பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கன்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தோ என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் -
எனப் பக்திப் பரவச சிலிர்ப்புடன் வணங்கப்படும் பெருமைக்குரிய
சிங்கப்பூர் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வணங்கினோம்.
சிங்கப்பூர் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வணங்கினோம்.
தாய்நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில்
கட்டி, தங்களின் கலாச்சாரம்,மதம்,மொழி ஆகிவற்றை மறவாது ஒழுகி நிற்கத்
துடித்த காலம்.1800 நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ நிவாச பெருமாள் ஆலயம் தோற்றம் கண்டது
1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்றது. இராஜ கோபுரம்,பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ள கோவில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
நரசிங்கப் பெருமாள் ஆலயமாக ஆரம்பித்த கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயமாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஒத்த திருவுருவத்தைக் கோவிலில் மூலவராக வைக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வளாகத்திலேயே கோவிந்தசாமி பிள்ளை அவர்களால்
ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் முதல் அதிபர்
இஞ்சே யூசோப் பின் இஸ்ஸாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கல்யாண
மண்டபம் திருமணங்கள், கூட்டங்கள் இன்னும் பல்வேறு சமய சமூக நிகழ்ச்சிகளை
நடத்துவதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் 1966-ம் ஆண்டு புதுப்பித்து கட்டப்பட்டுக்
கும்பாபிஷேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்கு இராஜ கோபுரம் கட்டி 1975-ம் ஆண்டு
கும்பாபிஷேத்தைச் சிறப்பாக நடத்த வைணவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற அலங்கார
பட்டர் தமிழகத்திலிருந்து வந்து நடத்தினார்.
41 நாட்கள் மண்டலாபிகஷேகத்தில் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருமதி. எம்.எஸ். சுப்புலெட்சுமி, புலவர் கீரன் அவர்களும் வருகை புரிந்தனர்.
1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள்
ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு
வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது.
கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள் எழிலுடன் காட்சியளிக்கிறார்கள். சன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவ திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
கொடி மரம் இழைக்கப்பட்டு
இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது.
காரைக்குடியில் உள்ள சிறந்த நிபுணர்களைக் கொண்டு நுட்பமான
வேலைப்பாடுகளுடன் இராஜகோபுரத்திற்கான கதவு எழிலாக செய்யப்பட்டுள்ளது.
LORD SAKKARATH AZHVAAR
புரட்டாசி சனி:- புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். ஏழுமலை
வெங்கடாசலபதி இந்த புரட்டாசி மாதத்தில்தான் மக்களை நெறிபடுத்தியதாகக்
கூறப்படுகிறது. சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம். அன்று கோயிலில் அதிக
கூட்டமிருக்கும். புரட்டாசி சனியில் அன்னதானம் செய்யும் வழக்கம் பெருமாள்
கோயிலில் 1900 -களின் தொடக்கத்திலிருந்தே உள்ளதாக வாய்மொழி வரலாறு உண்டு.
இன்று வரை புரட்டாசி சனியில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மற்றொரு முக்கிய விழா
வைகுண்ட ஏகாதசி. அன்றிரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்துப் பெருமாளை
வழிபடுவது வழக்கம். மறுநாள் காலை சொர்க்கவாசல் திறக்கப்படும்.சொர்க்கவாசல்
திறந்து தரிசனம் செய்த பிறகே பக்தர்கள் தங்கள் விரத்தை முடிப்பார்கள்.இவ்விழா 1900 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து அவர்களுடைய துன்பங்களை நீக்கும் கற்பகத் தருவாக விளங்குகிறார்
சிங்கப்பூர் திருமலை திருவேங்கடமுடையான்.
No comments:
Post a Comment