Posted On March 16,2012,By Muthukumar
முன்னொரு காலத்தில் பாதாள லோகத்தில் இருந்த நாக கன்னிகைகள் பூலோகத்தின் அழகை பார்க்க ஆசைப்பட்டு, அதற்காக நாகராஜனிடம் அனுமதி கேட்டனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் நாகராணியிடம் எடுத்து கூறி, நாகராஜனின் அனுமதியுடன் சூரியன் மறைவதற்குள் வந்து விடுகின்றோம் என்று கூறி நாககன்னிகைகள் பூலோகம் வந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி அடிவார அழகில் பூலோக இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அப்போது வெள்ளியங்கிரி மலையின் அழகில் சூரியன் மறைவதை அவர்கள் கவனிக்க மறந்து விட்டனர். வானில் பிரகாசித்த சூரியன் மறைந்து விட்டது. இதை கவனித்த நாககன்னிகைகள் பாதாள லோகத்திற்குள் செல்ல முயன்றனர். வாக்கு தவறியதால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால் நாகராஜனின் கோபத்துக்கு ஆளாகி அவர்கள் நாகதோஷத்துக்கு ஆளானார்கள்.
இதை தொடர்ந்து சாப விமோசனம் பெறுவதற்காக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஓடும் காஞ்சிமாநதியின் கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இவர்களின் பூஜையில் மனம் இரங்கிய சிவபெருமான் அங்கு தோன்றி நாககன்னிகைகளுக்கு பாவவிமோசனம் அளித்து மறைந்தார். அதன் பின்னர்தான் நாககன்னிகைகள் பாதாளலோகம் புறப்பட்டு சென்றனர்.
இந்த அற்புதம் நிகழ்ந்த நாகேசுவரர் கோவில் கோவையில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே கோட்டைக்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும் என்கிறார்கள்.
|
No comments:
Post a Comment