இறைவன்,
நமக்கு உயிரையும், உறுப்புகளையும் கொடுத்து, பூமிக்கு அனுப்பி வைத்தான்.
நம், முன் வினைக்கேற்ப பலன்களை இங்கே அனுபவிக்கிறோம். இந்த ஜென்மத்துக்கான
காலம் முடிந்ததும், மீண்டும் வந்த இடத்திற்கே திரும்புகிறோம்.
மனிதன் பிறந்தது முதல், மரணமடைவது வரை, 40 சம்ஸ்காரங்கள் இருப்பதாக,
சாஸ்திரங்கள் சொல்கின்றன. சம்ஸ்காரம் என்றால், "நன்றாகச் செய்வது...' எனப்
பொருள். இந்த சம்ஸ்காரங்களில் படித்தல், திருமணம் செய்தல் உள்ளிட்டவை
அடங்கும். ஜீவனை, வயதுக்கேற்ப பக்குவம் செய்ய ஏற்பட்டவையே சம்ஸ்காரங்கள்.
மரணத்திற்கு பின், "பிரேத சம்ஸ்காரம்' என்பதையும் வைத்துள்ளனர். இந்த
சம்ஸ்காரத்தை, ஒரு யாகத்துக்கு சமமாக ஒப்பிடுகிறது சாஸ்திரம்.
ஒருவர் இறந்ததும், யார் ஒருவர் முன்னின்று காரியங்களைக் கவனிக்கிறாரோ,
அவரை, தேவர்களில் ஒருவராகக் கருத இடமிருக்கிறது. காரியம் செய்பவருக்கே,
இப்படி ஒரு மதிப்பு என்றால், இறந்து போனவரின் குழந்தைகளுக்கோ, மற்ற
உறவுகளுக்கோ, எவ்வளவு தூரம் பொறுப்பிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க
வேண்டும். "இறந்தவர் தான், உடனடியாக மறுபிறப்பெடுத்து விடுகிறார்
என்கின்றனரே... அப்படியானால், எதற்கு இந்த சடங்கெல்லாம்...' என்று கேள்வி
எழுப்புவோரும் உண்டு.
இந்த உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. உடல் என்பது, மனதால்
இயக்கப்படும் ஒரு கருவி. மனம் நல்லதைச் சொன்னால், உடல் உறுப்புகள் நல்லதையே
செய்யும். கால், கோவிலுக்கு போவதற்கும்; வாய், இறைவனின் புகழை பேசவோ,
பாடவோ செய்வதற்கும்; கண், சுவாமி தரிசனம் செய்வதற்கும் என, ஒருவன்
நினைத்தால், அந்த உறுப்புகள், தீயசெயல்களின் பக்கம் திரும்புவதில்லை.
இதனால் தான், "காயமே கோவிலாக' என்றார் திருநாவுக்கரசர். திருமூலர்
திருமந்திரத்தில், "உடம்பை ஓம்பலானேன்' (பாதுகாக்கிறேன்) என்கிறார். இந்த
உடலுக்குள்ளேயே, "ஜீவன்' இருக்கிறது. அதாவது, சிவம் இருக்கிறது
என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே, இறைவன் கொடுத்த இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும், அதை தக்க
மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும். பரமேஸ்வரனுக்கே அதை ஆஹுதி செய்ய
வேண்டும். சிவன், சுடலை வடிவில் சுடுகாட்டில் இருப்பது கூட, இந்த உடம்பை
சாம்பலாக்கி பெற்றுக் கொள்வதற்காகத் தான்.
சிலர், அனாதைகளாக இறக்கலாம். சாலையில், யாராவது இறந்து கிடந்தால் அவருக்கு,
நம் உறவுகளுக்கு செய்வது போல, கிரியைகள் செய்து, அனுப்பி வைத்தால், அது
அஸ்வமேத யாகத்துக்கு ஒப்பானது என்கிறது சாஸ்திரம்.
"அநாத ப்ரேத சம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத்...' என்ற ஸ்லோகமே இருக்கிறது.
இப்படி, ஒரு பரோபகாரம் செய்பவர்களுக்கு, அதுவரை செய்த பாவங்கள் கூட
தீர்ந்து விடும்.
இறந்த முன்னோருக்கு சிரார்த்தம், தர்ப்பணம் செய்வது மிகவும் எளிதானது.
அவரவர் இறந்த திதி மற்றும் அமாவாசை நாட்களில், தீர்த்தக்கரைகளுக்கு சென்று,
எள்ளும், நீரும் இறைத்தாலே, அது, பிதுர் தேவதைகள் மூலம்,
சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடைந்து விடும். குறிப்பாக, தை அமாவாசை, ஆடி
அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகியவை, பிதுர்க்கடன் செய்ய, மிகச்சிறந்த
நாட்கள். கங்கை, யமுனைக்கு போக வசதியிருந்தால் போகலாம்; இல்லாவிட்டால்,
அவரவர் ஊரிலுள்ள ஆறு, குளம், கிணறுகளில் இதைச் செய்தாலே போதுமானது.
ஆடி அமாவாசையன்று, பூமிக்கு வருகின்றனர் பிதுர்கள்; இதை, தட்சிணாயண காலம்
என்பர். இந்த காலத்தில், தேவர்கள் ஓய்வெடுப்பதாகக் கருதப்படுவதால்,
முன்னோர், நம்மைப் பாதுகாக்க வருகின்றனர். உத்தராயண காலம் எனப்படும், தை
மாத அமாவாசையில், இவர்கள் தங்கள் இருப்பிடமான, பிதுர்லோகத்துக்கு
திரும்புகின்றனர். அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் நாம் தர்ப்பணம்
செய்தாக வேண்டும். சிலருக்கு தீராத சாபம், கடுமையான வேதனை இருக்கும்.
குடும்பத்தில் நிம்மதி இருக்காது. அதற்கு முன்னோர் சாபம் தான் காரணம்.
இவர்கள், ஒருமுறை யாவது ராமேஸ்வரம் சென்று, தர்ப்பணம் செய்து, ராமநாதரை
வணங்கி வந்தால், சாபம் தீரும் என்பது ஐதீகம்.
தை அமாவாசை, அம்பாளுக்கும் உகந்தது. அமாவாசை திதியை, பவுர்ணமி என்று
மாற்றிச் சொன்ன, அபிராமி பட்டரை காப்பாற்ற, அம்பாள் தன் காதணியை, வானில்
வீசி, நிலவாக்கிய நாள், இன்று தான். இந்த புண்ணிய நாளில், நம்மை வாழ வைத்த
தெய்வங்களை நினைவு கூர்வோம்.
No comments:
Post a Comment