Thursday, January 19, 2012

மனதை செம்மைப்படுத்தும் ஓம் என்னும் மந்திரம்




2012 ம் ஆண்டில் நிச்சயமாக எதையாவது நல்ல விடயத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று
தீர்மானிப்போம்.  2011 ல் நம்மை பீடித்திருக்கும் சில கெட்ட பழக்கங்களை கைவிட்டு விடுவது என்று உறுதி கொள்வோம். ஆனால், அது அவ்வளவு எளிதாக நடந்து விடுவதல்ல.
அது இருந்து விட்டு போகட்டும். இப்படி ஏதாவது ஒன்றை கைவிட சிந்திப்பதை விட புதிதாக ஏதாவது ஒரு நல்ல விடயத்தை கடைப்பிடிக்கலாம் என்ற உறுதி கொள்வது சிறப்பு. அதற்கு எளிதானதும், ஆனால் வாழ்வில் மிகவும் அதிசயத்தக்க மாற்றங்களை நிகழ்த்துவதுமான ஒரு பழக்கத்தை இங்கு சொல்ல எண்ணியதால் இந்த தொடரில் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளேன். இந்த பயிற்சி நிச்சயம் உங்களது வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.

'மனமது செம்மையானால் மந்திரமது ஜெபிக்க வேண்டாம் என்பது வாக்கு. 'இந்த உலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளும், நிகழ்வுகளும் சில தனிநபர்களால் சாதிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகளுக்கு எல்லாம் ஒரே காரணம் மட்டுமே இருக்க முடியும். அது மனதை ஒரு புள்ளியில் நிலை நிறுத்தியது தான். இந்த உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் புவிஈர்ப்பு விசை இருக்கிறது. எந்த பொருளும் எவ்வளவு வேகத்தில் பறக்கவிடப்பட்டாலும் அது தனது எல்லையை எட்ட குறிப்பிட்ட காலவரையறையை எடுத்துக் கொள்கிறது. ஆனால் இப்படி எந்த காலவரையறையும் இல்லாமல் ஒரு விநாடிக்கும் குறைந்த பட்ச கால அளவில் பல லட்சம் மைல் தொலைவுக்கு பயணிக்க முடிவது மனதால் மட்டுமே. மனதின் சூட்சுமத்தை இன்னும் எந்த விஞ்ஞானியாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில், 'முன்ஜென்மம்' என்ற ஒரு தொடர் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதில் பிரபலங்களை ஆழ்நிலை துயிலில் ஆழ்த்தி அவர்களின் முன்ஜென்மங்கள் குறித்து தூக்க நிலையில் அவர்களிடம் வாக்குமூலம் வாங்குகிறார்கள். ஒருவரின் மனதை எளிதாக மற்றொருவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஆழ்நிலை தூக்கம் பற்றி மறைமலை அடிகளும் சிறப்பான நூல்களை எழுதி தமிழரிடத்தில் இதுபற்றிய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியவர் என்பதை மறக்கமுடியாது. அவரது மெஸ்மரிச ஹிப்னாடிச பயிற்சி நூல் என்ற நூலில் " அறியாத விலங்கினங்களைக் காட்டிலும் மக்கள் உயர்ந்தவராகல் வேண்டின், அவ்வுயர்வு பல நன்முயற்சிகளில் கருத்தை முனைக்க நிறுத்தி ஆவலோடு அவற்றை செய்யும் வழியாக அல்லாமல் வேறெவ்வழியாலும் பெறுதல் இயலாது. மற்ற எத்தகைய முயற்சி செய்தாலும் அதன் கண் நினைவை முனைக்க நிறுத்தி அதனை ஆவலோடு செய்யக் கற்றுக் கொண்டவன் கல்வியில் வல்லவனாகலாம், கைத்தொழிலில் திறமைமிக்கலாம், அரசியலில் முதன்மை பெறலாம்.
அரும்பெரும் செல்வத்தை அடையலாம், நோயின்றி வாழலாம், நூற்றாண்டு உயிர் பிழைக்கலாம், இன்னும் தனக்கும், தன்னைச்சார்ந்தவர்களுக்கும் எவ்வளவோ நன்மைகளை வருவித்துக் கொள்ளலாம்" என்கிறார். இது போல் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து பழக்கும் போது அரிய பல விடயங்கள் நடத்தப்படுகின்றன என்பது தற்போதும் கூட புலனாகிறது.

பொதுவாக மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று பலர் புலம்புவது அடிக்கடி கேட்க முடிகிற ஒன்று. நமக்கு பிடிக்காத ஒன்றை சிந்திக்கவே கூடாது என்று முடிவெடுப்போம். ஆனால் மனது மீண்டும், மீண்டும் எதை மறுக்கிறோமோ அதை நோக்கியே தாவிக்கொண்டிருக்கும். அது தான் மனதின் இயல்பும் கூட. கட்டுப்படுத்த முடியாத மனதை தான் ஒரு புள்ளியை நோக்கி குவிக்க தெரிந்து கொண்டு நமக்கு தேவையானதை மட்டுமே சிந்திக்கும் ஒரு வேலைக்காரராக ஆக்கினோம் என்றால்......எவரையும் வெல்லலாம். எதனையும் ஜெயிக்கலாம் என்கிறார்கள் ஆன்மீக ஞானிகளும், தற்போதைய மனஆய்வாளர்களும் கூட. சித்தர்கள் செய்ததும் அதைத்தான்.

ஒரு சித்தர் பாடலில் 'கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்'  என்று சித்தர் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர்கள் போதித்த மூச்சுபயிற்சி, மனோதத்துவம்,, ரசவாதம், வர்மக்கலை, யோகப்பயிற்சியால் மனிதனுக்கு எல்லாம் இயலும். சித்தர்களின் பெருமைக்கு ஒரு உதாரணம், அஷ்டமாசித்தியாகிய அனிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வம், ஈசத்வம் என்ற எட்டில் அனைத்துமே அடக்கம். மனதை அடக்கிய அவர்களால் அணுவிலும் சிறிய உருவை எடுக்க முடிந்தது. காற்றை விட லேசாகவும் தேவையானால் யானையைக் காட்டிலும் எடையைக் கூட்டிக் கொள்ள முடிந்தது. அவர்களால் அனைவரையும் தங்கள் பால் ஈர்க்கும் ஆற்றலையும், தெய்வீகத்தன்மையையும் பெற்று அசாத்திய கூறுகள் நிரம்பப் பெற்றவர்களாக இருந்தார்கள். கூடு விட்டுக் கூடு பாயும் திறன் பெற்றிருந்தவர்கள் அவர்கள். அடுத்தவர் மனஓட்டங்களையும் அப்படியே படிக்கும் திறன் பெற்றிருந்தார்கள்.

இதற்கு ஒரு கதை வடிவிலான உதாரணத்தை பார்க்கலாம். ஒருவன், சித்தர் ஒருவரை நையாண்டி செய்யும் எண்ணத்துடன் கழுதையின் சிறுநீரைக் கொண்டு வந்து சித்தரிடம் கொடுத்து நோயாளி மிகவும் மோசமான உடல் நிலையுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். இந்த சிறுநீரை சோதித்து அவனுக்கு வந்துள்ள வியாதி என்னவென்று தாங்கள் தான் கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டான். அவன் தந்த சிறுநீரைப் பார்த்த சித்தர் 'அந்த கழுதையை கூட்டி வா' என்றாராம்.

அடுத்தவர் மன எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்வது சாதாரணமா? ஆனால் முடியும் என்பது சித்தர் வாழ்வில் கண்ட உதாரணங்கள். சித்தர்கள் எல்லாம் கடவுளின் நேரடி தூதர்களா? இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் என்பது தான் உண்மை. சித்தர்கள் பலரது வாழ்வும் நாம் சாதாரணமாக மானிடர்களிடத்தில் காணும் இயல்புகள், நடத்தைகள் சார்ந்தாகவே இருந்து பின்னர் அவர்கள் இறைவனின் திருவடியை நோக்கி பயணப்பட்டிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் கண்ட விசிறி சாமியார் ராம் சுரம் குமார் அவர்கள் இதற்கு ஒரு உதாரணம். மனித உடல் இறைவனின் வடிவம். அதை இறைவனின் கோவிலாக மாற்றுவதும், வெறும் கூடாகவே வைத்திருப்பதும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் இதை கோவிலாக மாற்றுவதற்கான எளிதான முறையை சொல்வது தான் நமது நோக்கம். இதற்கு மிகவும் எளிதான வழியாக இருப்பது தான் இறைசிந்தனை. அதாவது மனதை ஆசை,பொறாமை போன்ற எதற்கும் உதவாத எண்ணங்களில் இருந்து மாற்றி இறைவனை தியானிப்பது.

அதற்கு உதவுவது தான் 'ஓம் தியானம்.'சாதாரண மனிதர்கள் எவரும் எளிதாக இதைச் செய்து உடலிலும், மனதிலும் ஏற்படும் வியத்தகு மாற்றங்களை உள்வாங்கலாம். ஆன்மீன ரீதியில் இதனை முக்கியத்துவம் எடுக்க விரும்பாதவர்கள் இந்த தியானத்தை ஒரு எளிய உடற்பயிற்சியாகவும் ஆக்கிக் கொள்ளலாம். அதாவது ஒரு சூட்சுமம் சித்தர்களால் சொல்லப்படுகிறது. 'நிதானமாக சுவாசிப்பது நீண்ட ஆயுளை தரும்'என்பது. இதை இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் கோபப்படும் போது மூச்சு வேகமாக வெளிவருகிறது. உடலின் நுண்ணிய உறுப்புகள் கடும் அதிர்வுக்கு உட்படுகின்றன என்கிறது இன்றைய விஞ்ஞானம். இப்படி உடலின் மிக நுண்ணிய உறுப்புகள் அதிர்வுக்கு ஆட்படும் போது மிக குறைந்த காலத்தில் அவை தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்கின்றன.

ஆனால், நல்ல மனஅமைதி உள்ளவர்கள் வெளிவிடும் மூச்சு என்பது ஒரு சரியான சுருதியில் வெளியாகும் இனிய இசை போல் நிதானமாகவும், ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தன்மையிலும் வெளியேறுகிறது. அப்போது உடலின் நுண்ணிய உறுப்புகள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இயங்குகின்றன. இந்த 'ஓம்'தியானத்தாலும் அப்படிப்பட்ட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சு அமைகிறது. எனவே, ஓம் தியானத்தை இந்த 2012 ஆம் ஆண்டில் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு தொடங்கலாம்.

இந்த பயிற்சி ஒன்றும் பெரிய கடினமான ஒன்றல்ல. மூச்சு பயிற்சி என்பதை பற்றி அனைவருக்கும் தெரியும். மூச்சை உள்ளிழுத்து சற்று நிறுத்தி வெளிவிடுவது . இதை முறைப்படி செய்யும் போது அது பிராணயாமம் என்கிறோம். இதைப்பற்றி முந்தைய தொடர்களில் காணலாம்.
கண் மூடி பத்மாசனத்தில் அமர்ந்து இடது கைப்பெருவிரலால் இடது மூக்கை மூடி வலது நாசியால் மூச்சை உள்ளிழுத்து இடது கை மோதிர விரல் கொண்டு வலது நாசியை மூடி இடது நாசியால் மூச்சை வெளிவிடுவது என்பதை மூச்சு பயிற்சி என்கிறோம். இதில் மூச்சை உள்ளிழுப்பதை பூரகம் என்பார்கள். வெளிவிடுவதை ரேசகம் என்பார்கள். நன்றாக மூச்சு பயிற்சியை கற்றவர்கள் அதன் அடுத்த படியான மூச்சை உள்ளுக்குள் அடக்கி நிறுத்தி வெளிவிடும் பயிற்சியை மேற்கொள்ளலாம். மூச்சை அடக்கும் நிகழ்வை கும்பகம் என்பார்கள். எடுத்த எடுப்பில் மூச்சை அடக்கி வெளிவிடுதல் உடலுக்கு மிகவும் கெடுதலான பலனை தரும் என்பார்கள்.
எனவே, சாதாரண வாழ்வில் இருக்கும் அனைவருக்கும் ஏற்றது ஓம் என்னும் தியான மூச்சு பயிற்சி. அதாவது, ஓம் என்ற ஒலி தான் இந்த மூச்சு பயிற்சியின் சூட்சுமம். மூச்சை முடிகிற வரை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போது மார்பு நன்றாக விரிந்து வர வேண்டும். இப்படி இழுக்கப்பட்ட மூச்சை உள்ளே எக்காரணம் கொண்டு நிறுத்தாமல் மெதுவாக வெளிவிட வேண்டும். அப்படி வெளிவிடும் போது கண்களை மெதுவான நிலையில் மூடியிருந்து வாயைத்திறக்காமல் ஓம் என்ற ஒலியுடன் வெளிவிட வேண்டும்.

இது தான் ஓம் தியான மூச்சு பயிற்சி. ஒவ்வொரு நாளும் மனதை அதன் போக்கிலேயே விட்டு அரை மணி நேர அளவுக்கு அதிகாலையில் தியானத்தில் அமர்ந்திக்க வேண்டும். இந்த அமைதி தியானத்தை முடிக்கும் தருவாயில் ஒரு பத்து நிமிட கால அளவுக்கு இந்த ஓம் தியானத்தை செய்து வாருங்கள். இதன் நன்மையை உணருங்கள். ஒம் தியானத்தால் உடலில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம். அடுத்து தொடர்வோம்.

No comments:

Post a Comment