Thursday, April 5, 2012

ஞானத்தின் பரிபக்குவ நிலை

Posted On April 05,2012,By Muthukumar
இந்து தெய்வங்கள் மனித வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத உன்னத நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை. `தெய்வத்துக்கு இணையாக எதையும் சொல்லக் கூடாது' என்று கட்டளை போடுவதில்லை.
இந்து தெய்வம் மனித வடிவில் இயங்கும்.
மனித வாழ்க்கையின் பல கூறுகளிலும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளும்.
அது காதலிக்கும்; பரவசப்படும்; அது போர் புரியும்; யுத்த தர்மத்தைப் போதிக்கும்.
அது தூது செல்லும்; அரசு தர்மத்தைப் புகட்டும்.
காதலனையும் காதலியையும் சேர்த்து வைக்கின்ற வேலைக்குக் கூட அது துணை புரியும்.
ஆகவேதான் இந்து இதிகாசங்களோ, புராணங்களோ வறட்டுத்தனமாக இல்லை.
மற்ற மதத்தவர்கள் படித்தால் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுவதாக இல்லை.
நமது இதிகாசங்களில் லெளகீகத்தின் கம்பீரம் இருக்கிறது.
சுகமான காதலியின் கனவு இருக்கிறது.
அவற்றில் ஒன்று ராதா - கிருஷ்ண பாவம்.
இந்த பாவத்தை ஒரு காம நூல் போலவே வடித்தார் ஜயதேவர்.
அது ஞானத்தின் முதிர்ச்சி பெற்ற நிலையாயினும் காம ரசமாகவே தோற்றமளிக்கிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அவர் `அஷ்டபதி கீதகோவிந்தம்' என்ற தலைப்பில் இதனை எழுதினார்.
ஒவ்வொன்றும் எட்டு சரணங்கள் கொண்ட இருபத்து நான்கு கீதங்களாக அவர் இதனை வடித்தார்.
இதில் ஒரு வேடிக்கை. இதைப் படித்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவர், `இது ஒரு ஆபாச நூல்' என்று தடை செய்ய உத்தரவிட்டார்.
அதோடு ஜயதேவரைக் கைது செய்யும்படியும், ஆணை பிறந்தது.
அதன் பிறகுதான் ஜயதேவர் வாழ்ந்தது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது விளக்கப்பட்டது.
ராதை, கிருஷ்ணனுக்காக ஏங்குகிறாள்; கிருஷ்ணன், ராதைக்காக ஏங்குகிறான்; தோழி ஒருத்தி தூது செல்கிறாள்; இடையில் அனைத்தும் வருணனைகள்; அவர்கள் வாழ்ந்த கதைகள்.
ஒவ்வொன்றும் சுவையான வருணனை.
சற்று பச்சையாக இருந்தாலும் தேவ பாவத்தோடு அவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, லெளகீக வாழ்க்கையிலும் மனிதனுக்கு இச்சை வருகிறது.
நல்ல காதலன் காதலியின் இலக்கிய பாவம், கீத கோவிந்தம் முழுவதிலும் இழையோடுகிறது.
அதனால், அதன் உபந்யாசகர்கள் இதை மேடையில் எடுத்துச் சொல்வதில்லை.
பக்தி நூல் வரிசையில் பலர் இதைச் சேர்ப்பதும் இல்லை.
ஆனால், நான் இதனைச் சேர்க்க விரும்புகிறேன்.
அண்மையில் கீத கோவிந்தத்தில் இருந்து எட்டு கீதங்களை கவிதைகளாக எனது `கண்ணதாசன்' இதழில் எழுதியுள்ளேன்.
மற்றவற்றையும் கவிதையாக எழுதி முடிக்க இருக்கிறேன்.
தோழி கண்ணனிடம் சொல்கிறாள்:
`கேசவா! ராதா எவ்வளவு மெலிந்து விட்டாள் தெரியுமா? அவள் கழுத்தில் தங்க வடம் போட்டிருப்பாளே, அதைத் தாங்கக்கூடச் சக்தி இல்லாமற் போய்விட்டது அவளுக்கு; மயங்கி மயங்கி விழுகிறாள்.
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
குளிர்ச்சியான சந்தனத்தை அவள் மார்பில் பூசினேன். `ஐயோ, கொதிக்கிறதே!' என்றாள்.
`நான் படும் துன்பத்தில் ஏனடி நஞ்சிட்டுக் கொல்கிறாய்?' என்றாள்.
அவள் நெஞ்சில் நெருப்பு மூண்டிருக்கின்றது. அதனால் வருகின்ற மூச்செல்லாம் அனல் மூச்சாக வருகின்றது.
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
கண்ணா! என்ன வஞ்சனை உனக்கு!
அவள் இவ்வளவு மெலியும்படி வஞ்சித்து விட்டாயே?
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
கண்ணெனும் வலைவீசி உன்னைக் கட்டியிழுக்க நினைத்தாள்; மணிவண்ணன், தப்பிவிட்டான் என்றதும் மாயக்கண்ணீர் வடித்தாள்.
புண்ணாகி விட்டது அவள் நெஞ்சு; புனலாடுகின்றன அவள் கண்கள்; அனல் பட்ட புழுவானாள் ராதை!
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
மாந்தளிர் மஞ்சத்தில் படுக்க வைத்தேன். `ஐயோ! மஞ்சத்தில் ஏனடி நெருப்பை இட்டாய்' என்றாள்!
கொஞ்சமா அவள் துயரம்...?
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
குன்றத்தைக் குடையாகப் பிடித்தவனே! ஆயர் குலம் காத்தவனே!
கோபியரை முத்தமிடும் கோபாலா!
கம்சக் கூட்டத்தின் வம்சத்தையே கருவறுத்த கண்ணா!
அடியவர்க்குக் கருணை மழை பொழியும் கார்முகிலே!
ராதையைக் காத்தருள மாட்டாயா...?'
-தோழியின் உரை கேட்டான் கண்ணன்.
அவனுக்கும் ஏக்கம் பிறந்தது.
தன்னுடைய தாபத்தையும் அவனிடம் கூறுகிறான்.
ராதையை உடனே அழைத்து வரச்சொல்கிறான்.
தோழி, ராதையிடம் சொல்கிறாள்:
`ராதா! கண்டேன் கண்ணனை!
தென்றல் தாலாட்டுமிடத்தில் அவன் இருக்கிறான். அங்கே செம்பூக்கள் மணம் பரப்புகின்றன.
பிரிந்திருக்கும் காதலர்களை வாட்டி எடுப்பானே மன்மதன், அவன் கண்ணனையும் வாட்டுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
மன்மதன் கணைகள் வீச, மதியும் வந்து உயிர் குடிக்க, அந்த வெண்ணிலா ஒளியில் தன்னை மறந்து தன்னைந் தனியே வாடுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
நள்ளிரவு.
தேனீக்கள் இசை பாடுகின்றன. அந்தப் பாடல்களில் மலர்கள் உறங்குகின்றன; ஆனால் மாயவன் உறங்கவில்லை.
அங்குமிங்கும் அலைகிறான்; ஏங்குகின்றான்!
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
அவன் தன் இல்லத்தைத் துறந்தான். காட்டுப் பூக்களால் மெத்தை விரித்துக் காட்டிலே காத்திருக்கிறான்.
எப்பொழுதும் அவன் வாயிலிருந்து, `ராதா! ராதா....!' என்ற ஒலியே புறப்படுகிறது.
புல் மஞ்சத்தில், பூப்படுக்கையில் உண்ணாமல், உறங்காமல், முல்லைச் சிரிப்புதிர்த்து மோகத்தால் வாடுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் குயில்கள் சிறகடித்தால், `என் ராதை தான் வருகிறாளோ...?' என்று அங்குமிங்கும் ஓடுகிறான்; ஆசையுடன் தேடுகிறான்.
நங்கை உன்னைக் காணாவிட்டாலும் அவன் நம்பிக்கை தளரவில்லை.
மங்கலான இந்த இரவு, உன்னை அவன் சந்திக்கும் நேரமடி!
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
வானில் இடி இடித்தால், `இது ராதையின் கால் சிலம்பு ஒலி,' என்கிறான்.
கானகத்தில் அவன் உன்னைக் கட்டி அணைத்ததை எண்ணி எண்ணி உன் அழகையே புகழ்ந்து கொண்டிருக்கிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
பட்டாடை புனைந்து பரிமளிக்கும் கூந்தலுடன் இட்டமுடன் விளையாட ஏற்ற இடம் நாடி, கட்டழகன் செல்கிறான்; காதலி நீ பின் தொடர்க, முட்டியெழும் ஆசையை மோகனமாய்த் தீர்ப்பதற்கு!
ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
`ராதை! ராதை!' என வேய்ங்குழல் ஊதுகிறான்!
பாவை மென்னுடல் தழுவும் சற்றே பரிமளிக்கும் பூவை நின்னாசை நினைப்பால் கூறுகிறான்.
ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
பறவை சிறகடிக்க, பசுங்கொடிகள் அசைந்தாட, `பாவை வருவாள்' என்று எதிர்பார்த்து ஏக்கமுற,
புத்தம் புதுமலராய்ப் பூவமளி அமைத்து, அவன் நீ வருவாய் என வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பான்!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
ஒலிக்கும் நூபுரங்கள், மாபெரும் தொல்லையடி!
மறைவாய் கலவி செய்ய மாபெரும் இடையூறு!
கருப்பில் ஆடையுடன் கங்குல் கவிகையிலே, இருள்சேர் பூப்பந்தல் இனிதாய்ச் சேர்ந்திருக்க, தருணம் இதை உணர்ந்து தடுமாற்றம் அகற்றிவிடு!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
முரஹரி மார்பிடை முயங்கும் மாலையடி, கார்மேகக் கூட்டத்தில் வெண்பறவைக் காட்சியடி!
மின்னல் இடையாளே!
ஊடல் அகற்றி இனி இன்னல் தீர்க்க வரும் இனியவனைக் கூடிடுக! தருணம் இது, தோழி, தடுமாற்றம் அகற்றிவிடு!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
பூமகள் விரித்த மஞ்சம்; பொன்னுடலைச் சாய்த்தவுடன், மேகலையை அவிழ்ந்து விடு! மோகத்தோடு உறவாடு!
பங்கயக் கண் திறந்தே பார்த்துப் பருகிடுவான்.
அங்காந்து காத்திருப்பான். ஆரத் தழுவியவன் உடலைப் புறம் தழுவி, உண்ணும் சுவை கூட்டி கேட்டது கேட்டபடி தடைகள் சொல்லாமல், ஏதும் மறைக்காது, எதிர்த்தொன்றும் சொல்லாது, தூமலர்த்தேன் உறிஞ்சும் தும்பியைப் போலவனும் காமவிருத்தாடக்
களிப்போடுறவாடு!ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
நாளை வரை அவனும் காத்திருக்க மாட்டான்; பாளைச்
சிரிப்புதிர்க்கும் பாவை நீ புறப்படு!
காளை அவன் மனத்தைக் கண்ணாடிப் பெட்டகம் போல், நோவாது கொள்ள மதுஹரியும் மனங்களிக்க!
மருள்கொள் புலவியிலே மதி மயக்கம் தந்திடவே தருணம் இது தோழி! தயங்காமல் புறப்படுக!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!'
கண்ணனும் ராதையும் கலந்து விளையாடியதை, காமரஸமாகச் சித்திரிக்கும் ஜயதேவர், அதில் ஒரு ஞானரஸத்தையும் ஊட்டுகிறார்.
`காமக் கலவி' என்பது ஒருவகை லயம்.
ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாகவே காட்சியளிப்பது அது.
அது அத்வைத நிலை, சமாதி நிலை.
பேசுவது சரீரங்களைப் பற்றியேயாயினும், உள்ளுணர்வு ஆன்மாவைப் பற்றியது.
இரண்டற்ற நிலையில் ஜீவராசிகள் முழுவதுமே ஒவ்வொரு கட்டத்தில் இயங்குகின்றன.
அந்த லயத்தில் மானிடஜாதி ஈடுபட வேண்டுமென்று தான் இல்லறத்தை ஒரு புனித `அற'மாக ஆக்கினார்கள்.
ஆடு மாடுகளுக்குக்கூட திடீர் திடீரென்று அந்த உணர்வு பெருக்கெடுக்கிறது.
ராதா கிருஷ்ண பாவம், லெளகீகத்தின் சாரம்.
`பகவானைப் பற்றி இப்படிப்பட்ட கதைகளா?' என்று கேட்கக் கூடாது.
பகவான், லோகாயத சுகத்தின் குருவாக ஆக்கப்படுகிறான்.
காமத்துக்கெனக் கூறப்படும் சாஸ்திரம், பகவான் வடிவத்தில் காட்டப்படுகிறது.
வாழ்க்கையின் உச்சக்கட்ட உணர்ச்சியாக, அது எழுந்து நிற்கிறது.
செயலின் மூலம் செயலற்ற நிலையே காமம்.
அந்த இயக்கத்தில் மனம் ஒன்று பட்டபின் வேறு சிந்தனைகள் இயங்காமல் நின்று விடுகின்றன.
அவனையே அவளும், அவளையே அவனும் நினைக்கிறார்கள்.
பக்தி தத்துவத்திலும் இதுதானே நிலை!
படுக்கை அறை `பள்ளியறை' என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டவன் சயனிப்பதும், `பள்ளி' என்று கூறப்படுகிறது.
உடல் உறவில் அடைகின்ற அமைதி, பக்தியிலும் கிடைக்கிறது.
பக்தியில் கிடைக்கின்ற ஆனந்தநிலை உடல் உறவிலும் கிடைக்கிறது.
சிருஷ்டியில், `ஆண்-பெண்' என்று இரண்டு படைக்கப்பட்டு, இரண்டுக்கும் உணர்வுகள் உண்டாவது ஏன்?
சிருஷ்டிகர்த்தா, சிற்றின்பத்திற்கு விரோதியாக இருந்திருந்தால், அவன் இப்படிப்பட்ட இரண்டு வடிவங்களை ஏன் படைக்க வேண்டும்?
`சிற்றின்பம்' என்ற வார்த்தையிலும், `இன்பம்' இருக்கிறது; பேரின்பத்திலும் இருக்கிறது.
கோபுரங்களில் காமரஸப் பதுமைகளை வைப்பதும் அதற்காகவே.
நேபாளக் கோயில்களில் ஒரு பெண் படுத்திருப்பது போன்ற சிலைகள் உண்டு. அதன் பெண் குறியில் தான் குங்குமம் கொட்டி, வைக்கப்படுகிறது, என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
ஏன், சிவலிங்க வடிவமே அதுதானே!
காரணம் உலக இயக்கத்துக்கு இது தேவை.
திருமணங்களின் மூலம் குடும்பங்கள் உருவாகிப் பண்பாடுகள் காக்கப்படுகின்றன.
மாதா மாதம் இறைவன் பூமிக்கு வந்து சில உயிர்களைப் படைத்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக அவன் உருவாக்கிய கருவிகளே ஆணும் பெண்ணும்.
அவை சிருஷ்டிக்கான கருவி என்பதால் யந்திரம் மாதிரி இயங்க முடியாது.

அந்த உறவு சந்தோஷமில்லாமல், பானை செய்வது போலவும், பாத்திரம் செய்வது போலவும், அதுவும் ஒரு தொழிலாகி விட்டால், அந்த தொழிலாளர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புவார்களே தவிர, பணி செய்ய மாட்டார்கள்.
அதனால் தான் சிருஷ்டி தத்துவத்தில் ஒரு சுகபோக லயம் கலக்கப்பட்டது.
அதுவும் வெறும் சுகமாக இருந்தால் ஆடு மாடுகளைப் போல, அந்த நேரத்து உணர்ச்சியாகி விடும்.
ஆகவே, அது கலையாக விவரிக்கப்பட்டது.
பலவகையாக அது வடிவமெடுத்தது.
ஒவ்வொரு சிறு காரியமும், பிரமாதப்படுத்தப்பட்டன.
வெறும் பார்வையே கூட காவியமாக்கப்பட்டது.
முத்தம் இடுவது கூட வகை வகையாக விவரிக்கப்பட்டது.
வீடு விட்டுக் காடு சென்ற முனிவர்களே கூட அதைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார்கள்.
அங்கங்களின் ஒவ்வொரு மயிர்க்காலும் கூட காவியங்களுக்கான கருவாக அமைந்தது.
வருணனைகளைப் படிக்கும் போதே, `வாழ்ந்து பார்க்க வேண்டும்' என்று ஆசை கிளர்ந்தெழுமாறு எல்லா பாஷைகளிலும் இந்தத் சுவையே மிகைபடத் தொடங்கிற்று.
ஆகவே, நோக்கம் சிருஷ்டி; அதற்கே இரண்டு கருவிகள்; அந்த இரண்டு கருவிகளைத் தூண்டிவிடும், வருணனைகள்.
மூலநோக்கம் சிருஷ்டி என்பதனை மனத்திலே கொண்டால், சிற்றின்பம் விரஸமாகத் தெரியாது.
காமம், உடலுறவு புனிதமாகி விடும்.
அந்தப் புனிதமான உடலுறவை ஜயதேவர் வருணிக்கிறார்.
`கட்டி உடல் தழுவிக் காதல் புரிகையிலே மட்டில்லா இன்ப வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்க, கண்ணை இமைமூடில் காதல் சுகம் பெருகும்' என்று கண் இமை திறந்து அங்கே கலவிச் சுகம் கண்டார்.
ஒருவர் இதழ் ஒருவர் கடித்து உறிஞ்சித் தேன்மாந்தும் பருகுவாய்க் கள்ளின் இணை கூறச் சுவையுண்டோ?
கலவிப் போர் இன்னும் வெற்றி தோல்வி என்று பகுத்துரைக்கும் வண்ணம் நடந்து முடியவில்லை.
இதுதான் துவக்கம்!
இன்பத்தின் வருணனைகள் இதுவென்று உரைப்பதற்கு என்னால் இயலவில்லை.
முடிவின் நிலை என்ன?
யார் உரைக்க வல்லாரோ?
கைகள் சிறைபிடிக்க, கடினமுலை மார்தாக்க, கை நகங்கள் உடல் கீற, மையச் சிவந்த வாய் பற்கள் கடித்து உதற, கார் குழலைக் கைப்பிடித்துக் கலைத்து இழுத்து, உயிர்த் துடிப்போடு கனிவாயில் வாய்வைத்துக் கள்ளுறுஞ்சும் வகையுரைக்கப் போமோ!
போதை தலைக்கேற புதுக்கனிகள் சுவைக்கின்றார். காதல் விளையாட்டுக்கென்றே இலக்கணங்கள் ஓதி உணராது உடல் புணர மாட்டாதோ?
கலவி மயக்கத்தின் அடையாளம், அறிவார்கள், உலவும் உள்ளத்து உணர்ச்சி பொங்கி, போர் ஆரம்பித்தவுடன் ஆனந்தம் பொங்குதடி!
தேரா விளையாட்டு தெவிட்டா இன்பச்சுவை; என்னென்ன ஆடலடி! எப்படித்தான் கூடுகிறார்?
கன்னல் பிழிந்தாற்போல் கலவி பிழிந்த சுகம், கடலின் அடுக்கடுக்காய் பொங்கி வரும் அலையாம்!
உடலை ஒருவனுக்கு ஒப்படைத்த மங்கையவள், தலைவன் தாக்கியதும் தான் எதிர்த்து தாக்கியதும், முலைகள் குதித்து வர மெய் தழுவிக் குதித்ததுவும், அலையா மனம் அடக்கி அந்தரத்தில் நின்றதும், வாக்கு மனம் செயல் இம்மூன்றும் மறைந்ததடி!
தாபச் சுரம் பெருக, தணிந்தபின் உடல் சோர, வாடும் மலர்க்கொடிபோல், வாடி உடல் சாய, பேசும் பேச்சிறைக்க, பேசாது மூச்சிறைய, வாசமலர் விழியாள் வைத்தில் கண்ட சுகம் நாசம் அடைவதுண்டோ, நலிவுடலும் கொள்வதுண்டோ?
பேசும் மாந்தர்களே!
புவியில் கூடலுக்கு நேரம் உண்டோ?
`பாற்கடலின் கரை அருகில் பாவை உன் அழகுடலைப் பார்த்த பரமசிவன், `மனம் கொண்ட காதல் இனி நடவாது' என்று உணர்ந்து, நலிவுற்ற மனத்தாலே சிவகாமி சிந்தை கவர் சிவனார் அந்நாளில் ஆலகால விஷம் அருந்தியதை நானறிவேன்!'
-பற்பலவாம் பேச்சுரைத்துப் பன்மாயக் கள்வனவன் பொற்கொடியின் சோர்ந்த உடல் பூமியில் சாய்ந்துறக்கம் மேற்கொண்ட வேளையிலே,
மெல்ல அவள் மேலாடை அப்புறமாய் ஒதுக்கி, ஆர்த்தெழுந்த கொங்கையினை கொப்பூழ் வனப்போடு குனிந்தபடி பார்த்திருந்தான்!
தீராது விளையாட்டுப்பிள்ளை, என் கண்ணன்
நேராது தீங்கு என்றும் நம்மை தினம் காப்பான்!
காலமெல்லாம் கண்விழித்துக் கண்கள் சிவப்பாக,
பற்பதித்து, செவ்விதழும் வெளுத்துப் பொலிவிழக்க,
நற்கூந்தல் சூடுமலர், சருகாய் வாடிவிட,
ஆடை சீர்குலைய, அங்கம் வெளித்தெரிய
இரவைக் கலைத்தொரு கதிரோன் வெளிப் போந்தான்.
நம்பி முகம் பார்த்து நாணும் கண்ணிரண்டும்
வம்பு செய் காதல் உணர்வை மீட்டி விட,
நம்பியுடன் நங்கை நாடிப் புணர்ந்ததனை
நாவால் எடுத்துரைக்க நல்ல சொல் கிடைக்கவில்லை!
முடித்த குழல் அவிழ்ந்து மொய்த்துத் தரை புரள,
வடித்து உடல் நீரால் கணைக் கதுப்பொளிர,
தடித்த செவ்வாயும் தனிக்காதல் மணம் பரப்ப,
கொங்கை மேல் குதித்து முத்து வடம் குலுங்க,
மங்கையவள் மேகலையும் மண்ணில் சிதறி விழ
அருகிருப்பார் பாராது அல்குல் அணிமார்பாம்
மருளும் பேதை கரம் மறைவாய்க் காத்தபடி
உருகித் தடுமாறும் ராதையைக் கண்டவுடன்
`வருக' என கண்ணன் விடு கோரிக்கை கண்டவுடன்,
`தையல் காணிக்கை'யென்று,
உடல் உண்ட சுகம் மீண்டும் உண்ண வருவதற்கு,
தண்மாலை துறந்தவளும் தாவி அவன் மேல் விழுந்து
கொண்ட சுவைக்கு ஒருகணக்கும் இல்லையடி!
பனியால் வளர்ந்து வரும் பச்சைப் புல் போல
கனிவாய் முறுவலிக்கும் கன்னி உடல் ஒசிய,
காதல் குரல் எடுக்க,
சொற்கள் பொருளிழக்க,
நாதன் தரும் இன்பத் தடுமாற்றம் நிலைகுலைக்க,
இதழ்கள் ஒவ்வொன்றில் எத்தனையோ பற்குறிகள்!
கோதை முக அழகை உண்டு ரசிக்கையிலும்,
இதமாய் உடல் தழுவி இருக்கும் சேர்க்கையிலும்
எத்தனையோ இன்பமடி!
எடுத்துரைக்க வார்த்தை இல்லை!
-மேலே வடமொழி மூலத்தில் இருந்து என் நண்பர் `ஆஷா' மொழி பெயர்த்ததை, அப்படியே கொடுத்திருக்கிறேன்.
இந்து மார்க்கத்தின் லெளகீக சுகத்துக்கு உச்சகட்ட உதாரணம், ஜயதேவர் அஷ்டபதி.
என்னைப் பொறுத்தவரை காமத்தைப் பாடி மனிதனை ஞானத்துக்குப் பக்குவப்படுத்துவதைப் பெரிதும் விரும்புகிறேன்.
அண்மைக் காலங்களில் அமெரிக்க நாட்டில் இந்து மதம் பரவி வரும் வேகம் நமக்குத் தெரிந்ததே. அங்கே இந்தியாவில் இல்லாத ஒரு புதுவித யோகத்தைக் கற்பித்தார்கள்.
சுமார் இருபது ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக நின்று கொள்வது; அதுவும் இடுப்பளவு தண்ணீரில் ஒரு ஆண், ஒரு பெண்ணென்று வட்டமாக நிற்பது; ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுக் கொள்வது; ஆனால் யாருக்கும் காம இச்சை வரக்கூடாது. இப்படி ஒரு பயிற்சி.
மூன்றாண்டுகளுக்கு முன் `லைப்' பத்திரிகையில் இந்தப் படத்தையே நான் பார்த்தேன்.
காம நிலையில் இருந்து கொண்டே காமத்தை மறப்பதென்பது இதன் பெயர்.
அப்படி ஒரு பக்குவம் எல்லாருக்குமே ஏற்பட்டு விடாது.
ஜயதேவரின் ராதா கிருஷ்ண பாவனை, காம உணர்வினையே தூண்டக்கூடும். ஆனால், அதிலிருந்து ஒரு ஞானயோகத்தை உருவாக்கும் முயற்சியை அறிவாளிகள் ஏன் மேற்கொள்ளக் கூடாது.?
வீணாக ஜயதேவரின் அஷ்டபதி கீத கோவிந்தத்தை ஒதுக்கி விடுவதில் பொருளில்லை.
கண் அந்த நூலைக் காண வேண்டும்; மனம் அதைப் படிக்க வேண்டும்; ஆண்மையுள்ள உடம்பு கூட உணர்ச்சியற்றிருக்க வேண்டும்; அதுதான் ஞானத்தின் பரிபக்குவ நிலை.

No comments:

Post a Comment