Tuesday, July 17, 2012

இப்போதும் செய்யலாம் அசுவமேதம்!

Posted On July 18,2012,By Muthukumar
அசுவமேதம் என்ற யாகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுவதற்காக இதை செய்வதுண்டு. "ஸ்ரீஹயமேத ஸமர்ச்சிதா' என்று சமஸ்கிருதத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு, "அசுவமேதத்தால் வழிபடப்படுபவள்' என பொருள். இன்றைய காலக் கட்டத்தில், இதை முறையாக எப்படி செய்ய வேண்டும் என, ஒரு சிலர் வேண்டுமானால் அறிந்திருக்கலாம். அதற்குரிய பணவசதி எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆனால், அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம் உலகில் இருக்கிறது. அதுதான் மரணமடைந் தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது.
மரணமடைந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக, அனாதைகளின் உடலை முறைப்படி அடக்கம் செய்ய உதவினால், அது அசுவ மேதத்துக்கு சமமான பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். பணம் உள்ளவர்கள் தாராள மாக கொடுத்து உதவலாம். பலம் உள்ளவர்கள், பிணத்தை தூக்குவது முதலான கைங்கர் யங்களைச் செய்யலாம். அது மட்டுமின்றி, நாம் யாருடைய உடலை இறைவனிடம் ஒப்படைத்தோமோ, அவர்களை நம் சகோதரர்களாக, சகோதரிகளாக, பெற்றவர்களாக பாவித்து, அவர்களுக்காக ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று புனித நதிகளில் நீராடி, கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி வரலாம். அவர்களின் பெயர் தெரிந்தால், அவர்களுக்காக தர்ப்பணம் கூட செய்யலாம்.
ராமபிரானை எடுத்துக் கொள்ளுங்கள். யாரோ ஒரு ஜடாயு, அதிலும் பறவை. அது இறந்து போனதும், அதன் இறுதிச்சடங்கை ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து செய்தார். வாலியை அவர் கொன்றதும், அங்கதனை அழைத்து தகனம் செய்ய உத்தரவிட்டார். ராவணன் அழிந்ததும், விபீஷணனை வைத்து இறுதிச்சடங்கு செய்வித்தார். தன் மனைவியைக் கடத்திச் சென்றவன் என்ற நிலையிலும் கூட, அவனது உடலை, காக்கை, கழுகுக்கு போடாமல், முறையான இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தார்.
நம் உறவினர் யார் இறந்தாலும், அதற்கு போகாமல் இருப்பதும், அங்கே போய் சும்மா இருப்பதும் தவறு. அந்த உறவினர் வாழ்ந்த காலம் வரை நமக்கு பரம எதிரியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றதும், இறைவனால் அருளப்பட்ட அந்த உடல் புனிதமானதாகி விடுகிறது. அதை பத்திரமாக அக்னி மூலம் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
கவுரவர்கள், கிருஷ்ணருக்கு எதிரிகள் என்றாலும், அவர்களின் இறப்புக்குப் பின், திருதராஷ்டிரனையும், பாண்டவர்களையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்துள்ள தகவலை, மகாபாரதம் மூலம் அறிகிறோம். சிலர், பெற்றோர் தங்களுக்கு சொத்து எழுதி வைக்கவில்லை என்ற காரணம் காட்டி, கோபத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால், மகாபாரதத்தில் கண்ணன் நிகழ்த்திய இந்த நிகழ்வின் மூலம், மறைந்த எதிரிகளுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஒருவன், தான் செய்த புண்ணியத்தால் பிரம்மலோகம், தேவலோகத்துக்கு போனால், அங்கே இன்பங்களை அனுபவித்த பின், மீண்டும் பூலோகம் வந்து பிறப்பெடுத்தாக வேண்டும். ஆனால், அனாதை பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவன், நேராக அம்பாளின் லோகத்துக்கு போகிறான். அவளது திருவடிகளை காண்பவன், மீண்டும் இங்கே வர வேண்டும் என்பதில்லை.
காசி மன்னன் அரிச்சந்திரன், தன் கஷ்ட காலத்தில் செய்தது சுடுகாட்டுப் பணி. இதன் விளைவாக, இறந்து போன தன் மகன் லோகிதாசனைத் திரும்பப் பெற்றான். பிரிந்த மனைவி திரும்பினாள். இழந்த அரசு திரும்பக் கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக, அவன் சிவபார்வதி தரிசனத்தையே பெற்றான். இந்தாண்டு, ஆடி அமாவாசைக்கு தவறாமல் தீர்த்தக் கரை களுக்குச் சென்று, அவரவர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வர வேண்டும். அனாதைகள், ஏழைகள் இறந்தால் அவர்களது இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த வேண்டும். இதன் மூலம், அசுவமேத யாகம் செய்த பலனை அடையலாம். அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

No comments:

Post a Comment