Sunday, February 12, 2012

புண்ணியம் செய்தால்…

Posted On Feb 12,2012,By Muthukumar
பிறவி ஜென்மம் நன்றாக அமைய வேண்டும் என்று எல்லாரும் விரும்புவர்; ஆனால், அவரவர் விருப் பப்படி அது அமைவதில்லை. காரணம், பூர்வ ஜென்ம பாவ - புண்ணியங்கள்.
புண்ணிய கர்மா செய்திருந்தால், அடுத்த ஜென்மாவில் குறை எதுவுமின்றி சுகமாக வாழலாம்; பாவ கர்மா செய்திருந்தால், ஏதோ ஒரு ஏழ்மையான இடத்தில் சில ஊனங்களுடன் பிறக்க வேண்டி இருக்கும். அப்போது தெய்வத்தை நிந்தித்து பயனில்லை.
சிறு வயதிலேயே சிலர் புத்திசாலிகளாகவும், சிலர் முட்டாள்களாகவும் இருப்பர். சிலர், உடல் ஊனத்தோடு பிறக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், பூர்வ ஜென்ம பாவங்கள் தான்.
தங்கள் பிள்ளைகளை சரியானபடி வளர்த்து, பாவ- புண்ணியங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்; பிள்ளைகளும், பூர்வ ஜென்மத்தின் பாவ, புண்ணியங்களுக்கு தகுந்தபடி பிறந்து வளரும்.
நாம் பூர்வ ஜென்மத் தில் செய்த பாவ, புண்ணியங்கள், நாம் மறு ஜென்மம் எடுக்கும் போது, அவைகளின் பலனை கொடுக்கிறது. இப்படிப் பட்ட பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களை சேர்த்து வைத்து, சஞ்சித கர்மா என்பதை அனுபவிக்க வேண்டும்.
இந்த சஞ்சித கர்மாவை, ஒரே ஜென்மத்தில் அனுபவித்து ஒழித்து விட முடியாது. இதில், ஒரு பாகம் மட்டுமே இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். இதற்கு, பிரார்த்த கர்மா என்று பெயர்.
ஒரு அசட்டுப் பிள்ளையைப் பார்த்து, "ஹூம்! எனக்குன்னு இந்த பிராப்தம் வந்திருக்கு பாரு...' என்கின்றனரே... அதுதான் சஞ்சித கர்மாவின் ஒரு பாகம். மீதியுள்ள பாகம், அடுத்து வரும் ஜென்மாக்களில் தொடரும். ஆனால், இந்த ஜென்மாவில் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு, அனுமி கர்மா என்று பெயர். இந்த கர்ம பலன், சஞ்சித கர்மாவுடன் சேர்ந்து விடும்.
அதனால், சஞ்சித கர்மா எப்போதும் போல் குறையாமலே இருக்கும். நாம் அனுபவிப்பது பிராப்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல கர்மாவின் பலனை, அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். அதேபோல் பாவ கர்மா செய்திருந்தால், அதையும் அடுத்த ஜென்மாவில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
புண்ணியமோ, பாவமோ எதைச் செய்தாலும் பலனை அனுபவிக்கத் தான் வேண்டும். அதனால் தான், "பாவத்தை செய்யாதே...' என்கின்றனர். ஆனால், சுயலாபத்துக்காக பாவங்களை செய்கின்றனர்.
"வேண்டாம்டா... இது மகா பாவம்; இதைச் செய்யாதே...' என்றால் கேட்பதில்லை. பாவ காரியங்களை செய்வதில் ஒரு சந்தோஷம். இந்த பாவங்களில், பரிகாரமே இல்லாதது பஞ்ச மகா பாவங்கள்.
அதனால், "வாழ்க்கையில் எந்தவித பாவமும் செய்யாதே...' என்கின்றனர். ஒரு ஜீவனுக்கு ஏதாவது துன்பம் செய்தாலும் அது பாவம்; அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்றுள்ளது.
எதையெல்லாம் செய்தால் புண்ணியம்; எதையெல்லாம் செய்தால் பாவம் என்று சாஸ் திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
கூடுமான வரையில் அவைகளை தெரிந்து, வாழ்க்கையை நடத்தினால் நல்லது; பாவத்தை செய்து பரிகாரம் தேட வேண்டாம்; கடவுளுக்கு பயந்து நடக்க வேண்டும்!

No comments:

Post a Comment