Friday, January 20, 2012

இல்லறத்தில் நிம்மதி

Posted On Jan 20,2012,By Muthukumar











நடத்தை கெட்ட மனைவி ஒரு நரகம்.
மனைவி நடத்தை கெட்டவளாக இருந்தால், அவளை விட்டு ஒதுங்கி விடலாம்.
ஆனால், கோபக்காரியாகவோ, குணங்கெட்டவளாகவோ இருந்தால், அந்த மனைவியைத் திருத்தி வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும்.
பண்பான மனைவி கிடைத்தும், கோபதாபங்களினால் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது.
தகராறு இல்லாத குடும்பம் இல்லை.
`வீட்டிற்கு வீடு வாசற்படி' என்பார்கள்.
`ஒவ்வொரு கூந்தலிலும் பேனிருக்கும்' என்பார்கள்.
எறும்பின் உடம்பு, அதன் கையால் எட்டுச் சாண்.
`யானைக்குத் தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே' என்று கவலையிருந்தால், `அணிலுக்கு உடம்பு போதவில்லையே' என்ற கவலை உண்டு.
ஏழைக்குச் சாப்பாட்டுப் பிரச்சினை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சினை.
பொருளாதாரம் சரியாக இருந்தாலும், கணவனோ தாரமோ சரியாக இல்லாத குடும்பங்கள் உண்டு.
இரண்டு பேரும் சரியாக இருந்தாலும், பொருளாதாரம் சரியாக இல்லாத குடும்பங்கள் உண்டு.
காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்களே, கட்டிலைப் பிரித்துப் போட்டுக் கொண்டதுண்டு.
பெற்றோர் பார்த்துப் பேசி முடித்த திருமணத்தில், பேரன்பு வெள்ளம் பெருகியதும் உண்டு.
அன்பிருந்தும், பணம் இருந்தும், சந்ததி இல்லாத குடும்பங்கள் உண்டு.
சந்ததி பெருகிக் கிடந்தும், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவோர் உண்டு.
கிராமங்களில், `ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன?' என்பார்கள்.
அமெரிக்காவில் பகல் என்றால், இந்தியாவில் இருட்டு.
அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும். நாம் மட்டுமே சிரமப்படுவது போலவும் சில பேருக்குப் பிரமை.
ஒன்றை மட்டுமே உறுதியாக நம்புங்கள்.
பிரச்சினை இல்லாத குடும்பமே இல்லை.
`ஐயோ நிம்மதி இல்லையே...' என்று அலுத்துக் கொள்ளாதவனே இல்லை.
அந்த நிம்மதியைத் தேடி அலைவதில் பயனில்லை.
அது உங்கள் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது.
வெளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் போதே, பிரச்சினையோடு திரும்பக் கூடாது.
மனைவியும், சில கேள்விக்குறிகளோடு கணவனை வரவேற்கக் கூடாது.
எதையும் அடித்துப் பேசக்கூடாது; இடித்துச் சொல்லக்கூடாது.
`நீங்கள் வாங்கி வந்த காய்கறி மகா மட்டம்' என்று மனைவி சொன்னால், `எந்த நாய் சொன்னது' என்று கேட்கக் கூடாது;
`தப்பாகத்தான் வாங்கி வந்துவிட்டேன்' என்று ஒப்புக் கொண்டுவிட வேண்டும்; பிரச்சினை அதோடு முடிந்துவிடும்.
`சாப்பாடு மகா மட்டம்' என்று கணவன் சொன்னால், `எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்; வேண்டுமானால், உங்க அம்மா வீட்டில் போய்ச் சாப்பிடுங்கள்' என்று சொல்லக் கூடாது.
`இன்றைக்கு என்னவோ உடம்புக்கே சரியில்லை. படுத்துக் கிடந்தேன்; நாளைக்கு நன்றாகச் செய்து வைக்கிறேன்' என்று சொல்ல வேண்டும்.
மனைவி நல்ல புடவை கட்டினால், கோபித்துக் கொள்ளக்கூடாது. `இன்னும் நல்ல புடவை கட்டம்மா! எவ்வளவு செலவானாலும் வாங்கித் தருகிறேன்' என்று சொல்ல வேண்டும்.
மனைவி குளித்துவிட்டு வரும்போது, `இப்போதுதான் நீ மகாலட்சுமி' என்று புகழ வேண்டும்.
கணவன் வெளியிலிருந்து வரும்போது மனைவி, `ஐயய்யோ! வியர்த்திருக்கிறதே, உடம்பு மெலிந்திருக்கிறதே' என்று புலம்ப வேண்டும்.
மனைவியைக் கணவன், `அம்மா' என்றே அழைக்க வேண்டும். மனைவி கணவனை `ஐயா' என்றே அழைக்க வேண்டும்.
சில குழந்தைகளுக்குப் பிறகு, மனைவி கணவனுக்குத் தாயாகி விடுகிறாள்; கணவனே மனைவிக்கும் தாயாகி விடுகிறான்.
தனிக்குடித்தனம் என்றால், கதவைச் சாத்திக் கொண்டு மனைவிக்குக் கணவன் தலைவார வேண்டும்; கணவனுக்கு மனைவி தலைசீவ வேண்டும்.
கோபத்தில் ஏதாவது வார்த்தை வளர்ந்து விட்டால், அன்று இரவே சமாதானம் செய்து, உடலுறவு கொள்ள வேண்டும்.
இலக்கியங்களில், கோபமே இல்லாத காதலர்கள் கூடச் செயற்கையாக ஒரு கோபத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்; அதன் பெயர் ஊடல்.
ஊடலுக்குப் பிறகு கூடல் மிகவும் சுகமாக இருக்கும்.
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால், கணவனுக்கு நிம்மதி.
தன் தாய் வீட்டைப் பற்றிக் கணவன் பெருமையாகச் சொன்னால், மனைவிக்கு நிம்மதி.
பள்ளி அறையிலே கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.
`அவர்கள் வசதியாக இருக்கிறார்கள்; இவர்கள் வசதியாக இருக்கிறார்கள் எனக்குத்தான் ஒன்றுமில்லை' என்ற ஏக்கம் வரக்கூடாது.
`இந்தக் கட்டில் நல்ல கட்டில். இந்த அறை நல்ல அறை; இதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது' என்று நல்ல விஷயங்களையே பேச வேண்டும்.
கணவனோடு இருக்கும்போது, மனைவி மல்லிகை முல்லைப் பூக்களைத்தான் சூட வேண்டும்; கனகாம்பரம், நீலாம்பரம் போன்ற கண்றாவிப் பூக்களைச் சூடக்கூடாது.
தலைக்குத் தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தான் தேய்க்க வேண்டும்; ஷாம்பு போடக்கூடாது.
பெளடர் போடுகிற பெண்ணானாலும், குளிக்கும்போது முகத்திற்கு மஞ்சள் பூச வேண்டும்.
மூக்குத்தி அணிந்த பெண், கணவனை மின்சாரம் மாதிரி இழுப்பவள்.
இன்னும் பெண்ணுக்கு மூக்குக் குத்தாதவர்கள் குத்தி விடுங்கள்.
மூக்குத்தியிலும் கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி (பேசிரி என்பார்கள்) விஷேச சக்தி வாய்ந்தது.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சனூர் அலமேலு - மூக்குத்தி இல்லாத தாயாரைப் பார்க்கவே முடியாது.
காலில் பெருவிரலுக்கு அடுத்த விரலில் வெள்ளியால் மெட்டி போட வேண்டும். கணவனைக் கவர்ச்சிக்கும் பொருள்களில் அதுவும் ஒன்று.
மாத விலக்கானபோது தலையிலே பூ வைக்கக்கூடாது.
சாதாரணமாகச் சமையற்கட்டிற்கே போகக் கூடாது என்பார்கள். மனைவியே சமைக்க வேண்டியிருக்கும் குடும்பங்களில் இன்றைக்கு இது சாத்தியமில்லை.
முக்கியமாகக் கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டியது- `வார்த்தைகளில் ஜாக்கிரதை வேண்டும்'.
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம். சொல்லைக் கொட்டினால் பொறுக்க முடியுமா?
முள்ளாலே பட்ட காயம் விரைவில் மாறும்; சொல்லாலே பட்ட காயம் மாறாது.
கணவன் மனைவி உடலுறவில், கணவன் மிகவும் நிதானமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும்.
மனைவி திருப்தியடைய வேண்டுமென்றால், உடலுறவின் போது வேறு சிந்தனைகளை மேற்கொண்டு, உறவில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிலே ஒன்றை மட்டும், கணவன் உணர வேண்டும்.
உடலுறவுக்கு மனைவியை நெருங்கும் போது, அவளும் திருப்தியடைந்து நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இல்லறத்தைத் தர்மமாக ஏற்றுக்கொண்டு விட்ட மனிதனுக்கு அதை விவரிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
உடலுறவில், மனைவிக்கோ, கணவனுக்கோ கசப்புத் தோன்றினால், அது காலா காலங்களுக்கு நிம்மதியைக் கெடுத்துவிடும்.
கூடுமானவரை, மனைவி கூந்தலை நீளமாக வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலின் நீளத்தைப் போலவே கணவனின் ஆசையும் நீண்டு கொண்டிருக்கும்.
இரவு நேரத்தில் கருப்பு, ரத்தச்சிவப்பு, கடல் நீலம் ஆகிய நிறங்களைக் கொண்ட சேலைகள் உடுத்தக் கூடாது. லேசான வர்ணம் படைத்ததாக இருக்க வேண்டும்.
அதிகாலையில் கணவன் தூங்கி கொண்டிருக்கும் போது, அவன் முகத்தருகில் முகத்தைக் கொண்டு வந்து `இதோ பாருங்கள்' என்று எழுப்பித் தன் முகத்தில் விழிக்க வைக்க வேண்டும்.
காலையில் கணவன் வெளியில் செல்லும் போது, கூடவே சென்று வழியனுப்ப வேண்டும்.
திரும்பி வந்ததும், அவனை ஒரு தட்டிலே நிற்கச் சொல்லி அதிலே தண்ணீரை ஊற்றிப் பாதங்களை நன்றாகக் கழுவி விட வேண்டும்.
வெளி உலகின் அழுக்குகளும், துன்பங்களும் அதோடு கழுவப்பட்டுவிடும்.
கணவனைக் குளிப்பாட்டி விடுவது மனைவியின் கடமையாக இருக்குமானால், கணவனுக்கு அலுவலகத்தில் கூட அவளது ஞாபகம் தான் வரும்.
வீடு சிறியதாக இருந்தாலும், பூஜை அறை என்று ஒன்று கட்டாயம் வேண்டும். அது இயலாதென்றால், ஒரு அலமாரியாவது வேண்டும்.
வானொலி கேட்டாலும், டெலிவிஷன் பார்த்தாலும் குடும்பத்தோடு உட்கார வேண்டும்.
காலையில் வெளியில் புறப்படும்போதே, மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டுப் போக வேண்டும்; பிறகு வந்து, `அது இல்லை இது இல்லை' என்று சண்டை போடக்கூடாது.
வசதியுள்ளவர்கள் ஒரு வீணை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
கண் விழிக்கும் போது வீணையைப் பார்த்தால், அதைவிட விசேஷம் வேறெதுவும் இல்லை.
ஒருவரையொருவர் அனுசரித்துப் போனால் உலகத்தையே தனக்குள் அடக்கிக் கொள்ள முடியும்.
`இரண்டு கை தட்டினால் தானே சத்தம் கேட்கும்' என்பார்கள்.
ஒருவருக்குக் கோபம் வந்தால், ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம்.
`பெண்டாட்டிதானே, சொல்லிவிட்டுப் போகிறாள்' என்றும், `கணவன் தானே, பேசட்டும்' என்று விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது; உடல் வலிக்காது; ஊர் சிரிக்காது.
ஒரு படத்தில் நான் ஒரு பாடல் எழுதினேன்:
`நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தாலென்ன நமக்குள்ளே!'

No comments:

Post a Comment