குச் சாப்பிடுவது. அன்று காலைப் பலகாரம் கிடையாது; அங்கே எண்ணெய்ப் பலகாரங்கள் போட மாட்டார்கள்.
காலைப் பலகாரத்தையும், இரவுச் சாப்பாட்டையும் அளந்து தான் கொடுப்பார்கள்.
பசி உயிர் போனாலும் அந்த விரதத்தில் ஒரு ஆரோக்கியம் இருந்தது.
வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் பயிற்சி, ஞானம் பெறுவதற்கான வழிகளில் ஒன்று.

No comments:

Post a Comment