Wednesday, April 4, 2012

நன்றாக படிக்க நல்ல வழி-ஏப்., 5 பங்குனி உத்தரம்!

Posted On April 04,2012,By Muthukumar
தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும். அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்தரம்.
<கல்விக்கும், உத்தரம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உத்தரம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இது, புதன் கிரகத்தை சூரியனுடன் இணைக்கும் ஒரு பாலம் போல, கட்டில் கால் வடிவத்தில் உள்ளது. புதன் கல்விக்குரிய கிரகம். ஜாதகத்தில், புதனும் சூரியனும் ஒருங்கிணைந்திருப்பதைப் பொறுத்து, புத ஆதித்ய யோகம் இருக்கும். இந்த குழந்தைகள் நன்றாகப் படிப்பர். இவ்வாறு இல்லாதவர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம் உத்தரம் நட்சத்திரம். இவர்கள் உத்தரம் நட்சத்திர நாளில், சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பெற்றோரான சங்கரநாராயணரை வணங்க வேண்டும். அதாவது, உத்திரம் நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியனின் அதிதேவதை சிவனும், புதன் கிரகத்திற்குரிய அதிதேவதை திருமாலும் இணைந்து பெற்ற பிள்ளையான சாஸ்தாவை வழிபட்டால், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.
சாஸ்தாவின் அவதார நன்னாளே பங்குனி உத்தரம். அவரது பிறப்பு வரலாற்றை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கரம்பன் என்ற அசுரனின் மகள் மகிஷி. இவள் எருமைத்தலை உள்ளவள். இவளது பெரியப்பா மகன் மகிஷாசுரனை, பராசக்தி, சண்டிகாதேவியாக அவதரித்துக் கொன்றாள். தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு காரணம், தேவர்களே என்றறிந்த மகிஷி, அவர்களை பழிவாங்க, பிரம்மனை நினைத்து தவமிருந்தாள்.
சிவனும், திருமாலும் இணைந்து பெறும் பிள்ளையால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றாள். இரண்டு ஆண்களுக்கு குழந்தை பிறக்காது என்ற தைரியத்தில், இப்படி ஒரு வித்தியாசமான வரத்தைப் பெற்று, தேவலோகத்தைக் கைப்பற்றினாள்; அவர்கள் ஓடி ஒளிந்தனர்.
மகிஷியின் அட்டகாசம் குறித்து, சிவவிஷ்ணுவுக்கு தகவல் சென்றது. அவர்கள், "சுந்தரமகிஷன்' என்ற எருமை மனிதனை உருவாக்கி, மகிஷியின் முன் அலைய விட்டனர். அவனை, மகிஷி விரும்பினாள். பூலோகம் சென்று அங்கே வசிக்கலாம், என மனைவியிடம் கூறினான் சுந்தரமகிஷன். அந்த எருமைகள், பூலோகம் வந்து பெற்ற எருமைகளே, காட் டெருமைகள் ஆகும். மகிஷி பூலோகம் வந்தாலும், தேவர் களுக்கு கொடுமை செய்வதை தொடர்ந்தாள். தேவர்களுக்காக முனிவர்கள் செய்த யாக குண்டங் களில், ரத்தமழை பொழியச் செய்து நாசமாக்கி, முனிவர்களைக் கொன்றாள்.
மகிஷி திருந்தும் வழி தெரியவில்லை. இதனிடையே பாற் கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை, அசுரர்கள் கொண்டு சென்றனர். திருமால், மோகினி அவதாரம் எடுத்து, அவர்களை மயக்கி, அமுதத்தை மீட்டு, தேவர்களுக்கு கொடுத்து விட்டார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன், அவளோடு இணைந்து பெற்ற பிள்ளையே தர்மசாஸ்தா.
அவரிடம், காட்டில் வசிக்கும் முனிவர்களை காக்கும் பொறுப்பு ஒப்படைக் கப்பட்டது. அவர் மகிஷியைக் கொன்று, முனிவர்களை பாதுகாத்தார். அதனால் தான், சாஸ்தா கோவில்கள், இப்போதும் காட்டுப் பகுதியில் <உள்ளன. சபரிமலை தர்மசாஸ்தா, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை, பாபநாசம் சொரிமுத்தய்யனார் ஆகிய முக்கிய சாஸ்தா கோவில்கள், இன்றும் அடர்ந்த காட்டிற்குள் இருப்பதைக் காண்கிறோம். மக்கள் கூட்டமாகச் சென்றே அவரை தரிசிப்பர். கிராமங்களில் உள்ள சாஸ்தா கோவில்கள், ஊரை விட்டு ஒதுக்குப் புறமான இடங்களிலேயே இருக்கும்.
இவரை, கிராம மக்கள், "சாத்தன், சாஸ்தான்' என்று அழைப்பர். "சாத்து' என்றால், "கூட்டம்!' கூட்டமாக வந்து வழிபடப்படுபவர் என்பதால், அவருக்கு இப்பெயர் வந்தது. "12 ஆண்டுகள் மட்டுமே பூமியில் பிரம்மச்சாரியாக வாழ்வேன்...' என்று சத்தியம் செய்து, தர்மத்தைக் காத்ததால் அவர், "தர்மசாஸ்தா' ஆனார்.
பங்குனி உத்திர திருநாளில், சாஸ்தாவை வணங்குவதன் மூலம், கல்வி அபிவிருத்தி பெறலாம். உங்கள் குழந்தைகளையும் சாஸ்தா கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

No comments:

Post a Comment