Monday, December 5, 2011

லெளகீகம்

Posted On Dec 05,2011,By Muthukumar
`புதிதாய்ப் பிறந்த கன்றுக்குட்டி, தாய் ஊட்டும் காலத்தைத் தவிர மற்றப் போதெல்லாம் வெகு குதூகலத்துடன் துள்ளிக் குதிக்கின்றது.
பெரியதாகி, நுகத்தடியை வைப்பதற்காகக் கழுத்தில் கயிறைக் கட்டியவுடன் அதன் குதூகலங்களெல்லாம் போய் விடுகின்றன. அதன் முகத்தில் துக்கக் குறி தோன்றுகிறது. உடம்பு எலும்பளவாய் மெலிகின்றது.
அதுபோல, உலக விஷயங்களில் ஈடுபடாதிருக்கும் வரையில் ஒரு பையன் கவலையற்றுச் சந்தோஷ சித்தனாகவே இருப்பான். கல்யாணமாகி உலகக் கட்டு ஒன்று ஏற்பட்டுக் குடும்பப் பொறுப்பை வகிக்க வேண்டி வந்ததும், அவனுடைய சந்தோஷங்கள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன.
முகத்தில் துக்கம், துன்பம், கவலை இவற்றைக் குறிக்கும் அடையாளங்கள் தோன்றுகின்றன; காலையில் வீசும் காற்றைப் போல சுயேச்சையாகவும், அன்றலர்ந்த பூவைப்போல புதியதாகவும், அழகிய பனித்துளியைப் போல பரிசுத்தமாகவும், ஆயுள் உள்ளளவும் பாலனாகவே இருப்பவன் எவனோ அவன்தான் பாக்கியவான்.'
- இது பகவான் ராம கிருஷ்ணனரின் அருள் வாக்கு.
வாழ்க்கை ஆறு வயதிலே தொடங்கி, அறுபது வயது வரை போகின்ற தென்றால் ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் ஒவ்வொரு மாற்றமிருக்கிறது.
ஐந்தைந்து வருடங்களில் பாராளுமன்றங்களும், சட்ட சபைகளும், மந்திரி சபைகளும் மட்டும் மாறுவதில்லை; மனிதனுடைய மனதும் உடம்பும் மாறுகின்றன.
ஒவ்வொரு கோடை காலமும், பனிக்காலமும், மழை காலமும் அந்த வித்தியாசத்தை உணர்த்துகின்றன.
>ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, உதக மண்டலத்தின் குளிர் காற்று என் உடம்புக்கு மிகவும் இதமாக இருந்தது. இப்பொழுது சென்னை நகரத்து வாடை கூட ஒத்துக் கொள்வதில்லை.
எட்டு ஆண்டுகளுக்கு முன் நானும், முன்னாள் துணை வேந்தர் தெ.பொ.மீ. அவர்களும், தம்பி எம்.எஸ்.விஸ்வநாதனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. அம்பிகாபதியும் சோவியத் யூனியனுக்குச் சென்றிருந்தோம்.
மாஸ்கோ நகரத்துப் பனி மழையில் `ஓவர் கோட்' இல்லாமல் அலைந்தோம்; பூட்ஸ் இல்லாமல் செருப்புக் காலோடு நடந்தோம்.
நகர மாந்தர் எங்களைப் பார்த்துத் திகைத்தார்கள்.
இப்போது, பனிக்காற்றை சுவாசித்தாலே எனக்கு முகம் வீங்கிக் கொள்கிறது.
காலங்களாலே பருவங்கள் மாறுகின்றன. பருவங்களாலே உடல் மனோநிலைகள் மாறுகின்றன. பொறுப்புகள் வருகின்றன.
நெஞ்சு நிறைய இருந்த நிம்மதி மெது மெதுவாகக் குறைந்து அந்த இடத்தில், துக்கமும் துயரமும் உட்காரத் தொடங்குகின்றன.
குரங்குகள் போல மரங்களில் தாவித் திரிந்த காலம் போய், யானையைப்போல ஒவ்வொரு படிக்கட்டிலும் காலை வைத்து பார்த்து இறங்க வேண்டிய நிலைமை வருகிறது.
இன்பத்துக்காக ஏங்கிய நெஞ்சு, இப்போது நிம்மதிக்காக ஏங்கத் தொடங்குகிறது.
லெளகீகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தனுக்குப் பொறாமையும் குறையத் தொடங்குகிறது.
சலனமும், சபலமும் ஆட்டிப் படைக்கின்றன.
எங்கே நிம்மதி என்று தேடச் சொல்கிறது.
சிலரை வீட்டை விட்டு ஓடச் சொல்கிறது.
சிலரைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
பகவான் ஸ்ரீபரமஹம்சர் வேறொன்றும் கூறுகிறார்:
`சில வேளைகளில் மதப் பற்றுள்ள பக்தர்களுடன் சில லெளகீகர்களும் என்னிடம் வருகின்றனர்.
லெளகீகர்களுக்கு மத விஷயமான சம்பாஷைணைகளில் விருப்பம் இருப்பதில்லை. ஈஸ்வரனைப் பற்றி பக்தர்கள் விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, இந்த லெளகீகர்கள் பொறுமை இல்லாமல் `எப்போது திரும்பிப் போவது? இன்னும் எவ்வளவு நேரம் இங்கு இருக்கப் போகிறீர்கள்?' என்று ரகசியமாகக் கேட்கிறார்கள்;
பக்தர்கள், `கொஞ்சம் பொறு; போய்விடலாம்' என்கிறார்கள். அவர்களோ, `அதுவரை நாங்கள் படகிலே உட்கார்ந்திருக்கிறோம்' என்று போய் விடுகிறார்கள்.
`புறாவின் கழுத்தைத் தொட்டுப் பார்த்தால் அது பொறுக்கித் தின்ற தானியம், அதன் இரைப்பையில் இருக்கும். அது போலவே உலகப் பற்றுள்ளவனுக்கு அவனது விவகாரமே கழுத்தில் ஏறி நின்று கொண்டிருக்கும்.'
கைவிலங்கு, கால்விலங்குகளை மாட்டிக் கொண்ட பிறகு நிம்மதியற்ற நிலை என்பது எல்லாருக்கும் வந்தே தீருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே துன்பங்களை விலக்கிக் கொண்டு வருவது எப்படி என்பதை, `அர்த்தமுள்ள இந்து மதம்' நான்காம் பாகத்தில் சொன்னேன்.
இப்போது லெளகீகர்கள் எந்தெந்த வழியில் நிம்மதியை நாடலாம் என்பதை விவரிக்க வருகிறேன்.

No comments:

Post a Comment