Saturday, November 23, 2013

இறைவனை அடைய உதவும் ஐந்து மார்க்கங்கள்!!!


Posted At November 23,2013,By MuthuKumar

இந்து தர்மத்தில் இறைவனை அடைய ஐந்து மார்க்கங்கள் உண்டு;மற்ற மதங்களில் ஒரே ஒரு மார்க்கம் மட்டுமே உண்டு;ஐம்பூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் ஆகும்.மனிதர்களின் பிறவி சுபாவங்கள் இந்த ஐந்தில் எதாவது ஒன்று இருக்கும்;சிலர் நிலம் போல ஆழ்ந்த பொறுமையோடு செயல்படுவர்;சிலர் நீர் போல ஓடிக்கொண்டே இருப்பர்;சிலர் நெருப்பு மாதிரி ஒவ்வொரு செயலிலும் செயல்படுவர்;சிலர் ஆகாயம் போல பரந்த மனப்பான்மையோடு இருப்பர்;இதில் பலர் ஏதாவது இரண்டு நிலைகள் உள்ள சுபாவத்துடன் பிறப்பதும் உண்டு.
ஐம்பூதங்களில் ஏதாவது ஒரு சுபாவத்துடன் பிறப்பவர்களுக்கு இறைவனை அடைய ஒருவழிமுறை போதாது;எனவேதான் நமது முன்னோர்கள் ஐந்து மார்க்கங்களாக சரியை,கிரியை,யோகம்,ஞானம்,பக்தி என்று வகுத்துள்ளனர்.


சரியை என்றால் தினமும் பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள்;தினமும் இருமுறை குளிப்பது;ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்து வருவதும்;மிருகங்களை பிறர் வதைக்காமல் தடுப்பதும்;தினமும் காக்கைக்குச் சாதம் வைத்தல்;அரிசி மாவினால் கோலம் போட்டு அதன்மூலமாக எறும்பிற்கு உணவிடுதல்;புரட்டாசி மாதம் முதல் பங்குனி மாதம் வரையிலான கால கட்டத்தில் மலையும் காடும் சார்ந்த ஆலயங்களுக்குச் செல்லும்போது ஐந்துகிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் மனித காலடி படாத இடத்தில் தூவுதல்;செய்யும் தொழிலில் நேர்மையுடன் செயல்படுதல்;இல்லறத்தில் அதிதிகளை உபசரித்தல்;தினமும் தூங்கும் முன்பும்,தூங்கி எழுந்த உடனேயும் வலது கையை உற்று நோக்கி ஏதாவது ஒரு மந்திரம் ஜபித்தல்(ஓம் அருணாச்சலாய நமஹ,ஓம் அண்ணாமலையே போற்றி,ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ,ஓம்-குலதெய்வம்-நமஹ)இப்படி தினமும் செய்தாலே இறைவனின் திருவடிகளை அடைய முடியும்.
இத்துடன் தினமும் ஏதாவது ஒரு துறவி/யாசகருக்கு அன்னதானம் செய்து வரலாம்;வாரம் ஒரு வில்வமரம்/ருத்ராட்சமரம் வளர்ப்பது மகத்தான புண்ணிய செயல் ஆகும்;வாரம் ஒரு வில்வமரம் அல்லது ருத்ராட்ச மரம் வீதம் நம் வாழ்நாள் முழுவதும் வில்வமரக்கன்றுகளை/ருத்ராட்ச மரக்கன்றுகளை நடுவதும்,அவைகளை பராமரிப்பதுமே உலகின் மிக உயர்ந்த அதே சமயம் எளிமையான புண்ணியச் செயல் ஆகும்.தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது மஞ்சள் நிற வாழைப்பழங்கள் கொடுத்து வரலாம்;

கிரியை என்பது மந்திர- எந்திர- தந்திர முறைப்படி விக்கிரகங்களை வணங்கிவருவது;யாகங்கள்-யக்ஞ்சங்கள் செய்வது;கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடுவது(அல்லது கொண்டாட பணம் செலவழிப்பது அல்லது கொண்டாட ஒருங்கிணைப்புப்பணியில் ஈடுபடுவது)
யோகம் என்பது ஆசனங்கள்,சின் முத்திரைப்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மூலமாக பரமாத்மாவுடன் ஒன்றிணைதல்;மனவளக்கலை போன்ற தியான பயிற்சிகளில் தினமும் ஈடுபட்டு இல்லறத்தானாக இருந்தவாறே ஆன்மீகமுன்னேற்றத்தில் ஈடுபடுதல்;


ஞானம் என்பது நான் யார்? நான் எதற்காகப் பிறந்தேன்? என்னால் இந்த உலகிற்கு என்ன பயன்? என்று தன்னைத் தானே மன விசாரணை மூலம் தன்னை அறிந்து கொள்ள முயலுதல்;அதற்குரிய ஆன்மீக நூல்களைத் தேடி தேடி வாசித்தல்;வாசித்து தகுந்த ஆன்மீக குருவைக் கண்டறிதல்;பிறகு அந்த ஆன்மீககுருவின் வழிகாட்டுதலின் படி நமது ஞான நிலையை உயர்த்த முயற்சி செய்தல்;


இவைகள் அனைத்தையும் விடவும் மிகவும் எளிமையானது பக்தி மார்க்கம் ஆகும்;மேலே கூறப்பட்டிருக்கும் சரியை-கிரியை- யோகம்-ஞானம் என்பவைகளுக்கு சில விதிமுறைகள் உண்டு;ஆனால்,பக்திக்கு இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது;அவரவர் மனதுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி உணர்ச்சி பூர்வமாக செய்வது தான் பக்தி.
பக்திக்குரிய சில அடையாளங்களைப் பார்ப்போம்:வீட்டிலேயே தினசரி ஏதாவது ஒரு இறைவழிபாட்டுப் பாடலைப் பாடுதல்;தினமும் கோவிலுக்குச் செல்லுதல்;முளைப்பாரி எடுத்தல்,அலகு குத்துதல், பூக்குழி என்ற அக்னிகுண்டம் இறங்குதல், பலி கொடுத்தல்,மொட்டை அடிப்பதும் காது குத்துவதும்,காவடி எடுத்தல், வேஷம் போட்டுக் கொண்டு ஆடுதல்,பாத யாத்திரை செல்வது, விரதம் வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் அல்லது வருடம் தோறும் இருந்து வருவது;

ஒரு குழு அமைத்து மாதம் ஒரு சிவாலயத்தைச் சுத்தப்படுத்துதல்(உழவாரப் பணி); அல்லது ஒரு குழு அமைத்து பாழடைந்த சிவாலயத்தை தேடிக் கண்டுபிடித்து அதை புனர்நிர்மாணம் செய்து அதை நிர்வாகிக்க நிரந்தரமான ஒரு பொறுப்பான பக்தர்கள் அமைப்பை உருவாக்குதல்;சிவ மந்திரங்களை புத்தகமாகவோ துண்டறிக்கையாகவோ அச்சடித்து கோவில் விழாக்களில் விநியோகித்தல்;மாதம் தோறும் வரும் அமாவாசை அல்லது பவுர்ணமி நாட்களில் உள்ளூரில் இருக்கும் சிவாலயம் அல்லது சிவசமாதியில் அன்னதானம் செய்தல்; அண்ணாமலைக்குச் சென்று (அல்லது சதுரகிரிக்குச் சென்று)கிரிவலப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ருத்ராட்ச தானம் செய்தல்,சாதுக்களுக்கு காவி வேட்டி துண்டு தானம் செய்தல்,கிரிவலத்தின் பெருமைகளை துண்டறிக்கையாக அச்சடித்து விநியோகித்தல், இளைஞர் சங்கங்கள்- ஆன்மீக அமைப்புகளுக்குச் சென்று பைரவரின் பெருமைகளை ஆன்மீக சொற்பொழிவு மூலமாக பரப்புதல்,இணையத்தின் மூலமாக(முகநூல்,வலைப்பூ,மின் அஞ்சல் குழுக்கள்) ஆன்மீக வழிபாட்டுமுறைகளைப்பரப்புதல்;


என்ன கஷ்டம் வந்தாலும்,என்ன பெருமை வந்தாலும் என்னால் தான் வந்தது என்றோ அல்லது உடன் இருப்பவர்களால் வந்தது என்றோ கருதாமல் எல்லாம் நாம் வழிபடும் குலதெய்வமே காரணம் என்றோ அல்லது பைரவரே கதி என்றோ சரணாகதிப்படி நினைத்துக் கொள்வது; மதம் மாறிச் செல்பவர்களை பக்தியின் பெருமைகளைச் சொல்லி மதம் மாறாமல் தடுப்பது; இந்து தர்மத்துக்கு எதிரான நாத்திகர்களிடம் பேசிப்பழகி அவர்களை ஆத்திகர்களாக(பக்தியுள்ளவர்களாக) மாற்றுவது; இந்து தர்மத்துக்கு எதிரானவர்களின் அரசியல் நடிப்பை பற்றி நமது நட்பு வட்டத்தில் விளக்கிப் புரியவைப்பது; அட்டவீரட்டானங்களின் பெருமைகளை சிறு புத்தகமாக அச்சடித்து தேய்பிறை அஷ்டமி நாட்களில் உள்ளூர் சிவாலயத்தில் நடைபெறும் பைரவ அபிஷேக நேரத்தில் இலவசமாக வெளியிடுவது;பதிகங்களை சிறு புத்தகமாக அச்சடித்து சனிப்பிரதோஷ நாட்களில் வெளியிடுவது;

ஆன்மீக வெளியீடுகள்,ஆன்மீக மாத இதழ்கள்,பக்தி வெளியீடுகள்,தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் ஆன்மீக இணைப்பு புத்தகங்களில் ஒரே ஒரு பக்கத்தை ஸ்கேன் செய்து போட்டோ அப்லோடிங் வெப்சைட்டில் அப்லோடு செய்வது;தினமும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை எழுதுவது;இதை நமது நட்பு வட்டத்தில் தினமும் எழுத வைப்பது(இதை ஜோதிடர்களால் மட்டுமே செய்ய முடியும்);108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அண்ணாமலை கிரிவலம் செல்வது; 108 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீகாலபைரவப் பெருமானை அவர் சன்னதியில் சென்று வழிபடுவது;108 தேய்பிறை அஷ்டமிகளுக்கு அந்த நாட்களில் வரும் ராகு காலத்தில் பைரவ சஷ்டிக்கவசம் பாடுவது; நாமே ராகத்துடன் ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியை நமது செல்போன் மூலமாக பதிவு செய்து நமது வீட்டில் தினமும் அதிகாலையில் ஒலிபரப்பு செய்வது; நாமே தகுந்த பாடகர்/பாடகி மூலமாக ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியை தகுந்த வாத்தியங்களுடன் பாட வைத்து அதை இணையத்தில் பரப்புவது;நாமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றியைப் பாடி நமது வீட்டில் தினமும் ஒலிபரப்புவது;யூட்யூப் மூலமாக சில வீடியோ பின்னணியுடன் ஒளிபரப்புவது;

சரியை-கிரியை-யோகம்-ஞானம் இவைகள் ஆன்மீகத்தில் ஓரளவு முன்னேறியவர்களுக்கு சரிப்பட்டுவரும்;நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு பக்தி மார்க்கமே போதுமானது;நாம் இவைகளில் ஏதாவது ஒன்றைச் செய்யத் துவங்கும்போது எல்லோரும் வந்து பாராட்டுவார்கள் என்று நினைத்துவிடக்  கூடாது;கிண்டலும் கேலியும் தான் முதலில் வரும்;பிறகு நம்மை இதைச் செய்ய விடாமல் தடுக்கவே பலர் இருப்பார்கள்;ஒருவேளை பாராட்டினால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது;மனித மனம் பாராட்டுக்கு ஏங்கும்;அதுவும் கூட நம்மை பக்தி மார்க்கத்தில் முன்னேற விடாமல் தடுக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்;

பலர் ‘நான் இந்த சித்தரை சந்தித்தேன்;’ ‘அந்த சித்தரிடம் அடிக்கடி பேசுவேன்’ என்று சொல்வதைக் கேட்டுவருவீர்கள்;நிஜத்தில் அப்படி யாராவது ஒருவர் ஒரு சித்தரிடம் அடிக்கடி பேசுபவராக இருந்தால் அவர் எவரிடமும் தன்னைப் பற்றி இப்படி தம்பட்டம் அடிக்கவே மாட்டார்;பரம ரகசியமாக வைத்துக் கொள்வார்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

2 comments:

 1. வணக்கம்


  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


  அறிமுகப்படுத்தியவர்-காவிய கவி


  பார்வையிட முகவரி-வலைச்சரம்


  அறிமுகம்செய்த திகதி-24.07.2014  -நன்றி-

  -அன்புடன்-

  -ரூபன்-

  ReplyDelete
 2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

  வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

  ReplyDelete