Sunday, January 22, 2012

நற்கதியடைய தடையாக இருப்பது எது?

Posted On Jan 22,2012,By Muthukumar
பந்த பாசங்களுக்கு அடிமையாகி விட்டால், அதிலிருந்து விடுபடுவது சிரமம்தான். அதனால் தான், ஆசாபாசங்களை விட்டு விட்டு, பகவானிடம் மனதை செலுத்த வேண்டும்.
ஒரு சின்ன கதை:
இரண்டு நண்பர்கள், கங்கைக் கரையில் நின்று, நதியின் வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று நதியில் கம்பளி மூட்டை ஒன்று, மிதந்து செல்வதைப் பார்த்தனர். நண்பர்களில் ஒருவனுக்கு, அக்கம்பளி மூட்டையின் மீது ஆசை வந்தது. அதை அடைய வேண்டு மென்ற ஆசையில், நதியில் குதித்து, நீந்த ஆரம்பித்தான்.
நண்பன் எவ்வளவோ தடுத்தும், அவன் அதைப் பொருட் படுத்தாமல், நீந்தி, அக்கம்பளி மூட்டையைப் பிடித்துக் கொண்டான். மூட்டை மிக பளுவாக இருந்ததால், அதை இழுக்க ¬முடியாமல் சிரமப்பட்டான்; மூட்டை தான் அவனை இழுக்க ஆரம்பித்தது.
இப்படி போராடிக் கொண்டிருந்தவனை பார்த்து, "கம்பளி போனால் போகட்டும்; அதை விட்டு விட்டு, நீ கரை வந்து சேர்...' என்றான் கரையிலிருந்த நண்பன். அதற்கு நதியிலிருந்தவன், "நான் இப்போது, இதை விடுவதற்கு தயார் தான். ஆனால், அது தான் என்னை விடுவதற்கு தயாராக இல்லை. கம்பளி மூட்டை என்றெண்ணி அதைப் பிடிக்கப் போய், கம்பளிபோல் தோன்றிய கரடியிடம் பிடிபட்டு விட்டேன். இனி எப்படி இதனின்று விடுபடு வது?' என்று கூக்
குரலிட்டான்.
இப்படித்தான் உலக மக்கள், பற்பல பொருட்கள் மீது ஆசை வைத்து, அதைப் பிடிக்க ¬முயல்கின்றனர். பிறகு, பந்த பாசங்களால் பீடிக்கப்பட்டு சிக்கித் தவிக்கின்றனர். ஆசையை துறக்க நினைத்தாலும், பந்த, பாசங்கள் அவர்களை விடுவதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படிப்பட்ட பந்தமும், பாசமும் இருப்பது சகஜம்.
ஆனால், இந்த பந்த, பாசமே, நற்கதியடைய தடையாக உள்ளது என்பதை இவன் புரிந்து கொள்வதில்லை. இந்த பாட்டனாரும், தகப்பனாரும், தாயாரும், அண்ணன் தம்பிகளும் யார்? பூர்வ ஜென்மத்தில் இவர்கள் யார்? எங்கேயிருந்தனர். எப்படி இந்த ஜென்மத்தில், ஒரே குடும்பத்தில் வந்து சேர்ந்திருக்கின்றனர்.
இதற்குப் பின், அடுத்த ஜென்மாவில், இவர்கள் ஒவ்வொருவரும் எங்கே, எப்படி பிறவி எடுப்பர்? எல்லாம் ஒரே புதிர்தான்; குழப்பம்தான்.
ஒன்று மட்டும் நிச்சயம். இந்த ஜென்மாவில் செய்யும் நல்வினைகளின் பயனாக, அடுத்த ஜென்மாவில் சுகமாக வாழலாம்; அதனால், கிடைத்த ஜென்மாவை வீணாக்க வேண்டாம்.
சரி... பூர்வ ஜென்ம வினைகளை, எப்படி தீர்த்துக் கொள்வது என்றால், இந்த ஜென்மாவில் தெய்வ வழிபாடுகளை செய்து கொண்டே இருந்தால், பூர்வ ஜென்ம பாவங்கள் ஒழியும். பூர்வ ஜென்ம பாவங்களை தொலைக்கத்தான், இந்த ஜென்மா கிடைத்துள்ளது; அதை, பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏனோதானோ என்று வாழ்நாளை கழித்து விட்டுப் போனால், எப்போது தான் நற்கதியடைவது? "நற்கதியடைந்தார்; இறைவனடி சேர்ந்தார்!' என்று பத்திரிகைகளில் வெளியிட்டால் அதற்கு நமக்கு தகுதி இருக்க வேண்டும். மற்றவைகளில் உள்ள ஆசாபாசங்களை விட்டு, இறைவனடி களையே பற்றியிருந்தால் நற்கதி கிடைக்கும்.

No comments:

Post a Comment