Friday, January 27, 2012

திருமணத்தடை நீக்கும் கல்யாண சுந்தரேசுவரர்

Posted On Jan 28,2012,By Muthukumar


தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருநல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் ஆசிரியர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், ராமலிங்கஅடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த மூலலிங்கத்தின் அருட்குறி(பாணம்) எந்த பொருளால் ஆனது என்று கூற இயலாத நிலையில் தானே முளைத்ததாக காணப்படுகிறது. இன்றும் இங்குள்ள இறைவன் தினமும் 5 முறை நிறம் மாறி மாறி காட்சி அளிக்கிறார்.
ஐந்து வகை நிறத்துடன் இறைவன் தோன்றுவதால் `பஞ்சவர்ணேசுவரர்' என்றும், அமர்நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் `ஆண்டார்' எனவும், அகத்தியருக்கு தன் திருமண கோலத்தை காட்டி அருளியமையால் `கல்யாண சுந்தரர்' என்றும், மிகுந்த பேரழகுடன் விளங்குவதால் `சுந்தரநாதன்', `சவுந்தரநாயகர்' என்றும் பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள சிவலிங்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு பானங்கள் உள்ள அமைப்பை தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள்
இத்தலத்தில் தான் அப்பர் சுவாமிகளுக்கு
சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது.
திருமண கோலத்தில் இறைவன் காட்சி அளிப்பதால் திருமணத் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனையும், இறைவியையும் திருமண பாக்கியம் வேண்டி 2 மலர் மாலைகளை சூட வேண்டும். பின்னர் அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், பாபநாசத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் திருநல்லூர் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment