Monday, February 13, 2012

தகுதியானவர்களுக்கு உதவுங்கள்!-பிப். 18 – காரியார் குருபூஜை!

Posted On Feb 13,2012,By Muthukumar
நாம் படிப்பது, கை நிறைய சம்பாதிக்க மட்டுமல்ல, தனக்குப் போக மிஞ்சியதை, தகுதியானவர்களுக்கு தர்மம் செய்வதற்கும் தான்! இதை, தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர், காரியார் எனும் புலவர்.
திருக்கடையூர் எனும் திருத்தலத்தை அறியாதவர்கள் மிகக்குறைவே. அபிராமி பட்டர் என்பவர், இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாள் அபிராமியின் பக்தர், கோவிலில் பணி செய்து வந்தார். ஒரு கட்டத்தில், அம்பாள் மீது கொண்ட பக்தியால் பித்துப் பிடித்தவர் போல் ஆகி விட்டார். அவரது நடவடிக்கையில் சிலர், அதிருப்தி கொண்டனர்.
ஒரு சமயம், சரபோஜி மகாராஜா கோவிலுக்கு வந்தார். அப்போது, அம்பாளின் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டருக்கு, அது பூரண சந்திரன் போல் இருப்பதை உணர்ந்தார். அம்பாளின் அழகில் லயித்துப் போய் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில், சரபோஜி மகாராஜா அங்கு தரிசனத்துக்காக வந்தார். ஒவ்வொரு அமாவாசை திதியன்றும், அவர் அம்பாளை தரிசிக்க வருவது வழக்கம். அவர் வந்ததைக் கவனிக்கவில்லை பட்டர்.
அங்கே இருந்தவர்கள், "நீங்கள் வந்தும், எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருப்பதைக் கவனித்தீர்களா! உங்களுக்கே இந்தக் கதி என்றால், இங்கிருக்கும் மற்றவர்களை இவன் கவனிப்பானா! அம்பாளின் தீவிர பக்தர் போல காட்டிக் கொண்டு, ஒரு பணியும் செய்யாமல் இப்படியே <உட்கார்ந்திருக்கிறான்...' என்றனர்.
பட்டரிடம், "பட்டரே... என்ன செய்கிறீர்கள்? நான் வந்ததைக் கவனிக்கவில்லையா? இன்று என்ன திதி என்று தெரியும் தானே...' என்றார் மகாராஜா.
அம்பாளின் முகத்தை நிலவாகக் கற்பனை செய்து கொண்டிருந்த பட்டர், மன்னர் வந்திருப்பதைப் பார்க்காமலேயே, "இன்று பவுர்ணமி' என்றார். மன்னருக்கு கோபம் வந்து விட்டது.
"இன்று இரவு நிலா வராவிட்டால், உமக்கு தண்டனை அளிப்பேன்...' எனச் சொல்லி, சென்றார். அன்றிரவு, தன் காதணியைக் கழற்றி, வானில் எறிந்து, நிலாவாக ஒளிரச் செய்தாள் அம்பாள்.
இந்தக் கோவிலில் தான் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரில் அருளுகிறார். மார்க்கண்டேயனை, மரணத்தில் இருந்து காப்பாற்ற, எமனை எட்டி உதைத்த ஊர் இது. இந்த சிவனின் அரும்பெரும் பக்தரே காரியார். இவர் பெரும் புலவர். பல சிவத்தலங்களுக்கு திருப்பணி செய்து வந்தார். புதிய கோவில்கள் கட்டவும் ஏற்பாடு செய்தார். அமிர்தகடேஸ்வரர் மீது, அருமையான பாடல்களை இயற்றியவர். இன்னும் பல நூல்களை எழுதிய இவர், சிவனைப் புகழ்ந்து, தன் பெயரால், "காரிக்கோவை' என்ற நூலை எழுதினார்.
அக்காலத்தில், நூல்களை மன்னர்களிடம் வாசித்து காட்டுவது புலவர்களின் வழக்கம். மன்னர்களும் அவற்றுக்காக பரிசுகளை வாரிக் கொடுப்பர். காரியாரும், தன் கோவை நூலை சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் வாசித்துக் காட்டினார். எல்லா நாட்டு மன்னர்களும், அந்நூலில் பொதிந்திருந்த கருத்துக்களை பாராட்டினர்.
ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற வகையில், காரியாருக்கு பொன்னையும், பொருளையும் அந்த மன்னர்கள் வழங்கினர். அவர், தனக்காகவோ, குடும்பத்துக்காகவோ அதைச் செலவழிக்கவில்லை. சிவன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். மேலும், ஏழைகளுக்கும், சிவனடியார்களுக்கும் வழங்கினார்.
தகுதியானவர்களுக்கு செய்யப்படும் தானம், அதைப் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் பயன்படும். ஒரு ஏழை மாணவனுக்கு தானம் செய்தால், அவன் குடும்பம் மட்டுமின்றி, நாட்டுக்கும், அவன் நன்மை செய்ய ஏதுவாக இருக்கும். அடியார்களுக்கு வழங்கினால், கோவில், குளங்கள் நன்மை பெறும். அதன் மூலம் அன்பும், பக்தியும் தழைக்கும்.
இவ்வாறு காலம் முழுக்க, தன் புலமைக்கு கிடைத்த பரிசுகளை, மற்றவர் நலனுக்காகவே செலவழித்தவர் காரியார். அந்த திருமகனாருக்கு மாசி பூராடம் நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை நடத்தப்படும். நாயன்மார் சன்னிதியில் இவர் வீற்றிருப்பார்.
இவரது குருபூஜை நன்னாளில், நாமும் தகுதியானவர்களுக்கு தானம் செய்து, அபிராமி மற்றும் அமிர்தகடேஸ்வரரின் அருளைப் பெறுவோம்.

No comments:

Post a Comment