Saturday, February 7, 2015

புண்ணியம் தரும் பரிமள ரங்கநாதர்!


 கருடசேவை
மயிலாடுதுறையிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில், பெருமாளின் 108 புண்ணிய திருத்தலங்களில் ஒன்று. இங்கு நடக்கும் கருடசேவை மிகவும் விசேஷம்.
பிரம்மாவிடமிருந்து வேதங்களை திருடி சென்ற மது, கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவற்றை மீட்டு பரிமளம் (புனிதமாக்குதல்) ஆக்கினார். இதனால், இவர், பரிமள ரங்கநாதர் என்று பெயர் பெற்றார்.
தன் வாழ்க்கை துணைவியரை சரி வர கவனிக்காத காரணத்தால், தட்சனின் சாபத்திற்கு ஆளான சந்திரன், இங்கு சுவாமியை வழிபட்டு, விமோசனம் பெற்றான். சந்திரனுக்கு, ‘இந்து’ என்றொரு பெயரும் உண்டு. இதனால், இத்தலம், ‘திரு இந்தளூர்’ என்று பெயர் பெற்றது.
காவிரிக்கரையில் பெருமாள் சயனித்திருக்கும் ஐந்து தலங்கள், ‘பஞ்சரங்கம்’ எனப்படுகிறது. இதில் ஐந்தாவது தலமான இங்கு,
பரிமள ரங்கநாதர் வீர சயனத்தில் காட்சி தருகிறார். வேதங்களுக்கு அருளியதால் இவருக்கு, ‘வேதாமோதன்’ என்றும் பெயருண்டு. இவரது சிலை மரகதக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. சுவாமியின் தலைக்கு மேலே சூரியனும், நாபியில் பிரம்மாவும், பாதத்திற்கு அருகில் சந்திரனும், கங்காதேவியும், தலை அருகில் காவிரித்தாயும் உள்ளனர்; தாயார் பரிமள ரங்கநாயகி!
தன்னில் நீராடுபவர்களின் பாவத்தை ஏற்றுக்கொண்டதால், கங்கைக்கு அதிக பாவம் சேர்ந்தது. இதற்கு விமோசனம் கிடைக்க கங்காதேவி, இங்குள்ள காவிரி நதியில் மூழ்கி சுவாமியை வழிபட்டாள். கங்கையே தன் பாவத்தை தீர்க்குமளவுக்கு புண்ணியம் பெற்ற ஆறு காவிரி; இங்கே நீராடினால், புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.
ஐப்பசி மாதம், 22ம் தேதி முதல் இங்கு பிரம்மோற்சவம் துவங்கும். பத்து நாட்கள் நடக்கும் இந்த விழாவில், சுவாமிக்கு ஆண்டாள் அலங்காரம், குவலயாபீட வதம், பகாசுர வதம், அகல்யா சாப விமோசனம், காகாசுரன் வதம், உறியடி கோலக்காட்சிகள், வெண்ணெய்த்தாழி போன்ற அலங்காரங்களை செய்வர்.
விழாவின், 4ம் நாள்  சுவாமி கருடசேவை சாதிப்பார்; இதைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம். இதையடுத்து, சுவாமிக்கு திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கும்.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கத்தைப் போல, இங்கும் ரங்கநாதர் முத்தங்கியில் காட்சி தருவார். தை அமாவாசையன்று சுவாமிக்கு தாயார் போலவும், தாயாருக்கு சுவாமி போலவும் அலங்காரம் செய்வர்; இதை, ‘மாற்றுத் திருக்கோலம்’ என்பர்.
பரிமள ரங்கநாதரை வணங்கினால், புண்ணியம் பெருகும்; தரிசிக்க கிளம்புவோமா!
தொடர்புக்கு தொலைபேசி எண்: 04364 223 330.

No comments:

Post a Comment