Friday, July 27, 2012

குரு-சிஷ்ய பாவம்

Posted On July 27,2012,By Muthukumar
பண்டைய குருகுல முறைகள் இப்போது மறைந்து விட்டன.
குரு - சிஷ்ய பாவம் மறைந்து விட்டது.
ஆங்கிலக் கல்வியின் பெயரால் கல்லூரிகள் வெறும் பட்டதாரிகளையோ, காலிக் கும்பல்களையோ உற்பத்தி செய்கின்றன.
வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தை இன்றையக் கல்வி போதிக்கவில்லை.
ஐந்து வருஷம் பட்டப் படிப்புப் படித்தாலும் பயனில்லாத ஒரு கல்வியையே நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோம்.
ஒழுங்கீனமே கல்லூரியின் பிரதான அம்சமாகக் காட்சியளிக்கிறது.
சில கல்லூரிகளுக்குள் எல்.எஸ்.டி. மாத்திரைகளும், விஸ்கி பாட்டில்களும், கஞ்சாவும் தாராளமாக நடமாடுகின்றன.
அண்மையில் சென்னையில் மிகப் பிரபலமான டாக்டர் ஒருவரிடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் வந்தார். தொடையில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமையில் அவர் இருந்தார்.
அந்த டாக்டர் மருத்துவக் கல்லூரியோடு தொடர்புள்ளவர். அவருக்கு அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியும்.
`என்னம்மா, ஆபரேஷன் செய்யலாமா? இல்லை, ஒரு பெதடின் போட்டுக் கொள்கிறாயா?' என்று கேட்டார்.
`பெதடினே போடுங்கள், போதும்!' என்று கெஞ்சினார் அந்த இள நங்கை.
டாக்டர் ஆபரேஷனும் செய்யவில்லை; பெதடினும் போடவில்லை; அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
இன்று கல்வியின் தரமும் கெட்டு, மாணவர்களின் ஒழுக்கமும் பாழ்பட்டு விட்டது.
ஆனால், அந்நாளில் இந்துக்கள் ஒரு வகையான குருகுலப் பயிற்சியை வைத்திருந்தார்கள்.
ராம கதையில் வரும் ராமனும், இலக்குவனும் குரு குலத்தில் பயின்றவர்கள்.
மகாபாரதத்தில் வரும் பீமனும், அர்ஜூனனும் குருகுலவாசிகள்.
இந்துப் புராணப் பாத்திரங்கள் அனைத்துமே குருகுலப் பயிற்சியில் வளர்ந்தவையே.
அதிருஷ்டவசமாக நானும் நான்கு ஆண்டுகள் குருகுல வாசம் செய்தவன்.
`குரு வாழ்க, குருவே துணை' என்ற சுலோகத்தைச் சொன்னவன்.
நான் பயின்ற அமராவதி புதூர் குருகுலத்தில், அதிகாலை ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவார்கள்.
வகுப்பு வாரியாக மாணவர்கள் வரிசையில் அணிவகுத்து, வகுப்பு மானிட்டரின் தலைமையில் பின் பக்கத்துக் காட்டுக்குச் செல்வோம். அங்கே கலைந்து சென்று காலைக் கடன்களை முடிப்போம்.
பிறகு மீண்டும் வரிசையாக நின்று தியான மண்டபத்துக்குத் திரும்புவோம். அங்கே நான்தான் `பிரேயர்' பாட்டுப் பாடுவேன். மற்றும் சில மாணவர்கள் இரண்டொரு பாடல்கள் பாடுவார்கள்.
பிறகு கலைந்து சென்று எல்லோரும் கிணறுகளில் தண்ணீர் சேந்திக் குளிப்போம்.
சாப்பாட்டு விடுதியில் வரிசையாக அமர்ந்ததும், காலைப் பலகாரம் பரிமாறப்படும், அங்கேயும் சில கோஷங்கள் உண்டு.
அவற்றிலே கடைசி இரண்டு கோஷம், `காந்தியடிகள் வாழ்க! குருகுலம் நீடூழி வாழ்க!' என முடியும்.
அந்தக் கோஷம் முடிந்த பிறகுதான் எல்லோரும் சாப்பிடத் துவங்குவோம்.
சாப்பிட்டு முடிந்ததும் வகுப்புத் துவக்கத்துக்கான மணியோசை கேட்கும்.
வகுப்புகளுக்குள் நுழைவோம்.
பள்ளிப் பாடங்களுக்கிடையிலேயே தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், புகட்டுவார்கள். அன்றாடச் செய்திகளையும் சொல்வார்கள்.
மாலையில் விளையாட்டு; இரவிலே மீண்டும் தியானம்; படுக்கை.
காம்பவுண்டுச் சுவரைத் தாண்டி யாரும் வெளியே போக முடியாது.
எல்லோருக்கும் வரிசை நம்பர் உண்டு. நம்பரைச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.
என்னுடைய நம்பர் 498, `முத்து' என்பது என் பெயர்.
பாரதியின் கிளிப்பாட்டுகளை நான் அதிகம் பாடுவேன். அதனால் எனக்குக் `கிளிமுத்து' என்று பட்டம்.
உடம்பு இளைத்திருந்தால், `மீன் எண்ணெய்' கொடுப்பார்கள்.
ஓர் அழகான நூல் நிலையம் உண்டு.
சிறிய இரசாயனக் கூடம் உண்டு.
நான் பெரும்பாலும் நூல் நிலையத்தில் தான் காணப்படுவேன்.
இசை வகுப்புத் தொடங்கினார்கள்; அதில் நானும் சேர்ந்தேன்.
காலை நான்கு மணிக்கே எழுந்து பாடல் கற்றுக் கொள்ள வேண்டும்.
`சிதம்பர நாதா திருவருள் தாதா' என்பதே நான் கற்றுக் கொண்ட முதற் பாட்டு.
வித்வான் படிப்பு ஆரம்பித்தார்கள்; அதிலும் நான் ஒரு மாணவன்.
பத்துக்குப் பத்துச் சதுர அடியுள்ள நிலத்தை ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுப்பார்கள். அதில் அவனுடைய விவசாயத் திறமையைப் பார்ப்பார்கள்.
ஆளுக்கு ஒரு கன்றுக்குட்டி கொடுப்பார்கள். அதில் மாணவனுடைய கால்நடைப் பராமரிப்புத் திறமையைப் பார்ப்பார்கள்.
உள்ளேயே ஏராளமான கைத்தறிகள் உண்டு. மாணவன் அங்கே போய்த் தறி நெய்யக் கற்றுக் கொள்ளலாம்.
நான் அடிக்கடி அதில் தான் கவனம் செலுத்துவேன்.
ஒருநாள் ஒரு முழு வேட்டியையே நெய்து விட்டேன்.
நாங்கள் நெசவு செய்த வேட்டியைத்தான் நாங்கள் கட்டிக் கொள்வோம்.
சில தொழில் நெசவாளர்களும் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அதனால் வெளியில் துணி வாங்குவதே இல்லை.
வெளியிலே சுதந்திரப் போராட்டம் நடந்தது. உள்ளுக்குள்ளே அந்தக் கனலைக் குருகுலம் மூட்டிற்று.
1939 இல் இந்தி படிக்கும் பிரச்சினை எழுந்தது. குருகுலத்தில் இந்தி வகுப்பு ஆரம்பமாயிற்று. அன்றைக்கு நிர்வாகியாக இருந்த சுப்பிரமணிய நைனார் தான் இன்றும் இருக்கிறார்.
இந்தக் குருகுலம் போட்ட அடிப்படையில் தான் இன்றும் நான் உலாவிக் கொண்டிருக்கிறேன்.
அந்தக் குரு-சிஷ்ய பாவம், நாட்பட மறைந்து கொண்டே வருகிறது.
வாலாஜாபாத் இந்துமதப் பாடசாலையும், அமராவதி புதூர் சுப்பிரமணியம் செட்டியார் குருகுலமும் போன்ற சில மட்டுமே இன்னும் அதைக் கட்டிக் காத்துக் கொண்டு வருகின்றன.
வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர், துரோணர் போன்ற மகாத்மாக்கள் உற்பத்தி செய்த சீடர்களால் தான் இந்து மதம் செழித்துத் தழைத்தோங்கியது.
அந்தத் தத்துவ ஞான பீடத்தை கான்வென்ட் படிப்பு நிறுவ முடியாது.
பி.ஏ. படிப்பும், பி.எஸ்.சி. படிப்பும் மனிதனுடைய தார்மிக ஒழுக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாதவை.
குரு-சிஷ்ய பாவத்துக்குத் திரும்பினாலொழிய சராசரி வாழ்க்கையில் இனி நிம்மதி இருக்காது.
ஆசிரியரைக் கல்லால் அடிப்பது, அவதூறு பொழிந்து நோட்டீஸ் போடுவது, கல்லூரி மாணவியைக் கடற் கரையில் சந்திப்பது இவையெல்லாம் நாகரிகம் விளைவித்த கேடுகள்.
குரு-சிஷ்ய பாவத்தில் உடம்பும் உள்ளமும் பேணிக்காக்கப்பட்டன.
தேச பக்தியும், தெய்வ பக்தியும் சேர்ந்து ஊட்டப்பட்டன.
ஐந்து வயதில் இருந்தே தர்மம் தொடங்கியது.
அதனால் தான் மனிதனின் இல்லறம் கூட நல்லறமாக அமைந்தது.
வள்ளுவனுக்கு வாசுகியும், ராமனுக்குச் சீதையும், கோவலனுக்குக் கண்ணகியும் கிடைத்தார்கள்.
இன்றையப் போலி நாகரிகம் கணவன் மனைவியைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்துகிறது.
சினிமா நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், முதற் கணவனுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததும், குழந்தைக்கு ஜீவனாம்சம் கொடுத்ததும் செய்திகளாகின்றன.
சந்திர மண்டலமல்ல; சூரிய மண்டலத்திற்கே மனிதன் போகட்டும். பழங்காலங்களில் இந்துக்கள் வகுத்த அடிப்படைத் தர்மங்களைக் கடைப் பிடித்தால் தான், அவன் நிம்மதியாக வாழ முடியும்.
அவற்றில் ஒன்றுதான் குரு-சிஷ்ய பாவம்.
இன்று எந்த மாணவன் ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்குகிறான்? தன் கால் செருப்பையல்லவா அவர் மீது வீசுகிறான்!
இவன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? நவாபுகள் படையெடுப்பினாலும், ஆங்கிலப் படிப்பினாலும் நமது பாரம்பரிய தர்மம் நசிந்து விட்டது.
அதைக் காப்பாற்றுவதற்குப் பணம் படைத்தோர் செய்ய வேண்டிய முதற்காரியம், பழைய பாணியில் குரு குலங்களை ஆரம்பிப்பதே.

No comments:

Post a Comment