Saturday, January 7, 2012

திருக்கோஷ்டியூர் - நினைத்ததை நடத்தி வைக்கும் சௌமிய நாராயணர்


Posted On Jan 07,2012,By Muthukumar

வாசகர் அன்பர்களுக்கு வணக்கம்.  காக்கும் கடவுளான பரந்தாமனின் அருட்பார்வை நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
திருப்பதியும் , ஸ்ரீரங்கமும்  நம் அனைவருக்கும் நன்றாக பரிச்சயமானது. அனேகமாக நம்மில் பெரும்பாலோர் இந்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்று இருக்கலாம். ஆனால் இருக்கும் கூட்ட நெரிசலைப் பார்த்து , அங்கு போவதற்கே தயங்கி நிற்பவர்களும் அதிகம்.

இன்று நாம் பார்க்க விருக்கும் இந்த ஆலயம் , அந்த அரங்கனின் அற்புதத்தை இன்றும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும் , அதி உன்னத ஆலயம். அதிகம் வெளியில் அறியப்படாததால் , நம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறோம்....! கூட்டம் அதிகம் இருக்காது. நோ ஜருகண்டி...! நீங்களே சலிக்க சலிக்க தரிசனம் செய்யலாம்...! நிச்சயமாக உங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படுத்தப் போகும் ஆலயம்...! ஏன் , என்ன அப்படி சிறப்பு என்பதை முழுவதும் இந்த கட்டுரையை படித்த பிறகு நீங்களே உணர்வீர்கள்...

சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டு பழமையான ஆலயம் என்றாலும், பல யுகங்களைத் தாண்டிய வரலாறு கொண்டது.




எந்த ஒரு ஆலயத்துக்குமே ஒரு ஸ்தல வரலாறு இருக்கும். பிரமிக்கத்தக்க வகையில் , அல்லது நம்ப முடியாத வகையில் இந்திரன் கட்டியது, சந்திரன் கட்டியது என்று இருக்கும். ஏதோ ஒரு யுகத்தில் கட்டி இருந்து இருக்கலாம். ஆனால் நம் மனது இது ஒரு கட்டுக்கதையாக இருக்கலாம் என்று தான் உள்ளிருந்து சொல்லும். எதுக்கு வம்பு , நம்பிக்கிடுவோம் என்று சமாதானப்படுத்தலாம் ...

ஆனால் , எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும், நமக்கு அல்லது நமக்கு நன்றாகத் தெரிந்த சிலருக்கு - அந்த ஆலயம் சென்று வந்ததால் , அவ்வளவு பலன்கள் கிடைத்தது, இந்த கடவுளை கும்பிடுவதால் , இவ்வளவு பலன்கள் கிடைத்தது என்று உறுதியாக தெரியும் வரை - நாம் அந்த ஆலயத்தையோ , கடவுளையோ கண்டுக்கொள்ளவே மாட்டோம்...!

கரெக்ட்தானே...! இது மனித இயல்பு...! ஆதாயம் இல்லாமல் நான் ஏன் ஒரு காரியத்தை செய்ய வேண்டும்? தினம் இந்த மாதிரி எங்க வீட்டு பக்கத்துல உள்ள ஒரு கோயிலுக்கு போயிட்டு வர்றேன். நல்ல மன நிம்மதி கிடைக்கிறது என்று தெரிந்தால் நாம் கட்டாயம் செல்வோம். அட என்ன சார்,... ஒன்னும் சரி இல்லை சார்..! ஒரு பிரச்னை முடியறதுக்குள்ளே இன்னொரு பிரச்னை , என்ன செய்றதுன்னு கண்ணு முழி பிதுங்கி இருக்கிறப்போ... வேறு ஒரு தீர்வு தேடி தான் மனது பாயும்...!

சரி, இந்த திருக்கோஷ்டியூர் கோவில்ல என்ன விசேஷம்ன்னு கேட்கிறீங்களா?
பல வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதிகள், பல வருடங்களாக திருமணம் நடைபெறாமல் நொந்து போயிருக்கும் அன்பர்கள் - இங்கு வந்து பெருமாளை தொழுது , விளக்கு நேர்த்திக்கடன் செய்கிறார்கள்...

இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

நூறு சதவீதம் அத்துணை அன்பர்களுக்கும், அவர்கள் நினைத்ததை நிறைவேற்றுகிறார் பெருமாள்...! உங்கள் குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் , உங்கள் கண்களில் மகிழ்ச்சிப் பரவசமும், நிச்சயம் உண்டு. பலன் அடைந்தவர்கள் பல்லாயிரக் கணக்கானோர்...! ஆனால், என்ன வெளியில் தான் அதிகம் தெரிவதில்லை. அது சரி, எல்லோரும் நம்மளை மாதிரி இருந்திடுவாங்களா? 

கோவிலுக்குப் போறப்போ - அவசியம் அங்கு உள்ள பட்டரிடம் கேட்டு , நீங்களும் விளக்கு வாங்கிட்டு வாங்க...!

உங்கள் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்...!

சரி, இங்கு இன்னும் பல விசேஷங்கள் உள்ளன. ஆலய மகிமைகளை காண்போம்...!

நான் மட்டும் முக்தி அடைஞ்சா போதுமா...? எல்லோருக்கும் வேண்டாமா என்று - குருவின் கட்டளையையும் மீறி - ராமானுஜர்  நமோ நாராயணாய மந்திரத்தை உபதேசித்த இடம் , இங்கு உள்ள கோபுரம் தான்.

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.

ஸ்தலத்தின் மாபெரும் சிறப்பு :
பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.

இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு.

மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியரும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் "திருக்கோட்டியூர்' என்றும் பெயர் பெற்றது.

தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். "ஓம்', "நமோ', "நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.

சவுமிய நாராயண சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு "பிரார்த்தனை கண்ணன்' என்று பெயர்.

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார்.

இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது.

அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.

மகாமக கிணறு: புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை "மகாமக கிணறு' என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.

ராமானுஜர் உபதேசம் பற்றி இரண்டு வரிகளில் சொன்னா போதுமா? இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்...!

ராமானுஜருக்கு உபதேசம்: இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, "யார்?' என்று கேட்க, "நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,'' என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, "நான் செத்து வா!' என்றார்.

புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, "ஓம் நமோநாராயணாய' என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.

ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார்.

மகிழ்ந்த நம்பி "நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்' என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு "கல்திருமாளிகை' என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.


கோவில் எங்கே இருக்கிறது?

அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் - 630 211. சிவகங்கை மாவட்டம்.
தொலை பேசி எண்கள் : +91- 4577 - 261 122, 94862 - 32362

No comments:

Post a Comment