Posted On June 30,2012,By Muthukumar |
நான் சமய மேடைகளில் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன்; நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது என் ஜாதகத்தைப் பற்றியது.
`ஐம்பது வயதுக்கு மேல் நான் ஒரு சாமியாராகவோ அல்லது, அந்தக் குணங்கள் கொண்டவனாகவோ மாறிவிடுவேன்' என்று குறிப்பிட்டதே அது.
அப்படி
ஒருவர் குறிப்பிட்டபோது எனக்கு வயது இருபத்து ஒன்று. இப்போது ஐம்பதைக்
கடந்துவிட்டேன். இந்த முப்பது ஆண்டுக் காலமும் அவர் சொன்னது போலவேதான்
வாழ்க்கை ஓடியிருக்கிறது. இப்போது மனோபாவம் மட்டுமின்றி, உணவு முறை கூட
சாமியார் முறையாகி இருக்கிறது.
எந்தெந்தக்
காரியங்களை நான் பிரியத்தோடு செய்வேனோ, அதையெல்லாம் இறைவன் வெறுக்க
வைத்திருக்கிறான். எவ்வெவற்றை நான் விரும்ப மாட்டேனோ, அவற்றையெல்லாம்
ஏற்றுக் கொள்ளும்படி கட்டளை இட்டிருக்கிறான். உணவில் ஒவ்வொரு பொருளாக
வெறுக்க வைக்கிறான். ஆனால், சிந்தனையில் நிதானத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.
எனக்கு
எதிர்காலம் சொன்னவர், என் கைரேகைகளை மட்டும் தான் பார்த்துச் சொன்னார்.
ரேகை, ஜோசியம், ஜாதகம்-இவை சரியாகப் பார்க்கப்படுமானால், விஞ்ஞானம்
உலகத்தைக் கணிப்பது போலவே இவை வாழ்க்கையைக் கணித்து விடும்.
இறைவனுடைய
படைப்பில் ஒரு கன்றுக்குட்டிக்கும் கூட ஜாதகம் இருக்கிறது. கன்றுக்குட்டி
என்ன, கடவுளுக்கே கூட ஜாதகம் இருக்கிறது. திருப்பதியில் நிற்கும்
பெருமாள்தான் அழகர் கோயிலிலும் நிற்கிறார்.
ஆனால்,
திருப்பதி சமஸ்தானாதிபதி கோடீஸ்வரராகத் திகழ்கிறார்; அழகர் கோயிலில்
பெருமாள் அன்றாடம் தடுமாறுகிறார். இத்தனைக்கும் காலத்தால் திருப்பதிக்கு
முந்தியது அழகர் மலை என்று கருதப்படுகிறது.
கட்டியவன் ஜாதகம் எப்படியோ யார் கண்டது?
எனக்குத்
தெரிந்த நல்ல குடும்பத்திலே பிறந்த அழகான பெண்ணொருத்தி, வசதி இல்லாத ஒரு
அரைப்பைத்தியத்தை மணந்து கொண்டு, இட்லி சுட்டு வியாபாரம் செய்கிறாள்.
பார்த்தால் பொத பொதவென்று இருப்பாள் ஒருத்தி. வீதியில் போகும் விலங்குகள்
கூட அவளை ஏறெடுத்துப் பார்க்க மாட்டா; அவளுக்கு லட்சாதிபதி வீடு; அழகான
மாப்பிள்ளை கிடைத்து விட்டது.
கோயிலுக்கு
ஜாதகம் இருக்கிறது. குருக்களுக்கு ஜாதகம் இருக்கிறது. கோயில்
கட்டியவனுக்கும் ஜாதகம் இருக்கிறது. ஸ்ரீராமனுடைய ஜாதகத்திலும்,
பெண்டாட்டியைப் பறிகொடுக்கும் கட்டம் இருக்கிறது. சீதை பிறக்கும்போதே அவள்
கை ரேகையில், அவள் காட்டுக்குப் போவாள் என்றிருக்கிறது.
ஒரு காரியம் நடைபெறுகிறது என்றால், அதற்கு நாம் காரணமில்லை என்றால், ஏதோ நமக்குத் தெரியாத ஒரு சக்தி தானே காரணம்?
தேர்தல் நடத்துவதும் நடத்தாததும் ஒருவர் கையில் இருந்த போது, அவர் தேர்தல் நடத்துவானேன்? தோல்வியுற்று அவதிப்படுவானேன்?
பெரிய பெரிய சாமர்த்தியசாலிகளையெல்லாம் ஜாதகம் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.
இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்த அதே நேரத்தில் பாகிஸ்தானும் பிரிந்தது.
பாகிஸ்தான்
ஜாதகத்தில் ராணுவ ஆட்சி என்றும், இந்தியாவின் ஜாதகத்தில் கலப்படம்,
குழப்பம் என்றும் இறைவன் அப்பொழுதே எழுதி வைத்திருக்கிறான்.
நினைக்காத ஒன்று நடக்கும்போது அதுவே ஜாதகப் பலன் என்றாகி விடுகிறது.
இது மாதிரி விஷயங்களில் இந்துக்களின் நம்பிக்கை எவ்வளவு அர்த்த புஷ்டி வாய்ந்தது என்பதைக் காண முடிகிறது.
நட்சத்திரங்களைக் கொண்டு, பிறந்த தேதியைக் கொண்டு பலன் சொல்லும் பழக்கம் நாகரிகத்தில் முன்னேறிய மேல்நாட்டுக்காரருக்கும் உண்டு.
அங்கேயும்
நீங்கள் பார்த்தால் மேஷம் ரிஷபத்திற்கு நாம் என்ன படம் போடுகிறோமோ அதே
படங்களைத் தான் ஆங்கிலேயர்களும் போடுகிறார்கள்; ஜெர்மானியர்களும்
போடுகிறார்கள்.
காரணம், இந்த ஜோதிட சாஸ்திரத்துக்கு மூலம் வடமொழி.
விண்ணியல் அறிவும், விஞ்ஞான அறிவும் இந்துக்களிடமிருந்து எழுந்ததே.
சந்திர மண்டலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் இந்துமதம் கூறிற்று; சந்திர கிரணம் பிடிப்பதையும் அதுதான் கூறிற்று.
இன்று செயற்கைக்கோள் பறக்கவிடப்படுகிறது. அதற்கு `ஆரியப்பட்டா' என்று பெயர் வைக்கப்படுகிறது.
இந்த
ஆரியப்பட்டா என்பவர் இந்து ஞானி, விஞ்ஞானி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
கேரளாவில் வாழ்ந்தவர். முதன் முதலில் வான மண்டலத்தைப் பற்றி ஆராய்ச்சி
நடத்தியவர்.
வம்சங்களையே மாற்றி அமைத்த சாணக்கியர், பல காலங்களுக்குப் பொருந்தக் கூடிய ராஜ தந்திரத்தை எழுதினார்.
சில கோயில்களில் பிராகாரச் சுவர்களில் இன்ன காலத்தில் இன்ன காரியம் நடக்கும் என்பதே எழுதப்பட்டிருக்கிறது.
உலக வாழ்க்கையில் இந்துக்கள் தொடாத பகுதிகளே இல்லை.
எத்தனை பகுத்தறிவுகள் பொத்துக் கொண்டு ஓடி வந்தாலும், கடைசியில் எங்கே போகிறோம் என்று தெரியாமலே தான் கண் மூட வேண்டியிருக்கிறது.
அந்த இடத்தைத்தான் இந்துமதம் `ஈஸ்வரன்' என்று அழைக்கிறது.
சொல்லப்போனால், இந்துமதச் சக்கரத்திற்குள்ளே தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது.
இந்து மதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டுதான் மற்ற மதங்கள் உருவாக்கப்பட்டன.
ஜயதேவர், புத்தரைக் கூட ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம் என்கிறார்.
`கிறிஸ்து'
என்ற வார்த்தைக்கும் `கிருஷ்ணன்' என்ற வார்த்தைக்கும் உள்ள பொருத்தம்
பற்றியும், இருவரும், மாட்டுக் கொட்டிலிலே வளர்ந்தவர்கள் என்பது பற்றியும்
ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் ஒரு கட்டுரையில் கூறி இருக்கிறார்கள்.
மலேசியாவின் பெரிய ராணிக்கு, `பரமேஸ்வரி நாச்சியார்' என்று பெயர். ஆனால் அவர் ஒரு முஸ்லிம்.
மலேசியாவிலும், இந்தோனேஷியாவிலும் ஆட்சியை, `பாதுகா' என்றார்கள்.
பரதன் ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டதும், ஆட்சி நடத்தியதும் நமக்கு நினைவிற்கு வருகின்றன.
தாய்லாந்திலும், கம்போடியாவிலும் சகுன நம்பிக்கை, விக்கிரக ஆராதனை, இந்துப் பண்டிகைகள் போன்ற விழாக்கள் ஏராளம்.
மெக்சிகோவில் ஒரு விநாயகர் கோயிலைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அந்நாட்டைப்
பற்றி ஒரு புத்தகம் வெளி வந்திருப்பதாகவும், அதிலே ஆதிவாசிகள் நடனமாடும்
படம் ஒன்று வெளி வந்திருப்பதாகவும், ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள்
கூறுகிறார்கள். அதிலே நடனமாடும் எல்லாப் பெண்களுக்கும் நெற்றியில் ஒரு கண்
வரையப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கடல்
கொள்ளப்பட்ட லெமூரியா கண்டத்தில் எல்லோருக்குமே மூன்று கண்கள் இருப்பதாக
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் தன் ஆராய்ச்சி நூலில்
குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்கப்போனால்
இந்துமதத்தின் தத்துவங்கள் எல்லாமே ஆழமான அர்த்தம் உடையவை என்பது
மட்டுமல்ல; இறை வழிபாடும் சமய சார்பும் முதன் முதலில் உருவாக்கப்பட்டதே
இந்துக்களால் என்று தோன்றுகிறது.
மரத்தடி
கிளி ஜோசியனில் இருந்து, மெக்சிகோ பேராசிரியர் வரை எல்லோரும் நம்புவது,
`எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியது இந்துமதம் ஒன்றே' என்பதைத்தான்.
No comments:
Post a Comment