Sunday, July 22, 2012

ராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஸ்ரீசொர்ணதாதேவியுடன்!!!

Posted On July 23,2012,By Muthukumar

இராமதேவர் என்னும் சித்தர் பெருமான் அஷ்டமாசித்திகளைப் பெறுவதற்காக பல திருத்தலங்களுக்குப் பயணித்தவண்ணம் இருந்தார்.அப்போது ஒருமுறை காசிக்குப்பயணித்தார்;அங்கே இருந்த கங்கையில் அவர் நீராடிய போது,அவருக்கு அழகிய பைரவ மூர்த்தி தனது மனைவியுடன் கூடிய விக்ரகம் கிடைத்தது.அதை நிலைப்படுத்தி,சிறப்பு பூஜைகளைச் செய்தார்;அதன் மூலமாக பல சித்திகளைப் பெற்றார்.
அஷ்டமாசித்திகளை முறைப்படி கற்க வேண்டுமானால் நமக்கு குறைந்தது 3000 மனிதப்பிறவிகள் தேவைப்படும்;ஏனெனில்,அது முழுக்க முழுக்க நமது மனதை ஸ்திரப்படுத்தி  கற்க வேண்டிய கலை ஆகும்.அப்படி ஸ்திரப்படுத்தி கற்பதற்குரிய மனப்பக்குவம் நமக்கு ஏற்படவே 3000 முறை இந்த பூமியில் மனிதனாகப் பிறக்க வேண்டும்;இதெல்லாம் நடக்கிற காரியமா?


அஷ்டமாசித்திகளை கற்றப்பின்னர்,அதை நாம் மறுபிறப்பில்லாத முக்தியை அடைய மட்டுமே பயன்படுத்த வேண்டும்;அதை விட்டு சக மனிதர்களை பிரமிக்க வைக்கப் பயன்படுத்தினாலோ,தவறான வழியில் பிறருடைய கர்மவினைகளை மாற்றிட நினைத்தாலோ அந்த கர்மங்களும் நம்மை இழிவான பிறவிகள் எடுக்க வைத்துவிடும்;இப்படிப்பட்ட ஆத்மாக்கள் தான் தற்காலத்தில் தமிழ்நாட்டிலும்,அயல்நாடுகளிலும் நிறைய வாழ்ந்து வருகின்றன;பணத்தாசை அல்லது பொன்னாசை அல்லது பெண்/ஆண் மோகத்தினால் தடம் மாறி குடும்பக் கர்மாக்களையும் ஒழுங்காகச் செய்யாமல் சீரழிந்து ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும்தான் அவர்களைப் பக்குவப்படுத்தும்.அதே சமயம்,பைரவ பெருமானின் பெருமைகளை உணர்ந்து,அவரை வழிபடத்துவங்கினால்,இந்த ஜன்மத்தில் அல்லது அடுத்த ஒரு சில ஜன்மங்களில் பைரவரின் அருளாசியாலேயே அஷ்டகர்மாக்களும் எளிதாக கைகூடிவிடும்;இந்தக் கட்டத்தைக் கடந்தவர்கள்தான் அனைத்து சித்தர்களும்!


எனவேதான் சுவாமி விவேகானந்தரும்,ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமும் சொல்கிறது:பூமிக்கு மேலே இருக்கும் ஏழு உலகங்களும்,பூமிக்கு கீழே இருக்கும் ஏழு உலகங்களும் போக பூமிகள்! நாம் வாழ்ந்து வரும் பூமியே கர்ம பூமி! இந்த பூமியில் நாம் என்னென்ன கர்மாக்கள்(செயல்கள்) செய்கிறோமோ அதைப்பொறுத்து,நாம் இந்த 14 உலகங்களுக்குச் சென்று அதற்கு ஏற்றாற்போல வேதனைகள் அல்லது சுகங்களை அனுபவித்து விட்டு மீண்டும் இந்த கர்மபூமியில் பிறக்கிறோம்..


இராமத்தேவர் காசியில் கிடைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவர்  ஸ்ரீசொர்ணதாதேவி விக்ரகத்தை தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சோழீஸ்வரர் என்பவர் தமிழ்நாட்டில் இருந்து முக்தியைத் தேடி காசிக்கு வருகை தந்தார்.அவர் ராமதேவரைப் பணிந்து,அவரையே குருவாக ஏற்றுக்கொண்டார்.சோழீஸ்வரருக்கு ராமதேவர் தான் கங்கையில் கண்டெடுத்த பைரவமூர்த்தியை அளித்து அவரை பூசித்து வழிபடும்படி பணித்தார்.


சோழீஸ்வரர் கனவில் பைரவ மூர்த்தி தோன்றி தாம் ஆதிக் காயாரோகணத்தில் கோவில் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.சோழீஸ்வரர் நாகப்பட்டிணத்துக்கு வந்து,ஆதி காயாரோகணத்தில் பைரவ மூர்த்தியை ஸ்தாபிக்க கொண்டுவந்தார்.ஆனால்,அவரிடம் ஸ்தாபித்து கோவிலாக்கிட பொருள் வளமில்லை;


பைரவ மூர்த்தி சூட்சுமமாக சோழீஸ்வரரிடம் ஒரு வழி கூறினார்:திருமலைராயன் பட்டின மன்னன் மகளை பிடித்திருக்கும் பிரம்ம ராட்சதனை விரட்ட வேண்டும்.
அதன்படியே சோழீஸ்வரர் திருமலைராயன் பட்டின மன்னனின் மகளைப் பிடித்திருந்த பிரம்ம ராட்சதனை தனது பக்தி பலத்தால் விரட்டினார்.இதனால் மனம் மகிழ்ந்த திருமலைராயன் பட்டின மன்னன் சோழீஸ்வரருக்கு நன்றிக்கடனாக தான் செய்ய வேண்டியது யாது? என்று கேட்டார்.சோழீஸ்வரரின் வேண்டுகோள் படி பைரவ மூர்த்திக்கு கோவில் கட்டிக்கொடுத்ததுடன்,வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும்,விழாக்கள் வருடம்தோறும் நடைபெறுவதற்கும் ஏற்பாடு செய்தார்.


இந்த ஆலயத்தில் சுவர்ணமயமான சட்டநாத மூர்த்தி,அமுதவல்லி என்ற அம்பிகையுடன்  கட்டுமலை  மீது வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.இவ்வாறு தேவியுடன் பைரவர் இருப்பது மிக அரிதாகும்.இந்தக் கட்டுமலைக்குத் தெற்கில் ஆதிக்காயாரோகணர் ஆதிநீலாயதாட்சி ஆலயங்கள் இருக்கின்றன.கட்டுமலை மண்டபத்தை ஒட்டி பத்துக்கரங்களைக்  கொண்ட ஆகாச பைரவ மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவராகக் காட்சியளித்துவருகிறார்.இவருக்கு நேர் எதிரில் உள்ள சன்னதித் தெருவின் மையத்தில் ராமதேவர் சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.இதன் மீது பைரவபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்  கோவிலில் பைரவரின் கொடியேற்றம் துவங்கி,பத்தாவது நாள் திருவிழாவாக சித்ரா பவுர்ணமி வரும் விதமாக வருடம்தோறும் அமைந்திருக்கும்.


ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும்,திருவாதிரை அன்றும்
சிகப்பு அரளிமாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளுடன் சென்று அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு எட்டு தேய்பிறை அஷ்டமிகள் அல்லது எட்டு திருவாதிரை நட்சத்திர நாட்கள் அல்லது எட்டு வளர்பிறை அஷ்டமிகள் வழிபாடு செய்து முடித்தால்,தீராத பிரச்னைகள் தீரும்;நீண்டகால வழக்குகள் தீரும்;தொழிலில் ஓய்ந்து போன நிலை மாறி,விறுவிறுப்பு கூடும்;வராத கடன்கள் வசூலாகும்;தர வேண்டிய பணத்தை கொடுக்குமளவுக்கு வருமானம் அதிகரிக்கும்;ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,பாதச்சனி  முதலான சனியின் துயரங்கள் நீங்கும்.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment