Tuesday, April 10, 2012

உள்ளத்திலே இருக்கிறார்…

Posted On April 11,2012,By Muthukumar
பக்தி என்பது, ஓரிரு நாளில் வந்து விடாது; ஒரே ஜென்மாவிலும் வந்து விடாது. முற்பிறவிகளில் இதில் ஈடுபாடு இருந்திருந்தால், இந்த ஜென்மாவிலும் அது தொடர்ந்து வரும். பகவான் எல்லா இடங்களிலும் உள்ளார். ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளார். அவரை பக்தியின் மூலமே அறிய முடியும்.
ஆரம்பத்தில், புராணங்களைப் படிப்பதன் மூலமும், பல மகான்களின் சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் மனதில் பக்தி வளரும். தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும். இப்படி பல ஜென்மாக்களில் ஈடுபட்டு வந்தால், ஏதாவது ஒரு ஜென்மாவில் பலன் கிடைக்கும்.
சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். அவருக்கு, கண்ணை மூடிக் கொண்டால் பகவான் தெரிவதுண்டாம். "நாங்கள் கண்ணை மூடினால், ஒரே இருட்டாகத் தெரிகிறதே... உங்களுக்கு மட்டும் கண்ணை மூடினால், பகவான் தெரிவதாகச் சொல்கிறீர்களே... அது எப்படி?' என்று கேட்டனர் மற்றவர்கள்.
அதற்கு அவர், "இது, இந்த ஜென்மாவில் கிடைத்த பாக்கியம் இல்லை. நான் பல ஜென்மாக்களில் பகவான் நாமாவைச் சொல்லி, எத்தனை @காவில்களை சுற்றி, சுற்றி வந்திருக்கிறேன் தெரியுமா?
"இத்தனை ஜென்மாவில் சேர்ந்த புண்ணியத்தால், இந்த ஜென்மாவில் கண்ணை மூடினாலும் பகவான் தெரிகிறார்...' என்றார். இப்படி பகவானை ஒவ்வொரு ஜென்மாவிலும் வழிபட்டு வந்தால், ஏதாவது ஒரு ஜென்மாவில் பகவானைக் காண முடியும்.
ஒரு குருவிடம் ஒரு சீடன் இருந்தான். அந்த சீடன், "நான் பகவானைத் தேடிக் கண்டுபிடித்து வருகிறேன்...' என்று, வெளியில் புறப்பட்டுச் சென்றான்.
சில நாட்களுக்குப் பின் குருவிடம் வந்து, "எங்கு தேடியும் பகவானை காண முடியவில்லை...' என்றான். அதற்கு குரு, "உள்ளத்தே உறைந்திருக்க, ஊரெல்லாம் தேடுவானேன்?' என்றார். அப்போது தான் சீடனுக்குப் புரிந்தது, பகவான் எல்லார் உள்ளத்திலும் இருக்கிறார் என்று. அஞ்ஞானம் என்ற திரை, அவரை காண முடியாமல் மறைக்கிறது. பக்தி என்ற ஆயுதத்தால், அந்த திரையை விலக்கினால், பகவானை காண முடியும்.
அவர் எங்கும் இருக்கிறார் என்பதை அறிந்து, தினமும் ஜெபம் செய்ய ஆரம்பித்தான். பகவானைத் தேடி எங்கும் போக வேண்டாம்... பகவானை நினைத்து, இருக்கும் இடத்திலேயே வழிபட்டு வந்தால், ஏதோ ஒரு ஜென்மாவில், ஒரு நாள், அவரை தரிசிக்க முடியும். இதற்கு நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்!

No comments:

Post a Comment