Thursday, January 26, 2012

ஆரோக்கியத்தில் நிம்மதி

Posted On Jan 26,2012,By Muthukumar
`நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்' என்று உருகினார் ஒருவர். அதுபற்றி நான் `அர்த்தமுள்ள இந்து மதம்' நான்காம் பாகத்தில் கூறியுள்ளேன்.
நோய் இல்லாமலிருக்கச் சில வழிகளையும், உணவு முறைகளையும் அதில் நான் கூறியுள்ளேன். அதில் விட்டுப் போன சிலவற்றை இங்கே கூறுகிறேன்.
சாப்பாட்டிலே தினம் ஒரு கீரை சேர்த்துக் கொண்டு வர வேண்டும். மத்தியானம் மட்டும், அந்தக் கீரை பொரியலாகவோ, மசியலாகவோ, மண்டியாகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கீரையுமே வயிற்றில் மலம் கட்டாமல் பார்த்துக் கொள்ளும்.
முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பருப்புக் கீரை, ஆரைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, பசளைக்கீரை, கோவைக்கீரை, குறிஞ்சாக்கீரை, புளிச்சங்கீரை, மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை.
மேற்குறித்த கீரைகளில் ஏதாவது ஒன்றைப் பகலிலே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் மத்தியானத்தில் `தூதுவளை' ரசம் வைத்துச் சாப்பிட வேண்டும்.
அதில் ஜலதோசம் பிடிக்காது; சளி கட்டாது; குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் கூட எதுவும் செய்யாது.
கோடை காலத்தில் மணத்தக்காளிக் கீரை சூப் வைத்துச் சாப்பிட வேண்டும்.
அது உடம்பில் இருக்கும் நெருப்பை அப்படியே அணைத்து விடும். வாய்ப்புண், வயிற்றுப் புண் எல்லாவற்றையும் உடனடியாக ஆற்றிவிடும்.
சித்திரை, வைகாசி அறுபது நாளும் தொடர்ந்து பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டு வந்தால், பகலிலேயே நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பார்கள்.
அகத்திக்கீரை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அற்புதமான மருந்து. நுரையீரலைப் பாதுகாக்கிறது; உடம்பைச் சத்தோடு வலுவாக வைத்திருக்கிறது; மயிர்க்கால்களெல்லாம் வியர்வையை வெளியிடும் சக்தியைத் தெளிவாகப் பெற்று விடுகின்றன. `வயிற்றுப் புண்ணுக்கு அகத்திக்கீரை' என்றொரு பழமொழியே உண்டு.
சர்க்கரை வியாதிக்கு முருங்கைக்கீரை கண்கண்ட மருந்து. அது பசியையும் தாங்கும்; பஞ்சத்தையும் தாங்கும்.
நாட்டிலே பெரும் பஞ்சம் வந்தபோது வரகு அரிசிச் சோறும், கோவைக்காய்ப் பொரியலும், முருங்கைக்கீரை வதக்கலும் தானே மக்களைக் காப்பாற்றின.
முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து உண்டு; வைட்டமின் வகைகள் அதிகம் உண்டு. முருங்கைப்பூ, ஆண்மை நரம்புகளை முறுக்கேற்றும்; முருங்கைக்காயும் அப்படியே.
அப்படி ஒரு மரத்தைப் படைத்ததற்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது ஏழைகளுக்காக இறைவன் அளித்த வரம்.
கிராமத்திலே ஒரு நாடோடிப் பாடல் உண்டு.
மந்தையிலே மாடு மேய்க்கும்
மச்சானுக்கு மத்தியானம்
மொந்தையிலே சோற்றைப் போட்டு
முருங்கைக் கீரையை வதக்கிக் கொட்டி
- என்று அந்தப் பாடல் துவங்கும்.
நகரத்தில் உடம்புக்குச் சக்தி இல்லாமற் போனதற்கு முருங்கைக் கீரை சாப்பிடாதது தான் காரணம்.
முருங்கைக்கீரை கிடைப்பது போல், அவ்வளவு சுலபத்தில் ஆரைக்கீரை கிடைக்காதென்றாலும், முருங்கைக் கீரையைப் போல் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் சக்தி அதிலும் உண்டு.
`ஒரு காலடி நாலிலைப் பந்தலடி' என்று ஔவையாருக்கும், கம்பருக்கும் தகராறு வந்த போது ஔவையாரால் சொல்லப்பட்டது, இந்த `ஆரைக்கீரை'யைப் பற்றி சொல்லப்பட்டதேயாகும்.
மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, மாத்திரைகள் இதிலிருந்துதான் செய்யப்படுகின்றன.
இது கொஞ்சம் கசக்கும்; சாறு பிழிந்தும் சாப்பிடலாம்; மசித்தும், துவையலரைத்தும், சூப் வைத்தும் சாப்பிடலாம்.
குறிஞ்சாக் கீரையும், வயிற்றுப் புண்ணுக்கும் சர்க்கரை வியாதிக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்.
சிறுநீர் நிறையப் போக வேண்டுமென்றால், மாத்திரை சாப்பிடாதீர்கள்; பசலைக்கீரை சாப்பிடுங்கள்.
எந்தப் பெண்ணும், கர்ப்பமான நாளிலிருந்து ஆறு மாத காலம் வரை, தொடர்ந்து பசலைக்கீரை சாப்பிட்டே ஆக வேண்டும். அதிலும் தலைப் பிரசவத்துப் பெண் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்.
இல்லையென்றால் `லாஸிக்ஸ்' மாத்திரை போட வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அந்த மாத்திரை போட்டால் சிறுநீரோடு பொட்டாஷியம் போய்விடும். சோகை பிடித்தது போலாகிவிடும். பிறகு, அதைச் சரிக்கட்ட தக்காளி ஜூஸோ, ஆரஞ்சு ஜூஸோ சாப்பிட வேண்டிவரும். பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
தாய்மார்கள், கர்ப்பமுற்ற பெண்களுக்குத் தயவு செய்து ஆறுமாத காலம் பசலைக் கீரை சமைத்துக் கொடுங்கள். கருவுற்றிருக்கும் பெண், பசலைக் கீரையைத் தொடர்ந்து முறையாகச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால், பிரசவம் சுலபமாக அமையும்; அவஸ்தை இராது. அதோடு சிறுநீர் பிரிவதற்கு வாழைத்தண்டும், கீரைத்தண்டும் கண்கண்ட நல்ல மருந்துகள்.
இரண்டு வகையான உணவுகளைப் பற்றி, உலகத்தில் இரண்டு வகையான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.
சைவ உணவு நல்லதா? மாமிச உணவு நல்லதா?
ஹிட்லர் தனது ரகசிய சம்பாஷணைகளில் இப்படிச் சொல்கிறார்:
`சைவ உணவைப் போன்று உடலுக்கு வலிமையும், ஆரோக்கியமும் வேறு எதிலும் இல்லை!'
மிருகங்களிலே கூட மாமிசம் சாப்பிடுகின்ற மிருகங்கள் கொஞ்சத் தூரம் ஓடினாலும், நாக்கைத் தொங்கப் போட்டு விடுகின்றன.
உதாரணம்: நாய், நரி, சிங்கம், புலி.
காய்கறி உணவு அருந்தும் மிருகங்கள், அவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எவ்வளவு வேகமாக ஓடினாலும் நாக்கைத் தொங்கப் போடுவதில்லை.
உதாரணம்: யானை, குதிரை, ஒட்டகம், மான், பன்றி.
மாமிசம் சாப்பிடுவது, மதத்துக்கு விரோதமானது அல்ல என்றாலும், உடம்புக்கு அதனால் நன்மையை விடத் தீமையே அதிகம். அதிலுள்ள `புரொட்டீன்'களைக் காய்கறிகளிலேயே பெற்று விடலாம்.
வங்காளத்து இந்துப் பிராமணர்கள் மீன் சாப்
பிடுகிறார்கள்; மீனை அவர்கள் காய்கறி வகைகளிலேதான் சேர்க்கின்றார்கள்.
வேறு சிலர் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டையிலுள்ள `வெள்ளைக் கரு'வை எல்லோருமே சாப்பிடலாம் என்பது என்னுடைய கருத்து.
உணவில் அதிகம் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இது இதயத்திற்கு நல்லது.
வாயுத் தொல்லை இல்லாதவர்களுக்கு உருளைக் கிழங்கு நல்லது.
மொத்தத்தில் நகரத்து உணவை விட, கிராமத்து உணவு நீண்ட நாள் வாழ வைக்கிறது.
இறைவனுக்கு வைக்கப்படும் நைவேத்தியங்கள் மருத்துவ முறைப்படி ஆனவை.
பால் அதிகம் சாப்பிடுவது ஒன்றே, தேவையான புரதச் சத்துகளை உடலுக்குத் தந்து விடும்.
பதினெட்டுச் சித்தர்களில், `தேரையார்' என்று ஒருவர் இருந்தார். எமனை விரட்டுவதற்கே அவர் சில வழிகளைச் சொல்கிறார்.
அந்தப் பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் கீழே தருகிறேன்.
`பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில்
குளிப்போம்.
பகல் புணரோம்; பகல் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்; ஒன்றை விடோம்; இடதுகையிற்
படுப்போம்.
மூலஞ்சேர் கறினுகரோம்; மூத்ததயிர் உண்போம்.
முந்நாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம்.
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்,
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம்.
இவ்வாறு மேற்கண்ட ஒழுக்க முறைகளை நடைமுறையில் கடைப்பிடித்து வருவோமானால் நம்மிடம் எமன் நெருங்க அஞ்சுவான்; நீண்ட ஆயுளோடு நாம் வாழ முடியும்.
`உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்;
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்;
நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்;
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
ஒரு நாளைக்கு இரண்டு பொழுது மட்டும் உண்போம்; இரவில் நன்றாகத் தூங்குவோம்; பகலில் தூங்க மாட்டோம். பெண்ணின்பால் உடலுறவை மாதம் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்வோம். உணவு உண்ணும் போது தாகம் அதிகம் இருப்பினும் இடையிடையே நீரினைப் பருக மாட்டோம்; வாழைக்காயில் பிஞ்சுக்காய்களையே கறி சமைத்து உண்ணுவோம்; முற்றிய காய்களைக் கறி சமைத்து உண்ண மாட்டோம்; உண்டவுடனேயே சிறிது தூரம் நடத்தலாகிய பயிற்சியைச் செய்வோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்; நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வோம்.
`ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருக்கால் பேதியுரை நுகர்வோம்;
தேறுமதி ஒன்றரைக்கோர் தரநசியம் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவிருப் புறுவோம்;
வீறுசதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்;
விழிகளுக் கஞ்சனம்மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியில் முகரோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம்; ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய பீனச நோய் வராமல் தடுப்போம். வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்; மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இடுவோம்; மணம் வீசும் கந்தம், மலர் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகர்தலைச் செய்ய மாட்டோம். இவ்வாறு மருத்துவ விதிமுறைகளை நாம் மேற்கொண்டொழுகினால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.
`பகத்தொழுக்கு மாதர்அசம் கரம் துடைப்ப
மிவைதூள்
படநெருங்கோம்; தீபமைந்தர் மரநிழலில் வசியோம்;
சுகபுணர்ச்சி அசனபச னத்தருணஞ் செய்யோம்;
துஞ்சலுண விருமலஞ்செய் யோகமழுக் காடை;
வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவைமாலை
விரும்போம்;
வற்சலம்தெய் வம்பிதுர்சற் குருவைவிட மாட்டோம்;
நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மணுக்கோம்;
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
மாத விலக்கடைந்த பெண்கள், ஆடு, கழுதை
முதலானவைகள் வரும் பாதையில் எழும் புழுதி, மேலே படும் படி நெருங்கி நடக்க மாட்டோம்; கூட்டுமிடத்தில் உண்டாகும் தூசியும் மேலே படும்படி நடந்து கொள்ள மாட்டோம்; இரவில் விளக்கொளியில் நிற்போரின் நிழலிலும், மர நிழலிலும் நிற்க மாட்டோம்; பசியின் போதும், உண்டவுடனேயும் உடலுறவு கொள்ள மாட்டோம். அந்திப் பொழுதில் தூங்குதல், உணவுண்ணல், காமகுரோதச் செயல்கள், அழுக்குடை தரித்தல், தலைவாரி மயிர் உதிரச் செய்தல் போன்ற காரியங்களைச் செய்ய மாட்டோம்; நம்பால் இரக்கம் உள்ள தெய்வங்கள், பிதுரர், குரு ஆகியோரை எப்போதும் வணங்குவோம்; பிறர் கை உதறும் போது, நகத்தினின்று விழும் தண்ணீரும், குளித்து முடி தட்டும்போது உதிரும் தண்ணீரும் மேலே தெறித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம். இத்தகைய நெறிகளில் நாம் நடந்தால், எமன் நம்மை அணுக அஞ்சுவான், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழுவோம்.

No comments:

Post a Comment