Saturday, July 26, 2014

பொன்னாக மாறிய புற்றுமண்! அம்மன் அற்புதங்கள்

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் வழியில் அழகுற அமைந்திருக்கிறது சாமுண்டிபுரம். கிராமத்தின் பெயருக்கு மட்டுமல்ல, அதன் சிறப்புக்கும் செழிப்புக்கும் காரணமாகத் திகழ்கிறாள், அங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசாமுண்டி அம்மன்.
மண்ணும் பொன்னான அற்புதம்!
ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் அது.  வளையப்ப செட்டியார் என்பவர், வளையல் வியாபாரத்துக்காகப் புறப்பட்டார். வழியில் புற்று ஒன்று தென்பட்டது. அதை அவர் கடக்கும் தருணத்தில், திடுமென புற்றுக்குள் இருந்து ஒரு கை நீண்டது. வளையப்பர் திடுக்கிட்டார். தொடர்ந்து ஒலித்த அசரீரி, ‘எனக்கும் வளையல் அணிவித்து விடு’ என்றது. அவ்வாறே செய்த வளையப்பரும், வளையல்களுக்குக் கூலி கேட்டார். ‘கீழேயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொள்’ என்றது அசரீரி. அதன்படியே வளையப்பர் ஒரு பிடி மண்ணை அள்ளியெடுக்க, அந்த மண் பொன்னாக மாறி மின்னியது!
இந்தத் தகவல் ஊருக்குள் பரவியது. புற்றின் சாந்நித்தியத்தை அறிந்து சிலிர்த்த மக்கள், அன்றிலிருந்து அந்தப் புற்றையே அம்மனாகக் கருதி, வழிபடத் துவங்கினார்களாம். பிற்காலத்தில் கி.பி. 1558-ல், திப்புசுல்தான் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் சரித்திரத் தகவல் உண்டு.
வளைகாப்பு நாயகி!
ஸ்ரீசாமுண்டி, வளையல் பிரியை ஆயிற்றே! எனவே, வளையல் பிரார்த்தனையும் இங்கே பிரசித்தம். வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாத பெண்கள், கோயிலுக்கு வந்து அம்மனுக்கு வளையலும் பூமாலையும் வாங்கித் தருகிறார்கள். அவற்றை அம்மனுக்குச் சாற்றிய பிறகு, பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கே அம்மன் பிரசாதமாகத் திருப்பித் தருகிறார்கள். இது, வளைகாப்பு செய்வதற்குச் சமம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
பலிக்கும் பிரார்த்தனைகள்
அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு மற்றும் மஞ்சள் கயிறு மாலை அணிவித்து வழிபட்டு, 9 பேர் அல்லது 11 பேர் என்ற (ஒற்றைப்படை) எண்ணிக்கையிலான சுமங்கலிப் பெண்களுக்கு அந்த மஞ்சள் கயிற்றை வழங்கினால், தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும். அதேபோன்று, கோயிலைச் சுற்றியுள்ள நிலங்களில் அறுவடைக்கு முதல் நாள், நிலத்தில் விளைந்த பயிரின் விளைச்சலை அம்மனுக்கு வைத்து வழிபட்ட பிறகே அறுவடையை ஆரம்பிக்கிறார்கள். இதனால் மகசூல் அதிகமாகும் என்பது நம்பிக்கை.
நினைத்தது நிறைவேறும்
ஆடி வெள்ளி- செவ்வாய்க் கிழமைகளில் அம்மனுக்கு நடைபெறும் விசேஷ வழிபாடுகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வழிபட, தொழிலில் விருத்தியும், இல்லத்தில் செழிப்பும் உண்டாகும். மேலும், ஆடி மாதத்தில், சாமுண்டி அம்மனை விளக்கேற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் சமர்ப்பிப்பதும், அன்னதானம் செய்வதும் இங்கே விசேஷமாக நடைபெறுகிறது.
அம்மன் தெற்கு நோக்கி அருள்வது சிறப்பம்சம் என்கின்றனர். கணபதி, அக்னி பைரவர், கால பைரவர், ராக்காச்சி அம்மன் மற்றும் நாக கன்னியர்களையும் இங்கே தரிசிக்கலாம்.
அண்ணனுக்கு சீர்வரிசை!
கம்பம் நகரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகம்பராய பெருமாள், சாமுண்டி அம்மனுக்கு அண்ணன் முறையாம். ஆனி மாதம் பெருமாள் கோயிலில் திருவிழா துவங்கும். முதல் நாள் கொடியேற்றத்தன்று அண்ணனுக்கு சீர்செய்வதற்காக அங்கு எழுந்தருள்வாள் சாமுண்டி அம்மன்.
நிறைவு நாளன்று அண்ணனுக்குச் சீர் செய்யும் அம்மன் பதில் சீர் தரும்படி கேட்க, பெருமாள் கோயிலில் இருந்து சாமுண்டி அம்மனுக்கு பதில் சீர் தரப்படுகிறது. ஆனால் அது தனக்குப் போதாது என்று கோபித்துக் கொண்டு அம்மன் தனது ஆலயத்துக்கு திரும்புகிறாள்!
சகோதர- சகோதரி உறவின் உன்னதத்தையும் அவர்களுக்கு இடையேயான உரிமைகளின் சிறப்பையும்… தெய்வத்தை முன்னிலைப்படுத்தி விளக்கும் இந்த விழா- வைபவத்தை வாழ்வில் ஒருமுறையேனும் நாம் தரிசிக்கவேண்டும்.

1 comment:

  1. வணக்கம்
    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-7:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete