Sunday, February 12, 2012

சுமை தீர்ப்பார் சுப்பிரமணியர்!

Posted On Feb 12,2012,By Muthukumar
தைப்பூசத் திருவிழா, நம் சுமையை இறைவனிடம் ஒப்படைக்கும் நன்னாளாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் மனிதன், பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். அந்தக் கஷ்டத்தை சிலரிடம் சொல்லி, ஆறுதல் தேட முயற்சிக்கலாம். ஆனால், அந்த சிலர், எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பர்... அவர்கள், நம் கஷ்டத்தையே அவர்களுக்கு சாதகமாக்கி, ஆதாயம் தேட முயற்சிக்கலாம்; கேலி செய்யலாம்.
ஆனால், கடவுள் அப்படியல்ல... கல்லாயிருந்தாலும்; கருணையோடு நம் குறையைக் கேட்பான். அவன் முன்னால் அமர்ந்து கண்ணீர்விட்டு, கவலையைத் தெரிவித்தால், நம் மனச்சுமை இறங்கி விடும். இதையே தான், முருக பக்தர்கள் காவடி எடுத்து கடன் தீர்க்கின்றனர். காவடியில் என்ன இருக்கிறது? பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், மீன் (மச்சகாவடி), பாம்பு (சர்ப்பக்காவடி), சேவல் ஆகியவற்றை காவடிச் சுமையாகக் கொண்டு செல்கின்றனர்.
ஒரு தண்டத்தில், இரண்டு புறமும் கலசம் அல்லது பானை கட்டி, அதனுள் அபிஷேகப் பொருட்களை இடுவர். சேவல் காவடியாக இருந்தால், அதை காவடியின் ஒருபுறம் கட்டி வைக்கின்றனர். இப்பொருட்களின் தாத்பர்யம் என்ன?
ஒரு உயிர் பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. சற்று வயதான பின், பசுவின் பால் குடிக்கிறது. இறப்பதற்கு முன், உயிர் வதைக்கும் போது, பால் ஊற்றுகிறோம். மறைந்த பிறகு, சதையிலும் பால் ஊற்றப்படுகிறது. "முருகா... என் பிறப்பு முதல், இறப்பு வரை சுமை தான். அச்சுமையை தாங்குபவனாக என்னுடன் வா...' என்றழைப்பதே பால் காவடி தத்துவம்.
"உலகத் துன்பங்களால் சூடேறிக் கிடக்கும் என் மனதின் சூட்டை தணித்து வை...' என, முருகனை வேண்டுவது, பன்னீர் மற்றும் சந்தனக்காவடி தத்துவம்.
"என் வாழ்க்கைப் பாதையில் மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் என, எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாய் வந்திருக்கின்றனர். என்னுடன் அவர்களையும் கரை சேர்...' என்று வேண்டுவது புஷ்பக்காவடி தத்துவம்.
"மீன் போல் பிறவிக் கடலில் கிடந்து தத்தளிக்கிறேன். கருடனைக் கண்டு மிரளும் பாம்பைப் போல், வாழ்க்கை என்னும் புற்றுக்குள் கிடந்து தவிக்கிறேன். இந்த பிறவியில் இருந்து என்னை மீட்டு, உன்னோடு சேர்த்துக் கொள்...' என்பது மச்ச, சர்ப்பக்காவடி தத்துவம்.
"விடியலுக்காக காத்திருக்கும் சேவல் போல், பிறவியாகிய இருளில் இருந்து, எனக்கும் எப்போது விடிவு காலம் வரும்?' என்று கேட்டு சேவல் காவடி எடுக்கிறோம்.
நம்மை மனக் கவலைகளில் இருந்து மீட்டு, சுமையை, தானே ஏற்றுக்கொள்ளும் கருணை தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான்.
"கந்தன்' என்ற சொல்லுக்கு, "பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர்' எனப் பொருள் கூறுகிறது வடமொழி நிகண்டு. பகைவர் என்றால் எங்கோ வெளியில் இருந்து வருபவர் அல்ல; நம் மனமே நமக்குப் பகையாக இருக்கிறது; தேவையில்லாததை எல்லாம் சிந்திக்கிறது. இந்த மனப்பகைவனிடம் இருந்து, நம்மைக் காப்பவன் கந்தன்.
"கந்து' என்றால் "யானையைக் கட்டிப்போடும் தறி' என்று பொருள். <உயிர்கள் என்னும் யானைகளை, ஆசைகளில் இருந்து மீட்டு, அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர், "கந்தன்' ஆனார்.
"கந்து' என்ற சொல்லுக்கு, "பற்றுக்கோடு' என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால், அவர்கள் பிறவிச் சுழலில் இருந்து மீள்வர்.
இந்த உலக வாழ்க்கை, மாயையானது; ஆனாலும், இங்கு கிடைக்கும் தற்காலிக சுகத்திற்காக, மனிதன் இதை விட மறுக்கிறான்; இறந்தாலும், மீண்டும் இங்கேயே வந்து பிறக்கிறான்.
கந்தப்பெருமானை மனதார வணங்குபவர்களுக்கு, இந்த துன்பம் இராது. அவர்கள் அந்தக் கந்தனுடனேயே கலந்து விடுவர்.
தைப்பூசத் திருநாளில் காவடி எடுத்து, முருகன் கோவில்களுக்கு செல்வோம். நம் மனச் சுமையை பெருமானிடம் இறக்கி வைப்போம்; நம் பணிகளைத் தொடர்வோம்; மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்.

No comments:

Post a Comment