Friday, December 2, 2011

ராமருக்கு சத்திய வாக்கு தந்த பொய் சொல்லா மெய்யர்

Posted On Dec 03,2011,By Muthukumar


நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள சத்யவாஹீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. ஒருமுறை ஸ்ரீராமருக்கு சத்திய வாக்கு தந்து, அதை நிறைவேற்றிய காரணத்தால் "பொய் சொல்லா மெய்யர்'' என்றும் அழைக்கப்படுகிறார்.
ராஜகோபுர சிறப்பு
156 அடி கொண்டது இக்கோவில் ராஜகோபுரம். காண்போர் விழிகளை ஆச்சரியத்தின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் இக்கோபுரம் 9 அடுக்குகளைக் கொண்டது. இதன் உச்சியில் 9 கலசங்களும், பெரிய யாழிகளும் உள்ளன. ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ள கோபுரம் பெயருக்கு ஏற்றவாறு ராஜகம்பீரத்துடன் காட்சியளித்து வருகிறது.
கோபுரத்தின் உட்பகுதியில், புராண இதிகாச கதைகளை விளக்கும் படங்கள், இறைவனின் திருவிளையாடல் படங்கள் பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இந்த பழங்கால ஓவியங்கள், எக் காலத்தாலும் அழியாத கலர் பூச்சுக்களால் வரையப்பட்டுள்ளது சிறப்புமிக்கது.
இக்கோபுரத்தின் நிழல் கீழே விழாதவாறு அமைக்கப்பட்டுள்ளது அற்புத தொழில்நுட்பம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சத்யவாஹீஸ்வரர் - கோமதி அம்மன்
தல வரலாறு
கி.பி.11-ம் நூற்றாண்டில் களக்காட்டை தலைநகரமாகக் கொண்டு நல்லாட்சி நடத்தி வந்த வீரமார்த்தாண்ட சேரர் என்ற மன்னன், காண்போர் வியக்கும் வண்ணம் இக்கோவிலை கம்பீரத்துடன் கட்டியுள்ளார். இக்கோவில் கட்டிய காலத்தில் தான், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயமும் கட்டப்பட்டதாக சில தகவல்கள் சொல்கின்றன.
வீரமார்த்தாண்ட சேர மன்னர், திருப்புடைமருதூர் என்ற தலத்திலும் ஒரு கோவில் அமைத்து, குறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் களக்காடு அரண்மனையில் இருந்து, குதிரையில் திருப்புடை மருதூர் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்புவாராம்.
இப்படி ஒரு நாள் செல்லும்பொழுது, களக்காட்டில் ஓடும் (இப்போதும் இந்த ஆறு இங்கே பாய்கிறது) பச்சையாற்றில் அளவிற்கு அதிகமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், ஆற்றைக் கடந்து, திருப்புடைமருதூருக்கு சாமி தரிசனத்திற்கு செல்ல முடியவில்லை. `இன்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் போய்விட்டதே...' என்று மன்னர் வருந்தினார்.
அப்போது, `கவலைப்படாதே! இங்குள்ள (களக்காடு) புன்னை மரத்தடியில் நாம் இருக்கிறோம். அங்கு எமக்கு ஒரு கோவில் அமைத்து வழிபடலாம்' என்று அசிரீரி கேட்டதாம்.
அதன்பிறகே அந்த லிங்கத்தைக் கண்டுபிடித்து அங்கே யாவரும், மூவரும், தேவரும் போற்றுகின்ற ஒரு கோவிலைக் கட்டினார் மன்னர் வீரமார்த்தாண்ட சேரர். அந்தக் கோவில்தான் களக்காடு ஸ்ரீசத்யவாஹீஸ்வரர் கோவில்.
ஸ்ரீராமன் வழிபட்ட லிங்கம்
இங்குள்ள புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்த லிங்கம் தனிப்பெருமை வாய்ந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தனிப்பெரும் தத்துவத்தை நிலைநாட்ட உலகில் அவதரித்த அலங்காரப்பிரியன், அடியார்க்கு இனியன், அந்தரங்கம் அறிந்திட்ட ரெங்கன், நான்மறை வேதங்கள் போற்றிடும் நாராயணன், மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமர், சீதையைத்தேà ��ி அலைந்தபோது களக்காடு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டார்.
அப்போது `சீதை கிடைப்பாள்' என்று சத்யவாக்கு கிடைத்தது. அதன்படி சீதையை மீட்ட ராமர், மீண்டும் சீதையுடன் வந்து, அந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்.
ராமருக்கு சத்யவாக்கு கொடுத்ததால், அந்த லிங்கமே சத்யாஹீஸ்வரர் என்று பெயர் பெற்றது. "பொய் சொல்லா மெய்யர்'' என்ற பெயர், இந்த சிவனுக்கு உண்டு!
அந்த லிங்கத்தை வைத்துதான், வீரமார்த்தாண்ட மகாராஜா இக்கோவிலை கட்டினார். இந்த தகவல்கள் `களந்தைப்புராணம்' என்று நூலில் காணப்படுகின்றன.
ராஜகோபுரத்தின் கம்பீரத் தோற்றம்
ஆலய அமைப்பு
கோவிலுக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது ராஜகோபுரம்தான். அதனையடுத்து இடதுபக்கம் ஒரு பொற்றாமரைக் குளமும், வலது பக்கம் மீனாட்சி சொக்கநாதர் சன்னதிகளும் உள்ளன. 631 அடி நீளமும், 293 அடி அகலமும் கொண்டதாகத் திகழும் இக்கோவில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ராஜகோபுரம் தவிர மேலும் 4 கோபுரங்கள் கோவிலில் உள்ளன. இக்கோவில் அபிஷேகப்பிரியரான சுவாமி, சத்யவாஹீஸ்வரராகவும், அம்பாள் கோமதி அம்மையாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்கள்.
இப்பகுதி பக்தர்களால் `பெரிய கோவில்' என்று செல்லமாக அழைக்கப்படும் இக்கோவிலின் உட்பகுதியில் ஸ்ரீசத்யவாஹீஸ்வரர், கோமதி அம்மன் சன்னதிகள் தவிர, விநாயகர், ஸ்ரீநவநீத கிருஷ்ணர், அய்யப்பன், துர்க்கையம்மன், ஜூரதேவர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கஜலட்சுமி, சந்தன நடராஜர், அன்னலட்சுமி, சூரியன், சந்திரன், அதிசய சித ்ர குப்தர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
தமிழகத்தில் விரல்விட்டு சொல்லக்கூடிய சில முக்கியமான கோவில்களில் மட்டுமே 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த களக்காட்டு கோவிலிலும் 63 நாயன்மார்களுக்கு தனிசன்னதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைவிடம்
நாகர்கோவில் பாபாநாசம் செல்லும் பாதையில் களக்காடு அமைந்துள்ளது. திருநெல்வேலி பஸ் நிலையத்தில் இருந்து இங்கு செல்ல பஸ்கள் இயக்கப்படுகின்றன. நான்குநேரியிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் களக்காடு அமைந்துள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

No comments:

Post a Comment