Posted On Dec 20,2011,By Muthukumar
வாசக
அன்பர்களுக்கு வணக்கம். நாம் இன்று பார்க்க விருப்பது , யுகம் யுகமாக
அன்னை துர்க்கை அருள் பாலிக்கும் ஒரு மகத்தான ஆலயத்தை பற்றி. இந்த ஆலயம்
பற்றி , அரசல் புரசலாக கேள்விப்பட்டு இருந்தாலும், இவ்வளவு மகத்துவம்
வாய்ந்த ஆலயமா என்று உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
ராகு மகாதசை அல்லது ராகு புக்தி நடப்பவர்கள் , இந்த ஆலயம் சென்று அன்னை துர்க்கையை வணங்கி வருதல் , மிக்க நன்மை பயக்கும்...
ஒருமுறை விசுவாமித்திர மகரிஷிக்கும் வசிஷ்டருக்கும் தர்க்கம் ஏற்பட்டது.
‘குன்றனைய சினங்கொள் கோசிக !
பரத கண்டத்து செந்தமிழ் நாட்டில்
சீரிய அம்பலமதனை சாற்றுமின்’ என்று கேட்டுக் கொண்டார், விசுவாமித்திரர்.
புவியில்
மிகவும் புனிதம் வாய்ந்த கண்டம் ஆசியா கண்டம். அதில் பரத கண்டத்தவரே
இறைவனின் அருளாசிக்கு மிகவும் உகந்தவர்கள் என்றும் அறிக. தட்சிண
பாரதத்தில் கீர்த்தி வாய்ந்த எண்ணற்ற தெய்வங்கள் உண்டாயினும்
மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட தலங்களுள் சீரியது,
பட்டீஸ்வரம் என்று வசிஷ்டர் அதற்கு பதில் அளித்தார்.
இங்கு
கோயில் கொண்டிருக்கும் சிவனை தன் கரத்தினால் உருவாக்கியவர் ஸ்ரீராமர்.
ராவணேஸ்வரனை வதம் செய்ததினால் பிரம்மஹத்தி பிரதானமாகக் கொண்ட சில
தோஷங்களினால் பீடிக்கப்பட்டார். ராமேஸ்வரத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை
செய்தார். பிறகு வேதாரண்யத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
நிறைவாக, பட்டீஸ்வரத்துக்கு வந்து அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
இதே தலத்தில் தன் அம்பினால், நிலத்தைப் பொத்து தீர்த்தம் உருவாக்கினார்.
அந்த தீர்த்தத்தை அந்த லிங்கத்திற்கு அனுதினமும் அபிஷேகம் செய்து,
பூஜைகளையும் மேற்கொண்டார். அந்த தீர்த்தமே இன்று கோடி தீர்த்தம் என
அழைக்கப்படுகிறது. இது தனுஷ்கோடி தீர்த்தத்திற்கு சமம் என்று ராமர்
கூறியிருக்கிறார்.
இந்த
லிங்கத்திற்கு தேனுபுரீஸ்வரர் என்று பெயர். இந்த மூலவருக்கு வடக்கு
வாயிலில் அமைந்துள்ளவர்தான் விஷ்ணு துர்கை. இந்த துர்க்கை எட்டு கரங்களைக்
கொண்டவர். ஒவ்வொரு கையிலும் ஆயுதம் தாங்கி இருப்பவர். மகிஷாசுரனை
வதைப்பதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரது சக்திகளைக் கொண்டு
உருவானவர் துர்க்கை. துர்க்காமாதாவின் பராக்ரமங்களை சொல்லி முடியாது.
இவரைத் தொழுத பிறகு எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியைத்தான் தரும்.
விஷ்ணு துர்க்கைகளில் தாராளமாக அருள்பாலிப்பவர், இருவர். ஒருவர் வைஷ்ணவி
தேவி. இன்னொருவர் பட்டீஸ்வரத்தில் உறையும் இந்த விஷ்ணு துர்க்கை.
இவர் பாதம் மகிஷாசுரன் மேல் இருக்க, சாந்த ஸ்வரூபிணியாய் சிங்க
வாகனத்தில்
அமர்ந்து பக்தர்கள் வேண்டும் வரத்தை இல்லை என்று தட்டாமல் தருபவர்.
கலியுலகில் நம்மை காக்கும் மாதா. மகாவிஷ்ணு, ராமாவதாரம் எடுத்தபோது இந்த
தேவிக்கு பூஜை புரிந்துள்ளார். வசிஷ்டர் உள்ளிட்ட சப்த ரிஷிகளும், அஷ்டமா
சித்தி பெற்ற சித்தர்களும், ஞான சம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களும்
தொழுது, போற்றி, மகிழ்ந்த மாதா, இந்த துர்க்கை.
சோழ
மன்னர்கள் இந்த துர்க்கை வழிபாடு செய்து பின்னரே போருக்கு செல்வர். சிறு
வியாபாரிகளும், பெரு வணிகர்களும் அவ்வாறே இந்த துர்க்கையை வழிபடுவர்.
நாயக்க வம்சத்தவரும், பல்லவர்களும் வழிபாடு செய்து பலகாரிய சித்திகளை
பெற்றனர் என்கிறது நாடிச்சுவடி.
நவராத்திரியில்
கடைசி நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசை
திதிக்கு பின் நவராத்திரி விசேஷங்கள் ஆரம்பமாகின்றன. இந்த ஒன்பது நாளும்
விரதம் இருந்து காலையில் பால், இளநீர், வாழைப்பழம் உண்டு, மதியம் மிதமான
அரிசி உணவு, இரவு சிற்றுண்டி உண்டு, கோபம், குரோதம், வெறுப்பு முதலான
குணங்களை நீக்கி துர்க்கா பூஜை செய்து, பொம்மை கொலு பூஜையில் கலந்து
கொண்டு, பத்தாம் நாள் விஜயதசமி அன்று எலுமிச்சம்பழ மாலை, எலுமிச்சம்பழ நெய்
தீபம் ஏற்றி, துர்க்கா மாதாவுக்கு மஞ்சள் அல்லது சிவப்பு வஸ்திரம்
சாத்தி, எலுமிச்சை சாதம் படைத்து பக்தருக்கு விநியோகம் செய்து, நோன்பு
இருந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.
திருமணத்
தடைகள் விலகும். தீரா பீடைகளும் தீரும். குடும்பத்தில் எப்படிப்பட்ட பேய்
பிசாசுகள் இருந்தாலும் அவை விலகி ஓடும். தாடகையை ராமர் வதம் செய்ததும்
ராவணனை அழித்ததும் இந்த விஜயதசமி நன் நாளில்தான். துர்க்கா மாதாவை
கொண்டாடி வருபவர்கள் அடைய முடியாத பதவிகளே இல்லை.
சோழர்களும்,
சாளுக்கியர்களும் துர்க்கா தேவியின் ஆயுதங்களை பூஜித்த பின்னரே போருக்கு
செல்வர். நல்ல காரியங்கள் யாவற்றையும் அவர்கள் மனமுவந்து செய்தனர். இதுவே
பின்னாளில் ஆயுதபூஜை என பெயர் பெற்றது. நாம் பயன்படுத்தும் அனைத்து
உபகரணங்களையும் பூஜிக்கும் நிலை உண்டானது. பட்டீஸ்வரத்தில் உறையும்
அஷ்டபுஜ சாந்த ஸ்வரூப விஷ்ணு துர்க்கை, ஸ்ரீராமரால் உருவாக்கப்பட்டது.
இந்த தேவிக்கு முன்னால்தான், ஒரு விஜயதசமி அன்று ‘ப்ரஹ்மரிஷி’ என
விசுவாமித்திரருக்கு, வசிஷ்டர் பட்டம் வழங்கினார் என்கிறது விசுவாமித்திர
நாடி.விஜயதசமி அன்றும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் வரும் ராகு
காலங்களிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மாலை நேரங்களில்,
‘‘யா தேவி ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸமஸ்திதா
யா தேவி ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸமஸ்திதா
யா தேவி ஸர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமோ நமஹ’’
என
108 தரம் சொல்லி விஷ்ணு துர்க்கையை வணங்கலாம். கோயிலுக்கு செல்ல
முடியாதவர்கள் தீபம் ஏற்றியும் மேற்படி சுலோகங்களை உச்சரித்து நலம்
பெறலாம்.
ஸர்வ வ்யாதி நிவாரணம்
ஸர்வ துக்க க்ஷயகரம்
ஸர்வ தோஷ நாசனம்
ஸர்வ ஐஸ்வர்ய ஆகர்ஷணம் நம’’
&என்கிறது விசுவாமித்திர நாடி.
ராமரே
இந்த விஷ்ணு துர்க்கைமுன் அமர்ந்து சண்டிஹோமம் நடத்தியிருக்கிறார்
என்றால் இந்த தலத்தின் பெருமையை, இந்த விஷ்ணு துர்க்கையின் பெருமையை
பேசவும் வேண்டுமோ?
ஒவ்வொருவரும்
பட்டீஸ்வரத்தில் உறையும் தேனுபுரீஸ்வரரையும், சாந்த ஸ்வரூபிண்யையாய்
வீற்றிருக்கும் விஷ்ணு துர்க்கையையும் தரிசித்தல், பெரிய நலன்களை தங்கு
தடையின்றி வழங்கும். அன்னையின் வாகனமான சிங்கம் தனது தலையை இடதுபுறம்
திருப்பி இருப்பது கலியுகத்தில் தீய சக்திகளை நாசம் செய்வதுடன், தனது
பக்தர்களுக்கு அரணாக இருப்பேன் என்று கூறுவதாகவும் சித்தர்கள் பொருள்
கூறியிருக்கிறார்கள்.
அது உண்மைதான் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்கள் அறிவார்கள்.
இத்தலம் கும்பகோணத்திலிருந்து 8கிலோ மீட்டரில் உள்ளது.
No comments:
Post a Comment