Tuesday, September 30, 2014

குழந்தைகளைக் காக்கும் தெய்வம் - பெரியாச்சியம்மன்

Posted By Muthukumar,On September 30,2014
பெரியாச்சியம்மன் நம் தமிழ்நாட்டின் காவல் தெய்வங்களில் முக்கிய தெய்வம் ஆகும்.  நம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளிலும் வணங்கி போற்றப்படும் தெய்வம் பெரியாச்சி ஆவாள்.  இவள் சக்தியின் வடிவம்.  தீமையை அழிக்க வந்த காளியின் மறு உருவம் ஆவாள்.  தம்மை அண்டியவர்களின் துயரினை களைந்து அருள் பாலிக்கும் உன்னத தெய்வம் பெரியாச்சியம்மன் ஆவாள்.
பெரியாச்சியம்மனின் தோற்றம் பற்றிய ஒரு கிராமிய கதை ஒன்று உண்டு.  அந்த கதையின் படி பாண்டிய நாட்டினை வல்லாளன் என்ற ஒரு அரசன் ஆண்டு வந்தான்.  அவன் கொடுங்கோல் அரசன்.  அவன் தன் மக்களை துன்புறுத்தி வந்தான்.  தன் நாட்டு மக்களை மட்டுமல்லாமல் முனிவர்களையும், சாதுக்களையும், ரிஷிகளையும் கூட துன்புறுத்தி வந்தான்.  தீமையின் மொத்த உருவமான அந்த அரசன் அரக்கர்களையும் தன் வசம் வைத்திருந்தான்.  அதனால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.
அவனது கொடுமைகளிலிருந்து விடுபட மக்களும், முனிவர்களும் எல்லாம் வல்ல காளி அன்னையை துதித்து வந்தார்கள்.  அரசனின் மனைவியோ அவனின் குணத்திற்கேற்றவாறே தீமையின் உருவமாகவே விளங்கினாள்.  இந்நிலையில் அரசி கருவுற்றாள்.  அவளது கருவில் வளரும் குழந்தையோ உலகத்தினையே அழிக்க வல்ல ஒரு அசுர குழந்தையாகவே கருவில் வளர்ந்து வந்தது.  கொடுங்கோல் அரசன் வல்லாளன் ஒரு முனிவரை துன்புறுத்தும் போது அந்த முனிவர் அரசனுக்கு ஒரு சாபத்தினை அளித்தார்.
அந்த சாபத்தின் படி அவனது குழந்தையின் உடல் இந்த மண்ணில் பட்டால் அரசனும் அவனது நாடும் அழிந்து போகும்.  அரசனின் சாவிற்கு அவனது குழந்தையே வழிகோலும்.  எனவே இதனை தடுக்க அந்த அரசன் வழி தெரியாமல் திண்டாடினான்.  நாளும் ஆயிற்று.  குழந்தை பிறக்கும் காலம் வந்தது.  அரசனின் மனைவிக்கு பிரசவம் பார்க்க மருத்துவச்சியை (ஆச்சி) தேடினான்.  ஆனால் அரசிக்கு பிரசவம் பார்க்க யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் காளிதேவி பெரியாச்சியாக வந்தாள்.  ஆச்சி என்பது பிரசவம் பார்க்கும் வயது முதிர்ந்த மூதாட்டியைக் குறிக்கும் சொல் ஆகும்.  பிரசவம் பார்க்கும் நல்ல திறமையுள்ள பாட்டிகளுக்கு ஆச்சி மார்கள் என்றே பெயர்.  அரசன் பெரியாச்சியாக வந்த காளியின் உதவியை நாடினான்.  அவள் தெய்வம் என்பதை அறியாமல் தன்னுடைய குழந்தை மண்ணில் படாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.  அனைத்தும் அறிந்த பெரியாச்சியோ தமக்கு பெருமளவில் பொன்னும் பொருளும் தர வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்தாள்.
நிபந்தனையை ஏற்ற அரசன் பெரியாச்சியை அரண்மனைக்கு அழைத்து வந்து அரசிக்கு பிரசவம் பார்க்க செய்தான்.  குறிப்பிட்ட நேரம் வரை பிறந்த குழந்தையை கைகளில் ஏந்தியவாறு அரசனை நோக்கி தமக்கு நிபந்தனைப்படி பொன்னும் பொருளும் தர வேண்டினாள் பெரியாச்சி.  ஆணவம் கொண்ட அரசன் பெரியாச்சியை தனது நாட்டின் குடிமக்களில் ஒருத்தி எனவும் தனது அடிமை எனவும் கூறி அவமதித்தான்.  பெரியாச்சியை கொல்ல துணிந்தான்.  கோபம் கொண்ட பெரியாச்சியம்மை தனது சுய உருவத்தினைக் காட்டினாள்.
அரசனை தன் கால்களில் போட்டு மிதித்து கொன்றாள்.  அவனது கொடுமைகளுக்கு துணையிருந்த அரசியை மடியில் கிடத்தி வயிற்றினை கிழித்து கொன்றாள்.  தீமையின் உருவான குழந்தையை கீழே விடாமல் தன் கைகளில் பிடித்திருந்தாள்.  அரசனுக்கு துணையாக இருந்த அரக்கர்களையும் கொன்று நாட்டு மக்களை காப்பாற்றினாள் பெரியாச்சியம்மன்.  வணங்கி துதித்த மக்களைக் கண்ட பெரியாச்சி கோபம் தணிந்து மக்களுக்கு பல வரங்கள் அளித்தாள்.
அதன் படி தான் காளியில் அவதாரம் எனவும், தான் குடி கொள்ளும் ஊரை காப்பாற்றுவதாகவும் வரமளித்தாள்.  அந்த ஊரில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், பிறந்த குழந்தைகளைக் காப்பாற்றுவதாகவும் உறுதியளித்தாள்.
தற்காலத்தில் கருவுற்ற 3ம் மாதத்தில் பெரியாச்சியின் கோவிலில் கர்ப்பிணிகள் வந்து வேண்டிக்கொள்கின்றனர்.  பிரசவம் நடந்து 30 நாட்கள் கழித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும், ஆடி மாதமும் பெரியாச்சியம்மனை வழிபட உகந்தவை.
கிராமங்களுக்கும், நகரத்திற்கும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உன்னத காவல் தெய்வம் பெரியாச்சி என்பதில் சந்தேகம் இல்லை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியாச்சியன்னையின் அருளினைப் பெற குருவரளும், திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.



திருப்பரங்குன்ற வரலாறு


 மதுரை ரயில்நிலையத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். சுப்பிரமணியர் தான் தங்குவதற்கு புனித இடமாக தேர்ந்து எடுத்துக் கொண்ட ஆறு இடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் மகத்துவம் என்ன என்றால் இங்குதான் அவர் இந்திரனின் மகளான தெய்வயானையை மணந்து கொண்டார். பராசர முனிவரின் ஆறு புதல்வர்களும் ஒரு சாபத்தின் விளைவாக சரவணா பொய்கை நதியில் மீனாகப் பிறந்து இருந்தார்கள். அவர்கள் சாப விமோசனம் பெற வேண்டும் என்றால் சுப்பிரமணியரிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறப்பட்டு இருந்தார்கள். அவருடைய தரிசனம் கிடைத்ததும் அவர்கள் சாப விமோசனம் பெறுவார்கள் என்றும் அதனால் அவர் அசுரனான சூரபத்மனை அழித்தப் பிறகு திருப்பரங்குன்றத்துக்கு வருவார் எனத் தெரிந்ததும் அவருடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் அங்கு காத்துக் கிடந்தார்கள்.
தம்முடைய  கடமையான சூரபத்ம சம்ஹாரத்தை திருச்செந்தூரில் முடித்துக் கொண்டப் பிறகு அவனால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு இருந்த தேவர்களை விடுவித்து விட்டு அவர்களுடன் சேர்ந்து சுப்பிரமணியர் திருப்பரங்குன்றத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் அங்கு வந்து சேர்ந்ததும் பராசர முனிவரின்  மைந்தர்கள் அவரை அன்புடன் வரவேற்றார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் அங்கு தங்க முடிவு செய்ததுடன் விஸ்வகர்மாவை அழைத்து தனக்கும் தன்னுடன் வந்துள்ள தேவர்களுக்கும் தங்குவதற்குத் தேவையான அற்புதமான இடத்தை கட்டுமாறு ஆணையிட்டார். அது மட்டும் அல்ல அந்த இடத்தை சுற்றி நல்ல சாலைகளையும் அமைக்குமாறுக் கூறினார்.
தங்களை சூறை ஆடிய சூரபத்மனை சுப்பிரமணியர் அழித்ததின் நன்றிக் கடனாக அவருக்கு தனது மகளான தேவசேனாவை திருமணன் செய்து கொடுக்க இந்திரன் ஆசைப்பட்டார். அங்கு கூடி இருந்த பிரும்மா மற்றும் விஷ்ணு போன்றவர்களிடம்  அதை அவர் தெரிவிக்க அவர்களும் அதை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அது குறித்து அவர்கள் சுப்ரமணியரிடம் கூறியவுடன் அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே இந்திரன் தனது மனைவி இந்திரியாணி மற்றும் மகள் தேவசேனாவை அழைத்து வருமாறு தூதுவர் ஒருவரை அனுப்பினார். திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த திருமணத்திற்கு சிவனும் பார்வதியும் வந்து சுப்ரமணியருக்கு வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்கள். அது முதல் அந்த இடம் புகழ்பெற்ற தலமாயிற்று.
அதற்கு முன்னர் சுப்பிரமணியர் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும்  சுந்தரவல்லியும் தங்களுக்கு சுப்பிரமணியருடன் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டு சரவணா பொய்கைக்கு வந்து தவம் இருந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அமிருதவல்லியிடம்  ''நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன்' என்றார். அது போலவே இளையவளான சுந்தரவல்லிக்கும் காட்சி தந்தார். அவளும் சிவ முனி என்ற முனிவரின் மகளாகப் பிறந்து நம்பி என்ற வேடனால் வளர்க்கப்பட்டு சுப்ரமணியரை மணந்து கொண்டார்.
அமிருதவல்லி ஒரு சிறிய பெண்ணாக வடிவெடுத்து மேரு மலையில் இருந்த இந்திரனிடம் சென்று 'நான் மகா விஷ்ணுவின் மகள் ஆவேன். ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் உங்களிடம் தந்து உள்ளார் என்பதினால் இங்கு வந்தேன் என்றாள். அதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் யானை ஐராவதரை வரவழைத்து அந்தக் குழந்தையைப் பாதுகாக்குமாறுக் கூறினார். அந்த யானையும் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவளை எடுத்து வளர்த்தார். அதனால்தான்  யானையினால் வளர்க்கப்பட்ட அவள் தெய்வ யானை  என்றப  பெயரைப் பெற்றாள். அவளுக்கு திருமண வயது ஆயிற்று. சூரபத்மனை அழித்துவிட்டு சுப்பிரமணியர் திரும்பியதும் அவருடன் அவளுக்கும் திருமணம் ஆயிற்று.



எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

Posted By Muthukumar,On September 30



பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது.  உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும்.  இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.  அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.  எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் /  தேவதைகள்:-
·                     அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இது மிகவும் நன்மை பயக்கும்.  குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும்.  குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.  குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
·                     அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இதுவும் நன்மை பயக்கும்.  நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே.  குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே. 
·                     எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம்.  முழு முதற் கடவுள் இவரே.  இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.  காரியசித்தி உண்டாக்குபவர் இவரே.  விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே.  நல்வழி காட்டுபவரும் இவரே.
·                     குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம்.  இது குழந்தை வரம் தரும்.  குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  நல்ல குழந்தைகள் பிறக்கும்.  பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
·                     ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும்அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
·                     மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும்.  திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும்.  இல்லறம் நல்லறமாக நடக்கும்.
·                     அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  நாம்  அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர்.  தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
·                     சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.   சிவசக்தி கலப்பே உலகம்.  சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை.  சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.  எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
·                     ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.  இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
·                     குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.  இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும்.  குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
·                     தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.  பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
·                     ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே.  பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர்.  அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
·                     லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் திருமகளின் அருள் கிட்டும்.  நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
·                     சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இது சிவசக்தி அருளைத் தரும்.  16 பேறுகளும் கிட்டும்.  நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும்.  கர்மவினைகள் தொலையும்.  மாயை விலகும்.  முக்தி கிட்டும்.
·                     ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.  இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும்.  கல்வி ஞானம் கிட்டும்.  ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே.  கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
·                     கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே.  இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.  நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
·                     லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.  குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை.  இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
·                     அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.  இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.  மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
·                     துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.  இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.  கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.  செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.  வியாபாரம் பெருகும்.
·                     அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது.  இதன் மூலம் வறுமை அகலும்.  பசி, பட்டினி, பஞ்சம் தீரும்.  வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
·                     சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் குருவருள் வந்து சேரும்.  தோஷங்கள் விலகும்.  கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும்.  வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.
எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன். 


Friday, September 26, 2014

நவாவரண பூஜை

Posted By Muthukumar On September 26,2014.
நவாவரண பூஜை அறிந்து கொள்ளுங்கள்!!!
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.
இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.
நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.
இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில்
படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று
விட்டால் பாக்கிய சாலிதான்.

நல்லருள் பெருகும் நவராத்திரி!


கில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன் மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சம் அற்புதமான காலம்தான் நவராத்திரி. 
நவராத்திரி விரத காலம்…
ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், ஸ்ரீவியாச முனிவரிடம் நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் விபரங்களையும் கேட்கிறான் ஜனமஜேயன் (நவராத்ரே து ஸம்ப்ராப்தே கிம் கர்தவ்யம் த்விஜோத்தம…). அதற்கு வியாச மகரிஷி, ‘நவராத்திரி இரண்டு வகை. ஒன்று வஸந்த ருதுக் காலத்தில் (சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் வஸந்த நவராத்திரி. மற்றொன்று சரத் காலத்தில் (புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் சரத் நவராத்திரி’ என்று விளக்குகிறார்.
இவை இரண்டும் எமதருமனின் இரண்டு கோரைப் பற்கள் போன்றவை என்பதால், இந்தக் காலங்களில் அனைத்து பிராணிகளுக்கும் தீயவை ஏற்பட வாய்ப்பு உண்டு. நோய்கள், இயற்கை சீற்றங்கள், மனக் குழப்பங்கள் போன்றவையும் ஏற்படலாம். ஆகவே இந்த காலங்களில் புத்திமான்களும், நல்லதையே விரும்புபவர்களும் சண்டிதேவியை ஆராதனம் செய்ய வேண்டும் என்று வியாசர் கூறுகிறார்.
‘கலௌ சண்டி விநாயகௌ’ என்ற வாக்கின்படி இந்தக் கலி காலத்தில், நமது இன்னல்கள் யாவற்றையும் விலக்கி நன்மை களைப் பெற்றிட விநாயகர் வழிபாடும், சண்டிகையின் வழிபாடும் நமக்கு உதவும் என்பது முன்னோர் வாக்கு.
அருள் தரும் நவராத்திரி!
‘நவ’ எனில் ஒன்பது; ‘ராத்ரீ’ எனில் இரவு. ஆக ‘நவ ராத்ரீ’ (நவ ராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள். ‘நவ’ எனில் ‘புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதுமட்டுமா? நவகிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகையை வழிபடுதல் வேண்டும்.
அவள்தானே உலகுக்கெல்லாம் மூல கரு (‘விச்வஸ்ய பீஜம்’). அவளை வழிபடுவதால், நம் உலகம் என்றில்லை; இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம்.
விரத நியதிகள்…
ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் துவக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம்.
நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.
புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு  முதல் நாள், அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.
பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.
பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்குத் தயாராக வேண்டும். (இயன்ற வரையில் தகுந்த அந்தணர்களை வரவழைத்து, வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).
பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்குசக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.
”தாயே… உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப் போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொண்டு
பூஜிக்க வேண்டும். பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9 நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.
9 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?
சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.
எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.
விரிவான பூஜை இயலாதெனில்…
சரி… இந்த விரதத்தை சந்தனம், புஷ்பம், தூபதீபம், நைவேத்தியம் கூடிய உபசாரங்களுடன் தான் ஆராதிக்க வேண்டுமா? இதுபோன்று செய்ய முடியாதவர்களும் இந்த விரதத்தில் பங்குகொள்ள ஏதேனும் வழி உண்டா?
இதற்கு  மிக அருமையாக பதில் சொல்கிறது பவிஷ்ய புராணம். ‘இதுபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவும் நீரும் அளித்தாலே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மையான பக்தியுடன், ‘அம்மா என்னைக் காப்பாற்று’ என்று சக்தியைச் சரணடைந்தாலே போதும்; நாம் கேட்டதை மட்டுமின்றி, நமக்கு நன்மையானவை அனைத்தையும் அளிக்க எல்லாம் வல்ல அன்னை காத்துக் கொண்டிருக்கிறாள்’ என்கிறது அந்த புராணம்.
உலகில் உயர்ந்த தெய்வம் தாய்தானே! அந்த தாய் என்ற தெய்வத்துக்கு எல்லாம் மூலமான தாயை (”யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”) வணங்கித் தொழுதல் நமது கடமை அல்லவா!
நவராத்திரி விரத பலன்…
நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.
தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.
படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.
ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை… குமாரி முதலாக 9 வடிவங்களாக பாவித்து வழிபடுவதும் உண்டு.

Monday, September 22, 2014

புரட்டாசியில்… சிவ விரதம்

Posted By Muthukumar On September 22
புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதும், விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது மரபு என்பதும் நமக்கெல்லாம் தெரியும். அதேபோல, புரட்டாசி மாதம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது பற்றியும் ஒரு புராண நிகழ்ச்சி உண்டு.
விநாயகப் பெருமானைக் குறித்து கடுந்தவம் இயற்றிய கிருச்சமத முனிவர், விநாயகப் பெருமானின் தரிசனமும், பல வரங்களும் பெற்றார். அந்த வரங்களில் ஒன்றாக, சிவபெருமானைத் தவிர யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு வலிமை கொண்ட மகன் ஒருவனையும் தம் யோக சக்தியினால் பெற்றார்.
பலிஎன்ற பெயர் கொண்ட அவன், தன் தந்தையைப் போலவே விநாயகரிடம் அளவற்ற பக்தி கொண்டு விளங்கினான். நெடுந்தவம் புரிந்து விநாயகரின் தரிசனம் பெற்ற பலி, ‘மூவுலகங்களையும் தான் அடிமைப்படுத்தி ஆள வேண்டும்என்று வரம் கேட்டுப் பெற்றான். கணபதிக் கடவுளும் அப்படியே அருள் புரிந்ததுடன், அவனுக்கு இரும்பு, வெள்ளி, பொன் ஆகிய மூன்று உலோகங்களால் ஆன கோட்டையையும் கொடுத்து அருளினார்.
அதே நேரத்தில், ”பெற்ற வரங்களை நீ தவறாகப் பயன்படுத்தினால், சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால் உன்னுடைய கோட்டைகள் அழியும். அப்போதே, நீ எம்முடைய பக்தன் என்பதாலும், சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்படுவதாலும் உனக்கு வீடுபேறு உண்டாகும்என்றும் வரம் தந்து அருளினார்.
வரம் பெற்ற பலி, மூவுலகங்களையும் தன் வசப்படுத்தியதுடன், தேவர்கள் யாவரையும் பல வழிகளிலும் துன்புறுத்தவே, ஓடி ஒளிந்த தேவர்கள், நாரதரிடம் சென்று வழி கேட்டனர். அவர் சொல்லியபடியே விநாயகரைப் பிரார்த்தித்துக் கொண்டு சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர்.
தேவர்களின் துன்பத்தை நீக்கிட திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், திரிபுரனுடன் போருக்குச் செல்ல ஒரு காரணம் வேண்டும் அல்லவா? அதற்கான அவசியத்தை விநாயகர் ஏற்படுத்தினார். வேதியராக வேடம் கொண்டு திரிபுரனிடம் சென்ற விநாயகர், திருக்கயிலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகரின் திருவுருவம் தமக்கு வேண்டும் என்று கேட்டார். அந்தண வடிவில் வந்த விநாயகரின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த திரிபுரன், திருக்கயிலைக்கு தூதர்களை அனுப்பி வைத்தான்.
திரிபுரனின் தூதர்களிடம் சிந்தாமணி கணபதியைத் தர மறுத்த  சிவபெருமான், முடிந்தால் தன்னுடன் போரிட்டு வென்றால், சிந்தாமணி கணபதியை எடுத்துச் செல்லலாம் என்று கூறிவிட்டார். திரும்பி வந்த தூதர்களின் மூலம் நடந்ததைத் தெரிந்துகொண்ட திரிபுரன், படைகளைத் திரட்டிக்கொண்டு சிவபெருமானுடன் போருக்குச் சென்றான்.
நீண்ட நாட்கள் நடைபெற்ற போரின் முடிவில், சிவபெருமான் தம்முடைய திருக்கரத்தில் இருந்த கணையைச் செலுத்தி திரிபுரனை சம்ஹாரம் செய்தார். ஏவிய கணை திரும்பவும் சிவபெருமானின் திருக்கரத்தை அடைவதற்கு முன்பாகவே திரிபுரன் சிவபெருமானை திருவடிகளில் ஒன்றிக் கலந்தான்.
திரிபுரன் வீடுபேறடைந்த திருநாள்
இப்படி, சிவபெருமானின் திருக்கரங்களால் திரிபுரன் வீடுபேறு அடைந்தது புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று எல்லோரும் அழைக்கிறார்கள்.
ஆண்டுதோறும் இந்தத் திருநாளில், சிவபிரானுக்குத் திருவிழா செய்வதாலும், அவரவர்களுடைய ஆற்றலுக்கேற்றவாறு வழிபாடு முதலியவற்றை செய்வதாலும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவதாலும் அப்படிச் செய்பவர்களை எப்பொழுதும் துன்பம் என்பதே நெருங்காது.
திரிபுரனால் தேவர்கள் துன்பப்பட்டது போன்ற நிலைமை நமக்கு ஏற்படக் கூடாது என்றால், புரட்டாசி மாதம் பெளர்ணமி தினத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட வேண்டும். அன்றைய தினம் காலையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நடுப்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா கோரிக்கைகளும் நிறைவேறப் பெறலாம்.